பாகம் 40, 41 & 42
பாகம் 40💗
விண்ணாழி பொங்கிடுமே. விழும் மாரி அம்பு தைக்கும் செழுநிலப் பயிர்காக்க செவ்வேந்தர் அரணாய் வேய்ந்த புனலுறங்கும் பெட்டகங்கள் பொடிந்துவீழ வெறிகொண்டு உறைநீர் உருண்டோட மன்னுயிர்கள் பன்னாட்டில் மடிந்துடலால் மிதப்பாரே. ஐம்பூதத்திலிது ஓர் அடங்காத பூதமென்று அரக்கமாரி சுரக்க கண்டேன் வெண்டலை பெருமானே. எம்மானிவனை விடுவித்தருள வேண்டி இடியிறக்கி ஆர்ப்பரிக்கும் மேகக்கூட்டம் தம்மையே அற்பணித்து போர் தொடுத்து தரணிக்கு விடிவு வர எண்ணியிங்கே எண்ணற்ற புயல் தொடுத்து எய்யுமன்றோ ஈரேழுலகாழும் பரம்பொருளே. கொடுங்கயவர் கொட்டம் அடக்கிடவே கடும் கோபம் கொண்டு இந்நிலம் அழிக்க புறப்பட்டு பேயாட்டும் போட்டிடடுமே. உள்ளத்தால் நல்லோர்கள் உயிரைக்காக்க உத்தமனை வெகுவிரைவில் உதிக்கவிடு என சொல்லத்தான் பராசக்தி முயலுகிறாள். அவள் சொல்லும் மொழி சீற்றமாக உருவெடுக்க இயற்கையது அடங்காமல் மனம் கொதிக்கும்.
பிறன்மனை நுகரா பேரருளாளனாய் திறம்பட வாழ்வோர் தீதை அகற்றி பிறர்இடர் கண்டு பீறிட்டு எழுந்து உயர்விடம் துறந்து ஓய்விலா சேவையை மண்ணில் விதைத்து
நற்புவி தன்னில் நன்மையை அறுத்து தொல்லியல் காத்து சுடரென ஒளிர வெல்லும் வேந்தன் பூவென முளைத்த அரனாரேவிய ஆருயிராயினன்.
எம்மையும் உம்மையும் குருவென பணிந்து சிற்றினமழித்து பேரினம் வாழ மருந்தை பகர்ந்து மன்னுயிர் காத்து மறுமையை தகர்ப்பானென பொறுமையிலுரைத்தேன் புவிகாக்கும் அறனே .
பாகம் 41💗
தன்னலமகற்றி தென்னிலமாண்டு நன்மகனொருவன் கோனாய் எழுவானே. அன்னன்னில நல்லோரனைவருமிவனை வானாய் மதித்து வரமாய் கருதி குற்றேவல் புரிவாரே. அவ்வின்முகனுதிப்பது முக்கடல் பொதிந்த கன்னியின் முறைவாசல் குடக்கே ஒழுகும் நதியூர் மாயோனொருவன் பாம்பினில் பள்ளிகொள்ள அவன் தெற்கொரு காதம் தொலைவிற் பொன்மடியொன்றில் பூப்பான் என்பது புவி பொய்த்தாலும் பொய்க்காதென்பேனே. அவன் பொற்பதம் பதித்து புவியாழும் உறுதியை எவரும் குலைக்காரே . எவ்விதியும் தடுக்காதே.
பேதம் கற்பித்து மண் மாந்தரை பெயர்க்க புது வேதம் சமைத்து வேதையிழைக்கும் வாதைப்பிறவியரனைவரையும் வதம் செய்து பொல்சூரர்தனை வேரறுக்க விண் மைந்தனிவன் விடிவெள்ளி போலே மண்மீது பூக்க கண்டேன். பூவுலகே போற்ற பொறிபறக்கும் வேளிவனை சூல் சுமந்த இயற்றாய் ஒரு மார் தாண்ட முடியாது மண் மடந்தையிடம் விட்டுச்செல்வாளாம்.
