பாகம் 28, 29, & 30

  பாகம்28 💗.


          வன்காட்டில்  தவமிருக்கும் வெண் தாடி வேந்தர்களும் இவ்வேங்கையின் வெளிவரவை எம் காதில் ஊட்டியதை காலம் தாழ்த்தாது எடுத்துரைத்தேன் இக்கலிகாலம். இதை ஞானியர் அறிந்ததனால் என்ன பயன். உனை நினைந்த நலிந்தோரும் அறியட்டுமெனும் நப்பாசை கொண்டு நவின்றேனெமக்கு நலமருள்வாய் பரம்பொருளே. இதை காரிருள் கண்மறைத்த மானிடர் நம்பாரென்பதனை நன்கறிந்தும் இசைக்க யாம் இசைந்தேனே அண்டமெலாம் ஆளுகின்ற ஆதிமூல பரம்பொருளே.

         திரைச்சீலையிட்டே தீபத்தை மறைத்த மூடரிவர் கறியுடல் தழல் தீக்கிரையாகி கரியாய் உருவெடுக்க காணுகின்றேன்.  இவ்வலைகடலை அடக்க வந்து அலைக்குள் புதைவாரென்பதை புரிந்ததனால் உரைக்க வந்தேன். வான்தமிழன் வன்மைக்கு நீ வரமளித்தருள் புரிவாய் என்று நம்பியே தொன்மையர் திக்கற்ற காட்டினிலே தீவளர்த்து துறவு பூண்டு வேண்டுவதை யாம் அறிந்து நினைவுகூர்ந்தோம். எல்லாமறிந்தும் ஏனிப்பாசாங்கெம் பரம்பொருளே.

             குருதி கொட்டும் கொடும் நிதி ஈட்டி குலம் தழைக்க குவித்தாரைக்கண்டேன். மலமுண்ணும் ஏனமும் மறுமையில் நலம் பெற்றுய்வடையினும் மலமகற்றா நீசரிவர் மீளா நரகுலகில் மிதியடி போல் கதியிழந்து சீரழிவரென்பதனை யாமறிவோமே எம்மெண்ணமெலாம் இனித்தெமை யாளும் பரம்பொருளே .

     

          பாகம் 30💗 


எரித்த வறுமையொடு தஞ்சமிலா தருமியாய் தவம் பூண திருத்தலமாம் திருமலையுள் தரித்த கந்தலுமாய் புகுந்தானெம் அறநெறியன். ஆங்கே முப்புரி தரித்தோரிவன் அடையாளம் கண்டிவனை கண்கலங்க வைத்ததனால் பெருத்த நிதி குவித்த பெருமாளும்  பெறும் பிச்சை குறையலானான். 

    பழுத்த பழமுண்டு பாலூட்டும் பறவையினால் ஈசன் தொடுத்த போர் மூலம் மூளும் கொழுத்த நோயொன்று கொலை நடுங்க வைத்ததனால் மாலவன் முகம் காண மாந்தரஞ்சினாலும்  கொடுமாநிரையஞ்சாது மாடவீதி சுற்றியதை விளைந்த விதியாய் யாம் கண்டோம். வினையறுக்க இயலாமல் பாம்பணையில் பள்ளிகொள் நாதன் பரிதவிக்கும் பாட்டை பாடவந்தேன் பரம்பொருளே பாழ் மரம் போல் யாம் புலம்ப செவிசாய்ப்பாய்.

        மறலி அழைப்புக்கு மானிடர் மறுப்பர்.  வையத்துறவின் பாசம் துறந்து நமன் வீசும் பாசத்திற்கேங்கும் துறவியை அழையாது தொலையும் நமனை வைந்தே ஐயனலைவதை கண்டு அடியேன் விழிவழிவதேனோ? எம்மேலுன் விழி திறந்தேது பயன் ? எம்மையன் மேல் கருணை பொழிந்து இவ்வையம் வளம்பட வைப்பாய் வானோர் நலம் பேணும் பரம்பொருளே.

           பொல்வழி புலனின்ப தீநெறியர் புலாலுண்ணும் குருதிவெறியர் பெண்பாவம் தேடிக் குவித்த பெரும்பாவியரென எவருமே இனி உய்ய வழியின்றி மண்ணில் புதைந்து மறுமையிலா நரகிற் புகுவதுறுதியாய் கண்டேன் பரம்பொருளே. 

             அறத்திற்கு அயலானோர்க்கிவன் தோற்றம் தெரியாதே. சிவத்திற்குறைவிடமாம் உள்ளொளிக் கண் திறவாத மடமாந்தர்களறியாரே. மானார்மேல் மையலுற்றாரிவன் மேன்மையறியாரே. மதி கெட்ட கட்காதலர் நெருங்கா கற்பகமிவன்  பொற்பாதம் ஒற்றி எம்போன்றோர் பூச்சொரிவோம் பரம்பொருளே .

Comments

Popular posts from this blog

பாகம் 124, 125 & 126ஆருக்குமஞ்சானவன் ஆல்லிப்பெருவிரல் வலதெம் அன்னை நிலம் நோக்க அகத்தலம் நோக்கின் முன்னழகு முகத்தோற்றத்தொடு முறக்காதுடன் இருகோடுடை எழில் களபமங்கு செங்குத்து பாகையில் சரிபாதி சாய்வினில் அங்குற்று அடியேன் கண்பறிக்குமே.

பாகம் 118, 119 & 120 ஒளிரும் கல்கி கனலென காணா அறம் பாராட்டி கண்ணன் முன்னம் காலூன்றிய கைக்கோடரி காவலன் தோன்றி கடை வரை கரம் தந்து செங்கோல் ஏற்க காரணமாவான் கடுந்தவம் பூண்டு. நீணிலம் காக்க நெஞ்சம் மிஞ்சும் நன்னெறியோடு நிலையா உலகில் நிலைக்கும் நீதி.

பாகம் 133 மலைவாழை மணக்கும் மணவீடே சிறக்கும் மகிழ்மண் செழிக்கும் கதலி கண் சிமிட்டி கரை எல்லாம் சிரிக்கும் நுரை ததும்ப குடகுக் குய்யமீன்ற புனல் குழலி புறப்பட்டு பொற்புடை சிலம்புச் செல்வி பூத்த புகாரை தொடும் இடையில் பொங்கும் வளம் கொழித்து புன்னகைக்கும் பழம் பதிக்குள் தன் பொற்கரத்தால் அயலார் அகம் குளிர அன்னமூட்டி அன்றாடம் குடி நகர்த்தும் அருள் அம்பையின் கொற்றவன் வீழ்ந்தும் குணம் வீழாது கொலுவுற்று கொள்கையால் தனிநின்று இருகண் மணிகளது இடர் நீக்கி இருள் தீண்டா திருக்கரம் தழுவும் சுடரொளியை வாதை தரும் வல்வினை வந்தணைத்திடாது ஈரிமையாய் அணைத்து இதயம் ஏற்கா இழியோர் நடுவினிலே பரிதியை ஈன்ற பைம்பொன்னன்னைக்கு இளமலர் குடத்துள் இட்ட விளக்காகி இறையருள் பெற்று இல்லறம் மலர்ந்திடுமே.