பாகம் 34, 35 & 36
பாகம் 34💗
அரசனாய் ஆலயம் பூண்ட அங்கதமுறையூரில் அமைந்ததொரு வில் தூங்கும் வன்புயத்து மன்னன் அவதார புதூரில் புகுந்தே பெற்றோருடன் பெருவாழ்வு கண்டானிவன். நற்கலைக்கூடம் நுழையாமல் நாற்கலையும் கற்று நடமாடும் பல்கலை மேதையாகினான். இங்கிவனகவை பதினேழில் துவங்கி இணையுடனிணையும் நாள் வரை கழித்திட்டு பணிக்காய் பயணித்து நெய்தல் நிலம் சென்று நீந்தி பிழைத்ததெல்லாம் இவன் வகுத்த விதியல்ல அச்சிவன் வகுத்த விதியன்றோ.
விண்ணவரே வியத்தகு வண்ணம் இவ்வேந்தனே வந்தாளுவான். கண்டுகொள்வாய் கண்டகர் இனமழித்து விண்டுலகாய் புவியை எழுப்ப இவனன்றி எவர் தான் காவல் தெய்வமென மண்டுகளே அறிந்திடுக. மன்னர் மன்னவனிவன்தான் தெரிந்திடுக.
அரவம் பொதிந்த அரனார் கழுத்தும் உரகம் பதிந்த சிவனார் சிரசும் பாம்பை சுற்றிய சாம்பவி இடுப்பையொத்த இன்புறு உடுக்கையும் சாம்பனடிக்கும் தாளமுமென்னை பரவசமூட்டி பக்தியிலாழ்த்தி பிறப்பை கொய்ய பெரும் பேறடைந்தேன். பிழையே இல்லா பரம்பொருளுன்னை முக்கடலூரன் முளைவிட்டு எரிய திக்கு எங்கும் தீமையை அகற்ற பொற்பதம் கழுவி போற்றிடுவது எம் கடனாக யாம் உனை வேண்ட எல்லாம் வல்ல உன் தயை செய்வாய்.
நடம்புரி திடனாரைச் சார்ந்தே நின்ற வம்பிலா இறை தெம்பிலா தோற்றத்தானிவன் தீதுற நின்ற நிலம் கம்புறங்கும் கடலடி மூன்றின் சங்கம நகரியின் மன்னனழியா வண்ணம் உறைந்துலாவிய காந்த மேனியள் கந்த மேவிய கன்னியள் இவனுக்கருளக் கண்டேன்.
பாகம் 35💗
உள்ளம் உறவாட உள்ளங்கையே பேசும் காலமொன்றை வையம் முழுக்க காண்பரே. ஐயன் அசைவினைக் கண்டறிந்திவன் மெய் நகரும் சேதி சொல்லி பொய்யர் சூழ்ந்தே வருவரே.
ஆக்கம் கொண்டாயிரம் காதம் கடந்து கண்டம் பிரிந்து அண்டம் பறந்த தீரனுரையினை தாழ் புவியோர் கேட்பரே.
மெய்யுள் புதைந்த சிலந்தி வலைகளறுபடாது கயவனொருவன் கையிலடங்குமே. ஐயனை விடுத்து அவனியிலனைவரும் அப்பொய்யனுக்கடிமையாய் புகும் நிலைவருமே. பொய்க்கும் எம்மெய்யை இயக்கி மெய்யுணர்த்தும் பரம்பொருளே .
ஒளி பற்றாமல் பேரொளி உணரா அரசன் அனல் சக்தி வேண்டி தம் குடிகள் அழிவாரென்றப்போதறிவிலியாய் வேற்றரசுடன் கூடா நட்பு கொள்வானறிவாய். இதனால் விழிக்குள் வீழா தணல்கதிர் களஞ்சியமைப்பான் தென்முனை கூடுமொரு குளத்தருகே. அதை சப்பை மூக்குடையோர் மோப்பமெடுத்து மொத்தம் சிதைப்பதனால் மூர்ச்சையற்றழிவது முப்பது காதம் சுற்றிய மண மைந்தர்களென்ற விதியெழுதி தந்தாயே பரம்பொருளே.
மூலிகை நறை வீசுமகத்திய நெடுவரையொன்றில் அமரராய் அமர்ந்திருந்த குடாரிக்கர மாமுனியரெழுந்தே எம்மையனை இயக்கி எண்ணிலா பேரருள் புரியவாரே. பிறவிப்பாவமிலாரை பிரித்தனுப்பும் நமனுக்கே நீ ஆணையிடும் காட்சியினை கண்டே எம்மெய் சிலிர்த்தேன் காணக்கிடையா பரம்பொருளே.
பாகம் 36💗
அரிவையர் ஆயிழை போயிற் இழப்பன்று அதை எளிமையிற் ஈட்டலாம் மீட்டலாம் பரம்பொருளே. அவர்க்கருளாய் இயைந்த வாலிழையாம் காப்பு அறங்கொன்ற காமுக வேட்டையரவர் தம் கோட்டை முன்னர் பூட்டப்பட்டே கொடுஞ் சிரமறுக்கும் பாட்டை மறம் மாறா மாவேளிவன் புகழை மறைமுழுக்க பாட்டாய் கேட்டேன். அவனிவனென அகவிழி ஒளிபாய்ச்சக் கண்டேனிவன் முக்கடல் முத்தும் நெய்தல் நிலமயிலின் மகவாய் யாம் பேறாய் பெற்றோம் என சொன்னால் சூதுடையோர் மறுதலித்தே மெய்யனிங்கில்லை. அம்மேன்மகன் பொன்னி வளநாட்டில் பொங்கி வருவானென பொய் பகர்ந்து நடுமாந்தர் மனம் மாற்றி நன்முனி போல் நாடகமைத்திடுவர். வேழங்கள் போரடித்த சோழநாட்டு சூத்திரர்கள் சொல்லிற் பொய்யுண்டே . அவரனைத்தும் சூனியர் நீட்டிய பாவியர் பொருளீட்டி சூளுரையாற்றி சூழ்ச்சிகள் பலபுரிந்து ஐயன் இருப்பிடத்தை அங்கென்றே ஆருடமமைக்க அரும்பாடுபடுவாரே. எம்மெய்யன் எழும் வரை இவ்வெய்யர் வாய் பெய்யும் பொய்யுரையை வையம் நம்புவதை கண்ட வானோர் நகைப்பிற்கென் சொல்வேன் பரம்பொருளே.
மலர்முகத்தான் பாராள பலகாலமில்லை என்றேனும் பேரருள் கிட்டிவிட்டால் பெட்டகத்துள் துயில வைத்த சீரார் மாணிக்கம் செவ்வரமாய் வெளி வந்து திக்கெலாம் ஒளிவீச ஈரேழுலகினரும் நெடுங்காலம் ஆவலுடன் இருப்பதனை பாராது இருக்கலாமோ பரம்பொருளே. போதாத காலமென தான் கருதி புழுதிபட பாரிசாத மலர்தன்னை பாழும் வெயில் எரிக்கலாமோ. நீராரும் ஆழிசூழ் நெடு நிலம் ஆறாது வடித்த கண்ணீர் அகிலத்தை நித்தம் நித்தம் கருக்கலாமோ. நீடூழிவாழ இந்நெடுநோய்க்கு மருந்தாவாய் பரம்பொருளே .
Comments
Post a Comment