பாகம் 55, 56 & 57

பாகம் 55💗

சிறப்பாய் நாடமைத்து பொறுப்பாய் கடனாற்ற உதித்த செம்மலினை உசுப்பி தடம் மாற்றி நசுக்க  நாய் படை  திட்டமிடும். புறம் குத்த குறிப்பாய் நரிப் படை வட்டமிடும். உடன் சுற்றி தெறிப்பாய் ஒய்வறியா பரிப்படை கொட்டமுடன் எடுப்பாய் தேர்படை யாமத்திலும் எக்காளமிட்டு வெறிப்பாய் ஈரற்குலை நடுங்க எமையனை அச்சுறுத்த நெஞ்சுறைந்த நஞ்சுடன் நிலைகெட்டலைவரே. 

      ஜயன் வருமுன்னம் மையம் கைக்குவர குணம் கெட்டோர் கொடிவகுப்பர். மதம் கொண்டு குலம் கொன்றோர் அணிவகுப்பர். பிறப்பொடு பேதம் சூட்டி இறை தலையிற் யாமுதித்தோமென்று மன்னுயிர் பிரித்தாளும் மாந்தரும் மறையேற்றி கறைபடிந்தோர் கயமையை என் சொல்வேன் பரம்பருளே.

       அவையனைத்தும் அடிகொணர்ந்து சபையனைத்தும் சீர்குலைத்து மடமனைத்தும் பதம்வீழ்த்தி நிதியனைத்தும் சூறையாடி நலமுடை துறையனைத்தும் நடக்காது முடமாக்கி நாய் மாக்களொன்றுகூடி நன்னாட்டை நன்றாய் தகர்ப்பரே. 

        பிறவி பேதமிட்டு பிறவா கொடுந்தம்பி பெயர்ப்பான் தேன்மொழி தமிழ் மண்ணை. சிறுக்கும் தான்தோன்றி அண்ணனாண்டு அல்லல் கோடி தந்து கெடுப்பான் தன்னிசையை.

        மனையறுத்து பிற மானிணைதேடி இரையெடுத்து இன்புறும் இழியோனொருவன் வாடை வரும் குடப்பாகமுதித்து மதம் பிடித்து மன்சுவைத்து மண்ணாள்வான்.  இந்நீணிலம் ஒட்டிய நிலைகொள் விடமோடும் வேந்தர்கள் கரம்பிணைத்து உருக்குலைக்கும் பெருநாட்டை எட்டி நின்று யான் கண்டேன். பட்டுத்துடிக்கின்ற பட்டாள வேங்கைகளை வெட்டி சூது தின்ற வேதனைக் கதையை சொட்டுகின்ற சென்னீர்  சொல்லியழ யான் கேட்டேன். காசினியை மெய்யாக்கி கருணைக்கண் பூக்க ஈசனே காத்தருள்வாய்.



     கொடும்பசி கூப்பாட்டில் அடும்பிணி அலைக்கழிக்க தலைகுறைக்க நமனும் வந்தே நடுங்கியே இனமழிய நாடெலாம் கதிர் பொழியும். நல்லறம் காத்து நமை மீட்க பேராயனொருவன் பிறப்பெடுத்து பாராள வருமிடம் பரளியாற்றின் கரையோரம் பாம்பணையிற் பள்ளிகொள் பத்மநாபனுக்கு நமன் திசையிலுதிப்பானென சித்தநாதன் சிந்தையறிய செப்புகிறேன் பரம்பொருளே. 

