பாகம் 37, 38 & 39
பாகம் 38 💗
பைந்தமிழ் நாக்களிப்பேனென்றே பாரதியும் வாக்களித்தாள். இதை ஆக்கமுடன் பாடிட எமக்கும் அருள் மழை பொழிந்திட்டாய். பார்த்தனுக்குச் சாரதியாய் முன்பிவனே பாரதத்தில் போர் முடித்தான். முடிந்த போரின் முன்பகை தான் தீராமல் தொடுத்த போராய் இப்பிறவி தொடர்கிறது. இடர்தரவே அரக்கயினம் இவன் பின்னே வருகிறதாய் மாயைக்குள் மீளாது புரள்கிறது. பிறப்பறியா பேதையாக பிறப்பகற்ற முடியாமல் சிறப்புடனே கடனாற்றி இப்பிறவிப் பயனடைந்திடுமே. மருளுற்று மாந்தர் கூட்டம் இருள் சூழ்ந்தும் நீங்கா நிழல் போல் மன்னவனை தொடர்ந்தாலும் இருளகற்ற இவனன்றி யாருமிங்கே வரமாட்டார் துகளுக்கும் துயில் கொள்ளும் தூமணியாம் பரம்பொருளே.
இல்லாதார் உயர்திடுவார். இருப்போர் கைகுறைந்திடுமே. வல்லோர்கள் வகையற்று வாழ்வதனால் வந்துதித்தான் என்பெருமான் வரமுனியாய். பொல்லாதார் புடைசூழ கொக்கரித்து புண்ணியம் மறுப்பதாலே நல்லோர்க்கு என்றுமிவன் நாடி நலம்புரிந்து சொல்லொண்ணா அருள் புரிவானென்பதனை சொல்லாமல் சொல்லவந்தேன் சூரியனை விழியாக்கி சுட்டெரிக்கும் சுடர்விளக்கே.
புல்லர்க்கு புரியாத புதிர் ஆவான். பொய்சாட்சி பாதகர் பொசுங்க தீக்கதிராவான். நல்லோர்கள் நாசுவைக்கு கரும்பாவான். நாடே வளம்பொங்க அருள் பொழிவான். பொல்லுலகில் தவமகற்றி இடரமைக்கும் புலால் தவிர்த்தோர் அருளாளர். அதன் புண்ணியங்கள் வீண்போகா தென்பதனை இவன் வந்திங்கே வாழ்த்துரைப்பான் பரம்பொருளே. பொன்னுலகில் புவிமாந்தர் புகும்காலம் தொலைவில்லை என்பதனை எம்போன்றோர் அருள்வாக்காய் பாடவந்தோம் இதற்கெமக்கருள் புரிக பரம்பொருளே
ஊயிரனைத்தும் ஊக்கமுடன் நடமாட ஆக்கமுடன் வழிசெய்வான் ஐயன் என்பதனை அகிலத்தார் அறிந்திடவே அடியேனும் அருள் வாக்கு பொழிந்திட்டேன். அறிந்திடுக இவன் குறித்த அத்தனையும் பொதிந்திடாது பகர்திடுக பாரெல்லாம் நலம் பெறட்டும். இவன் பாதம் தொடர்கின்ற அறமைந்தர் பெறும்பேறடைவாரென உறுதிபட உரைக்கவந்தேன் இம்மையிலும் எம்மையிலும் எமையாளும் பரம்பொருளே .
ஈரேழுலகாளும் எம்பெருமானுலகாள பாரில் உதித்தொரு பண்பையனவன் தென்குமரி திரையாழிகள் மூன்றாய் தழுவும் தேவிபாதத்திற்கு இரு காதம் தொலைவிற் குடவூரில் கலையாவரம் பெற்ற கருங்கல்லாய் கரு இறங்கி அழியா அறனார் கனியுமிடம் மலைநாட்டெல்லை எனும் அந்தரங்கமறிந்து அறம்பாடும் எமை பித்தனென்றே பெயரிட்டு நோக்கும்
பீடைக் கண்ணிற்கு பிடிபடாதென்பதனை நெஞ்சார நீயறிவாய் துஞ்சா பரம்பொருளே.
