பாகம் 46, 47 & 48
பாகம் 46💗
நறுமணம் மாறா நன்முகனிவனை கண்டேன். நற்குணம் தேறும் வேந்தனின் அடக்கம் கண்டேன்.
செவ்வரம் பெற்று வந்த சேயோனுக்கு இடையூறாய் வருவோரை அறம் பாடி அழித்திடவே நிதம் பாடி நின்றேன் யான்.
சொல் அருவி சுவை வழிய புல்லுருவி புல்லுவர்கள் நா பொழியும் தெள்ளுரை கேட்டோர் மனம் மயங்கி பொல்லா பாதகரை நல்லோராய் நாடிச்செல புவியில் நலிவோர் குன்றா நிலையை யாம் கண்டோம். உண்மை விளம்பிக்குலகில் மேன்மையிலாது பொய்மை புடைசூழ கயமை காலூன்ற ஊரெங்கும் பதுமையென முதுமையர் முன்மொழிவோர் எவருமின்றி பந்தமறுந்து பாழாகி நொந்து மடிவதனை எம் நுண்ணறிவால் உணர்ந்திட்டேன்.
வாதிக்கு நீதி செய்யா கபோதிகளமரும் கச்சேரிக்குள் கரும்பணமுறையக்கண்டேன். அவரங்கு நீவிய கரம்நிறைந்தது அறவோர் அழுத பிணமென்று அறிந்தும் அரசிற்குரியோர் உள்ளம் புரையோடி உய்விலா பாவியர்க்கு மெய்யாய் உழைத்திடக் கண்டு நெஞ்சம் குமுற மெல்லியர் புன்னீர் வடிக்கும் பொது அவலம் கண்டேன்.
ஆக்கமுறு அமைப்பென அதிகாரமுடை ஏறு மாமுத்திரையொத்த இறங்கு இழிமாந்தர் நரிமா நெஞ்சமைத்து நடுநிசியில் படையேவி எம்மையன் சிதையெரிக்க ஆவல் கொண்டனரே.
சிற்றமுடை கோமானொருவன் சீமானிவனை சிறைபிடிக்க குறிவைத்து மையத்திலிருப்பானாம். காப்போர்க்கு கடுமாணையிட கண்ணிழந்த காவலரும் அகத்துள் அடைக்காமல் ஐயனை சிறைக்குள் அடைப்பரே. இதனால் மண்மகள் சீறி மாநிலத்து வாய்பிழக்க மையத்து மாந்தர்கள் மண்ணுறங்க சென்றதனால் மறு ஆணை பிறப்பிக்க மைந்தர்கள் யாருமின்றி மாயோனாய் புறம் வருவான்.
நன்னிலம் நலம்பெற நல்லோர் நால்வர் போதுமென்பேனவர் விடுத்து அகம் கொன்ற பொல்லாரனைவரையும் புதைத்துவிட வேண்டுமடி நல்லறம் காக்கும் நாயகி நிலனே .
பாகம் 47💗
ஐயன் நாட்டிற்கயல் நாடாய் குணக்கே குடிகொண்டு ஆர்பரித்தரவம் அடித்துண்ணும் புருவம்விரி மாந்தரருறை பன்னாடுகள் புதையுமே. அங்கு புன்னீர் வழிய புலாலுண்ணும் பொல்லார்
அல்லல்பட்டழிவரே. இறகடித்து பாலூட்டும் இனம் சுவைத்த நாவுடை குறுகிய மரபினர் கோடியிலழிவரே. தீரனிவன் தென்குடக்கே திக்கனைத்தும் கடல்சூழ் அடர்கண்டத்திருள் படிந்த கருங்குழல் சுருள் கொள்ளகக்கண் அவிந்த காக்கையர் நோய்க்கிரையாய் குவிவதனை பார்க்கும் விழிகளெலாம் பரிதாபத்தோடழுமே.
புவியின் மேனியில் போதை புழங்க பேதையர் கூடி பொல்லா வளம் அள்ளும் அடர்ந்த காட்டை அழலோன் உண்ண அகிலப் பரப்பே அப்படி கொதிக்கும். அனைத்தும் வியர்க்கும் புதினம் தந்தேன் புரிந்துகொள் அன்பே.
நல்லுடல் நலம்பேணிட நிலத்தாரனைவரும் நாசிக்கு திரையிட்டு புறம் வந்தண்டுவார் ஆரென்றறியாமல் அல்லல்படும் மாந்தர்க்கு மெய்யுள் புதைந்திருக்கும் மென்பொருளொன்று கைகொடுத்து திரைக்குள் பிறன் முகம் காட்டிடுமே. நேரில் முகம் காண நெஞ்சம் நடுங்கி துருக்கர் நேரிழைபோல் துகிலால் முக்காடிட்டு மதிமுகம் மறைத்து முனங்கி வாழ்வது மூன்றகவையே.