          பாகம் 56💗

பயிர் வெட்டிப் பாழ்படுத்த பன்னாட்டு பைங்கிளிகள் பறந்துவரும். உயிரோட்டம் தடைபடுமோ என உலகிற்கே கிலியைத் தரும். பருவங்கள் பொய்க்காது போனாலும் பாழ் நிலத்தில் விளைவதெல்லாம் வீணாய் போகும். உடலுக்குரமூட்டும் உதிரத்தில் ஒட்டியோடி நலம் கொல்லும் விடம் விதைத்து விடம் அறுத்த விந்தை கண்டேன் பரம்பொருளே. வணிகரெல்லாம் பொன் வாரி வளநாட்டுள்  வாழ்வமைக்க ஊணுக்கு வித்திட்டோன் உறங்குவதோ அரைப்பசியில்  அல்லலுறும் தொல்லைகளாயிரமாய் தொடர்வானே. இவையனைத்தும் ஐயன் வருகைக்கு அடையாளமென சொல்லி அடியேன் எச்சரிப்பேன். 

அண்டம் காக்குமுனை அண்டா பஞ்சத்தை நெஞ்சமெலாம் கண்டதனால் நிலைகுலைந்து நின்றேனே. மனையெல்லாம் மனம்மாறி மாற்றானே மேலென்று துணையகற்றி இணைமாற்றி துள்ளித்திரிவாரே. பெயருக்கே அறம் பேசி இல்வாழ்வை ஏற்பாரே. 

    முலையினங்கள் முல்லையின்றி நடுநிசியில் அலைவதையும் கலைக்காசு குவித்திடவே கால்விரிக்கும் கன்னியரும் விலைபோகும் நிலை கண்டு வேதனையில் பாடவந்தேன். வில்லொத்த விழிகொண்டு வேல்பாய்ச்சும் மெல்லினத்தின்  நெஞ்சமடிகாணாது நிறை ஞானியர் நின்றனரே. துள்ளுமுள்ளத்தை தொய்விலாது இறுக்கி கள்ளூறும் கனியிதழ் வஞ்சியரை விலக்கி எம்முள் நிலைகொண்டு இயக்கும் பரம்பொருளே. 

அறங்காப்போரனைவரையும் அல்லலேதும் அண்டாது அகன்று நிற்க உன்னடிபணிந்தோர்

கடும் வாழ்வு கரைந்தோட இனி காலந்தாழ்த்தாது கண் திறப்பாய் பரம்பொருளே.

       நனிதூய்மை நன்மைந்தனிவன் தலை கீழொரு கொடி உலகாள ஒருமைபட்டுய்யும் ஒப்பிலா காட்சி கண்டேன். இனி கண்ணுறங்கி போனாலும் கவலைப்படேனையா. மெய்யாய் உரைத்தெல்லாம் மேதினியில் நடக்குமையா. பொய்யாது மூதுரைகள் போகுமோ. ஐயா கதிர்வேலே அறம்பாடிக்கருள் புரிவாய். செய்ய கடனுண்டு செவ்வேளாய் நீயுண்டு.  

       அகிலத்தில் ஆதவனுதித்துதிரும் முத்தோயமுடுத்த வித்தக ஞானியர் செம்பதியுறை மூக்குத்தியாள் முத்தாய் காத்தெடுத்து மூவுலகு சொத்தாய்  எம்மையன் சுடர்விட்டெழுவான் என்பதனை ஈரேழுலகறிய எம்பெருமானீயறிய யானும் அறிந்தேனே.

          பாகம் 57💗

தற்குறிகளேவியே பற்குறிகளேறிய பாழ்கிளிகள் பொற்கிளி பெற்று புரையுடை பிறைப்பூ பொறித்து அற்பர்க்கு இதழ் விரிக்கும் அக்கலை கொண்டு சிக்கலில் சிதைக்கும் சிந்தையுடனே வேங்கையை வீழ்த்த வினை விதைத்தும் வீழாது விழித்து வஞ்சக வேடுவன் வலைதனை யறுத்து நஞ்சகர் வியக்க நெஞ்சமெடுத்து நெடுங்களம் வெல்வான்.