பாகம் 39💗
அவதாரம் தான் என்ற ஐயமொன்று ஐயனுக்கும் உதிக்காமல் இருந்திடுமோ. சிவனாரும் பரிந்துரைத்த சீடனுக்கே உரித்தான தேவனிவன் அடையாளம் இருப்பதனால் அதிர்ந்தே போவான்.
உமையாளே உயிராக உடனிருந்து காப்பதனால் உதிரமுதிராமல் உயிரோடு உலவுவதால் அவதாரம் தான் என்ற ஐயமொன்று ஐயனுக்கும் உதிக்காமல் இருந்திடுமோ.
தன்னைப் போல் பலருண்டு தரணியிலே என்றெண்ணி தன்னிலை யுணராது குன்றி நிற்கும் ஐயனிவனை
அடையாளம் காணவேண்டி அடியார்கள் ஆண்டுபல நூறாக தவமிருக்க அறனுக்கு முரணான அநீதி ஆளுநர்கள் எளிதிலிவன் இருப்பிடத்தை எட்டியே இன்னுயிரை எடுப்பதற்கு சதிவேலை பலசெய்து பலவாறு ஓய்ந்திடுவர்.
நிலையாழி அரிதுயிலும் அலையாளி அடி வருடி நிதியன்னை துணையிருக்க நதிபொங்கும் தலையாளி மார் தழுவி எம் மலையன்னை அணைத்திருக்க சிலையாக புலனடக்கி சீர்வேந்தன் மனைவிலக்கி நெடுமரமாய் நின்றதனை நெஞ்சீரம் நிலை கொண்ட நன்மாந்தர் அறியாரே. இணை வேண்டா துணை வேண்டாமென இல்வாழ்கை உதறியவன் இங்கெம்மை காப்பதற்கு இழிபிறப்பில் துடிப்பானேன்.
புவிதோறும் பொறிபட்ட புழு போலே புண்பட்ட நல்லோர்கள் அழும் ஈரம் அய்யனிவன் பூம்பாதம் நனைப்பானேன். பூமடந்தை நிலை குலைந்து பொல்லார் சுமை தாங்க ஒண்ணா அல்லல் பட்டழுவானேன். நிலமென்னும் நேரிழை பெருவெடிப்பை பிறப்பித்து அறம் கொன்றோர் அனைவரையும் உள்ளிழுத்தடக்கிடவே வரம் தர நீ வழிவகுப்பாய் மாசற்றோர் குரலுக்கு மனம் சாய்க்கும் மாமணியே. காசற்றோர் மீதினிலே காசினிக்கு கருணையிலா காலமிது கலிகாலம். ஆசுடையோர் அதிகரித்து ஆநீதியை அறுவடையாய் அடைவதனை தூசாக கருதியினி துஞ்சியே கடந்து சொல்ல அறம் பாடி சித்தனிவன் ஆட்படாது இதை பாசாங்காய் சொல்லவில்லை. பல்முறை நான் கோரிவிட்டேன். எம்மையனுக்கு வரம்பொழிந்து அரங்கேற்று ஒளி விளக்கே. வானவர்க்கு வழிகாட்டும் மேதகு பரம்பொருளே மேதினியில் மணம் புரிந்தும் மனமிணையான் மனை துறந்து தனிமரமாய் பிறப்பெடுத்தான். உனை நினைந்தே உருவெடுத்தான். உன்னடி பணிந்தோர்க்குதவாமல் இன்னலில் ஆழ்த்தலாமோ. முரண்பட்டு முன்னின்று திறனாய் ஏய்க்கலாமா. வரம் தருவாய் வான் அமுதே. சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன். சீக்கிரமே அருளிடுவாய். புவிதனில் புறம் பேசா அறவாணர் பொற்பாதம் பணிந்தேன் யான். இப்புவியெலாம் வளம் தர உன் வானோர்கள் துணையுண்டே வல்லருளா வரம் பொழிவாய்.
Comments
Post a Comment