பாகம் 52, 53 & 54

     பாகம் 52💗



வேண்டியே சொக்கனை விரும்பி மணந்த பாண்டியப் பைங்கிளியாள் கயல்விழி நீந்தும் பவளக்கை ரேகை ஏந்திய வீழா வேந்திவன் என்பதனை வேதங்கள் மறைத்தாலும் விழியிறக்கி யாமறிவோம். ஆண்டி அடியார் வீசிய தூண்டிலில் அரவம் பதித்ததிலுறங்கும் நாதனெனும் மீன் நன்றாய் அகப்பட்டான். கலிகொன்று அறம் காக்க கண்ணனிவன் உடன்பட்டு அருளாளர் நெஞ்சகத்துள் அடிமையாய் சிறைப்பட்டான்.  மாசற்றோர் வேண்டி நிற்க மண்ணிறங்கி வினைதீர்க்க தன்னையே அற்பணித்து கடன்பட்டு இடைப்பட்டான் என்பதனைச் யான் சொல்ல சொல்தருவாய் பரம்பொருளே.

   மிதிலையில் வில் ஒடித்தோன் மேல்மீன் நாளெடுத்தான் மனமுறைந்தாள் பேரிணைத்து மாதவனாய் பிறப்பெடுத்தான்.

      அரியுடன் உருவெடுத்து அருந்தவம் புரிகின்ற அம்புலி திருமுகத்தான் நெஞ்சுறை நேர்பிரான் நஞ்சுறை நாகமணி நாதர் தயை கொண்டு நாநிலமுலவுவதை மேநிலத்தோர் அறியுமுன்னே எம்மகம் அறிந்ததனை உன்னகம் அறியுமென்று பன்னகமணிந்த தென்னக மறையே நீயறிவாய்.



         வள்ளிக்கள்வன் கையில் துள்ளிய வல்வினை அள்ளிய வானவர் வேல் உள்ளங்காலில் ஒயிலாய் ஒளிர்வதை உற்று நோக்கியே உள்ளதைச் சொல்வேன். அது செவ்வேள் விட்டு சீறி பாய்த்து சூரனை வதைத்த  சுடர்வேலெனவே ஆறுதல் கொண்டேன்.  வலக்கால் மலரில் வானைப் பார்த்த நாபிக்கமலம் நன்றாய் கண்டேன். இடக்கால் மலரில் பூந்தாள் நோக்கும் ஒளிர் தாமரையெழில் கண்டேன். 

     பதமலரிரண்டிலும் பார்த்தசாரதி சக்கரம் பார்த்து எம்விழி ஒற்றி எழுந்து நின்றேன். வலப்பத மலரோரம் பூத்த பங்கயமுள்ளே முக்கண் சூலம் மூலமாய் நின்றதை முத்தமிட்டு வணங்கி நின்றேன் .


பாகம் 53💗

தீதுள்ளா நன்னெஞ்சே தேவருறை ஈசன் கருவறையாய் யாம் கண்டோம். இறை வெறுப்பும் மறை மறுப்பும் இங்கெவர்க்கும் பாவமில்லை சாபமில்லை. 

      பிறர் நலம் பேணி நலிந்தோரை தவமேற்போர்க்கிணையாய் ஏற்று தருமம் தலைகாக்கும். அகமலமிறக்கா அருளிலா இருளுள்ளோரை எரிக்க எம் அறனே துணைபோகும். 

      தரை மீது தாபம் கொண்டும் மரை மீது மோகம் கொண்டும் கனகம் குவிக்கும் கடுந்தாகமெடுத்து போகம் புரையோடிய புண்ணெஞ்சே பொல்லா நெஞ்சென புகன்றாய் பரம்பொருளே. 

         மலரீன்று புறம் தந்து மனம் கொன்று மலர் விற்று பசிதீர்க்கும்   படுபாவப் பெற்றோரின் பேரவலம் கண்டேன்.  விடப்பால் அருந்தியே விரியா விழிகொண்ட விண்மீனை விதியழைக்கும் முன்னமே வழியனுப்பி மண்ணோடு மக்குவதை மனதுருகக் கண்டேன். பெண்பூவாய் இனம் தேடி பேரழிவு செய்கின்ற பகல்வேட பாவியரை பாரெங்கும் கண்டேன். 

            தொல்லை தந்துடல் அள்ளும் எல்லை கடந்த எப்பிணியையும் வெல்லும் முல்லைவன மூலிகையொன்று நெல்லையப்பன் நிலம் தொட்ட தென் பொதிகை கரம்பிடித்த மோதிரமணி வரைக்கப்பால் அகத்தியரருள் பொதிந்து அகமிருப்பதை புறந்தந்து புதிர் அவிழ்ப்பாய் நல்லோர் நலம் பெற வலன் தருவாய் பரம்பொருளே. 