தொல்லைதந்துடல் பற்பல அள்ளும் எல்லை கடந்த கொடும் பிணி தன்னை வெல்லும் முல்லை நிலமகளீந்த மூலிகையொன்றையடியேன் காண பாருக்குள்ளே பகர்ந்தேனுண்மையை பாவச்சின்னங்கள் அறிய அறனே தீவினை அகற்ற சொல்லச்சொல்ல சுவையை யுணர்ந்தேன் சொற்திறனையறிவாய் சூது கௌவி சூழலும் மனமே.
அழியா வேந்தனிவனென்று பொழியும் செம்மொழித்தேனில் அழகு நடைபோட்டறம்பாடி வந்தேன்.
அழியா வேந்தனையே அழிக்கும் நோக்குடனே பொழுதும் முயன்றிடுவர். புறமுதுகிட்டோடிவர். அழிக்க இயலாத அருள் மகனாய் அவதாரம் பூண்டதனாலிவன் அழியா வேந்தனானான். இவனே மனமெடுத்து இன்புவிதனை விடுத்து விண்டுலகிற் புகுவதனால் அழியா வேந்தனென்று இவனை அடிபணிந்தேன். இதையறியா மாந்தரெலாம் உள்ளூனம் கொண்டுலவி இறைவிதிக்கெதிராய் இவன் விதிமுடித்தங்கனுப்ப முயன்றால் முடிந்திடுமோ முப்பால் வளர்த்த முக்கடலூரானை அழிக்க எவருக்குமே வலுவில்லை. அறிந்தவர்க்கு அழியாப்பிள்ளை அருந் தவர்க்கு இவனே ஞானப்பிள்ளை. தாய் தமிழிற்கோ செல்லப்பிள்ளையாம் யிவனை கைவிட எம் இறையனாற்கிசைவுமில்லை.
பாகம் 48💗
விண்டுவே இறங்க விண்டவர் வியக்க தென்புலம் சிறக்க ஐம்புலனடக்கி தீந்தமிழ் பாணர் தினமும் துதிக்க போற்றும் பைம்புலமிக்க பாடல்கள் சுரக்க செம்புலத்துதித்து செம்மலாகி முன்னம் செம்மான் கன்றை கவர்ந்த எம்மானிவனென இயம்பவந்தேன். இவனை பணிந்தே எம்புலம் காக்க எழுந்த அறனின் பின்புலமாக யாமே இருக்க மும்மலமகற்றி மூதறிவுதிரட்டி அடியேனுக்கருளிடு சுடர்விடும் பொருளே.
வானுறை வேந்தனே வணங்கும்
திருநிறை திருமார்பன் மீண்டுமொருமுறை தோன்றும்
மூன்றாழியை மூச்சந்தியாய் யுடுத்த தென்தமிழெல்லை முல்லைக்கொடியாள்
மீட்டெடுத்த மன்னுயிர் வேந்தனிவனென மார்தட்டிக்கொளல் வேண்டாமிவன் பாருக்குரிய பரந்தாமனாதலால் பன்னாடே பூரிப்படையுமென பாடவந்தேன். எம்முனைக்குமில்லா பெரும்பேறு இம்மும்முனைக்கெவ்வாறு என வியக்கவேண்டாம். இது மாலன் எடுத்தவரம் மனமிலார்க்கு துலங்காது. இது வேலன் வகுத்த அறம் விணருக்கு விளங்காது. இலங்கா எம்மானை இலங்கவைக்க இதயத்திலிழுத்தெடுத்து எம்மை ஆளவைத்தோம். விளக்காய் அவனிருக்க விதிக்கிங்கு என்ன வேலை. அழுக்காய் மனமமைத்து மண்டியிடும் முன்னமே கொழுப்பாய் அவனெரிப்பான். கூக்குரலுக்கிரங்மாட்டான். மழுப்பி வாழ்வோரே மனம்திரும்பி வாருங்கள். மேய்ப்பனிவனே தான்.
மீளும் மண்ணிற்கு மீட்பனிவனென்று வரையனைய உறுதிதந்தேன். காப்பனிவனென்று கடலளவு பொருள் தந்தேன். இதை கண்ணிழந்தோரறியாரே கருணைசெய்வாய் அறப்பொருளே.
மண்சிவந்து மனம் கொழிக்குமுன் கண்சிவப்போர் பல கோடி காத்தருள்வாய் பரம்பொருளே.
Comments
Post a Comment