கூகைகளை தலையில் கட்டும் கொள்கை கொண்டு குயில்களை கவர்ந்திழுக்க காசியினில் கச்சிதமாய் திட்டங்கள் புகுத்துவரே பொல்லா வாணிகர்களும். பேய்களை நோய் தூவ ஏவிவிட்டு வாய் பிழக்கும் வருணனையை நீவி விட்டு மருந்து விற்க பருந்துகளும் பறந்து வந்து பண்பற்றே பணப்பையை பறித்து செல்ல அது கருணையின்றி கண்ணீர் குடிக்க பாமரன் கருவூலம் கரைய வழிவகுக்கும்.
வேசரிகள் விலைபோக வஞ்சிக்கும் வஞ்சியரை விலைக்கு வாங்கி புரவியென புகழ வைத்து புகுத்திடுவார் சந்தையிலே. அதை மந்தையான மனித கூட்டம் நம்பினாலும் நாள் கடந்து வெம்பிடுமே.
இவ்வாறு அறம் கொன்றாடும் இனமழியுமே.
புறமொரு நிறமமைத்த பாதகர் மதமொழியுமே.
பாகம் 42💗
பனிமலைகள் அழுத பின்னர் பாழும் பூமி என்செய்யும் அதன் கண்ணிரீல் பாருறங்க கனி மரங்கள் கரியாகி
கற்பகமே பூக்காத காசினியை கண்டேனே. சுடுதணலை தாங்க ஒண்ணா நெடுமரங்கள் நீறு பூக்கும். அலைக் கரங்கள் தாலாட்டும் தலைநகரம் அடிப்பரப்பிற் உறங்க கண்டேன். பெருநீருள் அது பாடையிட்டு படுத்துறங்கும் பேரவலமதை யார் நினைத்தும் நீக்கலாகாது மீட்க ஒரு கரமுமின்றி மீன்களுக்கே மாந்தருடல் விருந்தாகும். மருந்தில்லா நோய்களுக்கருமருந்தாகும் எம் பெருமானுனை அறிந்தவர்கள் தஞ்சம் தேடி அண்டிடவே அடியேனதை கண்டேனே. நல்லோரனைவரையும் நாடி நலம்புரியும் நஞ்சுண்டோன் சாபமெலாம் தீயோரை வதைத்திட நாயோரனைவருமே
நல் வாழ்வை இழந்து நிற்பர். இனி கோடிக்குள் ஆயிரமாய் குன்றி நிற்பர் திருவருள் மாந்தரெல்லாம். எம்போல் பீடுடை நின்னடியார் பெரும்பேறு பெற்றதனை இயம்ப இயலாதே ஈடிலா இறையாம் பிறை முடிந்த பெருமானே.
தென்முனை திரை பொங்கி வரைவரைச் சீறக்கண்டேன்
உன் கன்னி காதல் கனியின் திருப்பீடம் கடலுக்குள் தூங்கப் போக மின்னி அவள் அடிவானில் மிளிரக் கண்டேன் பரம்பொருளே. பொன்னிக்கு தங்கைபோல புது மகளாய் எமக்கருளக்கண்டேன். உலகே நடுங்கி ஒரு நாளிகை உருளக்கண்டேன்.
ஒங்கி அறைவதில் உன் நிலம் உடையக்கண்டேன். அதனுள் மெய்சாய்த்த பொய் மாந்தர் புதையக்கண்டேன். தெற்கில் நின்னருள் எம்மையன் தீயாய் வளரக்கண்டேன். புற்றீசலென போர் படைகள் கூர்வாளுடன் முளைக்கக் கண்டேன். கூவியே அறம் கொன்ற பாவியர் தலைகள் உருளக்கண்டேன்.


Comments
Post a Comment