         பள்ளமிலா குடியமைத்து பாரோர் மேம்படவே பன்னாடாள தெனாட்டேறு தலை எடுக்கும் திருவருள் நிலம் பணிலங்கள் படையமைத்து பதுங்கிவாழும் உவர்நீருடுத்த மூம்முனை மேற்குறை திக்கணன் கொம்பில் தேனிறை செம்பாய்  திருமேனியெடுத்து நறும்புகழ் பரப்ப நாடெலாம் மணக்குமிடமென்பதனை வணங்கியே உரைக்கின்றேன் வானவரே வழிமொழிக.

        பாகம் 54💗

கமலக்கையால் ஊணுண்ட கணமுடிந்தே கபட மாந்தர் நஞ்சூறும் நெஞ்சம் கண்டேன். உத்தமராய் உடனிருந்து ஓசையின்றி குழிபறிக்கும் குணம் கெட்ட மாந்தர் முன்னே மண்டியிட்டு அண்டிப்பிழைப்பர். சினம் கொன்றோர் செயல் வீரம் பயன் பெறுமே ஐயமில்லை.

  பரிதியன்ன வரமிருப்போர் எதிரிகளை எரிக்காது சீதளத்தை பாய்ச்சி நிற்பார்.

         பெற்ற தாய் பின் பெற்றம் பாலூட்டி வளர்த்தாளவளை நன்றி கொன்றே நறுக்கி இன்சுவையெடுப்போர் கொற்றவராயினும் குலமழும் கொடும்பாவம் குவிப்பரே என்பதை வானுற்றவர் சொலார் உயிர் வலியறிவோர் உள்ளறிவர் பரம்பொருளே. 

      கபடமுடை கல்லுறை நெஞ்சரை காவுவாங்க நிமிடங்கள் குறைவதை நேர்மக்கள் நன்குணர்வர். தடயங்களொழிந்தாலும் தருமமொழியாது தலைகொய்யாமலது தளராது என்பதை தருணங்களுணர்த்தி செல்லும் தன்மை கண்டேன்.

        எங்கும் செம்மொழிபொங்கி எழுந்திட எம் ஐயன் வரும் நாள் இனி செல்லாது. பொங்கும் கடல் கிழித்து புது வணிகம் செய வங்கம் அமர்ந்து வந்த  செங்கமல வண்ணத்தார் சென்ற பின்னும் தென்மாந்தர் தம் வாழ்வில் தீரா அடிமையாய் அசையும் பிணமாக்கி அந்தணர் இலைமறை காயாகி இயக்குவரே. அடிநிலம் மீட்டு செழுமலர் பூத்தார்போல் செந்தமிழ் வளம் கொழிக்க

தடம்பதித்து வருவானே தரணியாள தமிழ்வேளே.

         குந்தம் பறக்க கூர்வாள் சுழற்றி வங்கம் கடந்து வளரும் அரசை எங்கும் கண்டேன். எழில்வேள் எழுந்து சங்கம் வளர்த்த தங்க நிலமே சிங்கமிவன் சீரடி தொழுமே பங்கம் சூழா பரம்பொருளோனே. 

           முக்கண்ணனருள் மூதறிவு தெக்கணத் தென்முனையிற் திருக்கண்ணன் சொல்லாமல் சூலுறைந்து நில்லாமல் மாலுதித்து திக்கணனாகி திசையெட்டும் தமிழ் வளர்க்க தேர்ந்தவனிவனென்பதனை அருள் சார்ந்தோர் நன்கறிவர் அறம்காக்கும் பரம்பொருளே .

Comments

Popular posts from this blog

பாகம் 124, 125 & 126ஆருக்குமஞ்சானவன் ஆல்லிப்பெருவிரல் வலதெம் அன்னை நிலம் நோக்க அகத்தலம் நோக்கின் முன்னழகு முகத்தோற்றத்தொடு முறக்காதுடன் இருகோடுடை எழில் களபமங்கு செங்குத்து பாகையில் சரிபாதி சாய்வினில் அங்குற்று அடியேன் கண்பறிக்குமே.

பாகம் 70, 71 & 72

பாகம் 118, 119 & 120 ஒளிரும் கல்கி கனலென காணா அறம் பாராட்டி கண்ணன் முன்னம் காலூன்றிய கைக்கோடரி காவலன் தோன்றி கடை வரை கரம் தந்து செங்கோல் ஏற்க காரணமாவான் கடுந்தவம் பூண்டு. நீணிலம் காக்க நெஞ்சம் மிஞ்சும் நன்னெறியோடு நிலையா உலகில் நிலைக்கும் நீதி.