      நன்னிலமெங்கும் நனிவளம் வேண்டும் எம்மகம் குளிர ஈடிலா நலமுடன் ஐயனுயர அடித்தளமிடுக பொன்னகை துறந்து பன்னகமணிந்து தென்னகம் போற்றும் நல்லறம் காக்கும் நாடுடை அறனே.

           கூடிறக்கி கூடியக்கும் கூத்தனருள் நுண்ணறிவை ஏடறியாதியற்கையிலே எய்திடுவான் இப்பெருமான். தேடினாலும் தென்படாத  வெள்ளுடலை உலவவிட்டு விதிமாற்றி எமையன் அடக்கிடுவான் ஒடுக்கிடுவான்.

      இல்லறம் விடை கொடுக்க இறையின்பம் மோலோங்க ஐம்புலனடக்கியே அறவாணன்  அமருமிடம் அகத்தியருலவும் அருள் மலையாய் யான் கண்டேன். பீடுடை எம்மான் கோடமைத்து தேடரிய காப்பியக் கொள்கை தந்து நாடமைக்கும் கொற்றவனாய் பொய்யகற்றி மெய் அமைக்கும்  சித்தமறி செம்மலிவன் என்பேன் யான்.

        மண்ணாசை கொண்டோரை மண் விழுங்கி ஏப்பம் விடும் 

பெண்ணாசை கொண்டோரை பேரிழப்பு தேடி வரும்.

பொன்னாசை கொண்டோரை புவிபுதைக்கும் காலம் வரும். ஈசனருள் வேண்டி  ஈடிலாஅறம் காத்து ஆசிலாது வாழ்வோரை அகிலம் விட்டாலும் விடாது அவ்வீடென்றே நல்லீடு தந்தே வல்லீசன் வழிவிடுவான். மண்வீசி மணம்பரப்பும் குணக்குன்றை என்னாடும் தன்னாடாய் ஏற்று அருள்பொழிய கனம் செய்க பரம்பொருளே.

        எம்மானம் காத்து இயல் ஞானம் பூத்து நின்ற பொன்மனச்செம்மல் இன்னவனிவனென்றறிந்தும்  

  கல்மனம் கொண்டு மும்மலத்திலூறியே மும்மத மூடரும் மண் மணம் மாறா செம்புலம் முளைத்த கற்பகத் தருவென்றிந்தே எரிக்க திரிந்து இயலாமற் போன இயல்பை என் சொல்வேன் இன்னலகற்ற இயங்கும் பொருளே. 

Comments

Popular posts from this blog

பாகம் 124, 125 & 126ஆருக்குமஞ்சானவன் ஆல்லிப்பெருவிரல் வலதெம் அன்னை நிலம் நோக்க அகத்தலம் நோக்கின் முன்னழகு முகத்தோற்றத்தொடு முறக்காதுடன் இருகோடுடை எழில் களபமங்கு செங்குத்து பாகையில் சரிபாதி சாய்வினில் அங்குற்று அடியேன் கண்பறிக்குமே.

பாகம் 118, 119 & 120 ஒளிரும் கல்கி கனலென காணா அறம் பாராட்டி கண்ணன் முன்னம் காலூன்றிய கைக்கோடரி காவலன் தோன்றி கடை வரை கரம் தந்து செங்கோல் ஏற்க காரணமாவான் கடுந்தவம் பூண்டு. நீணிலம் காக்க நெஞ்சம் மிஞ்சும் நன்னெறியோடு நிலையா உலகில் நிலைக்கும் நீதி.

பாகம் 133 மலைவாழை மணக்கும் மணவீடே சிறக்கும் மகிழ்மண் செழிக்கும் கதலி கண் சிமிட்டி கரை எல்லாம் சிரிக்கும் நுரை ததும்ப குடகுக் குய்யமீன்ற புனல் குழலி புறப்பட்டு பொற்புடை சிலம்புச் செல்வி பூத்த புகாரை தொடும் இடையில் பொங்கும் வளம் கொழித்து புன்னகைக்கும் பழம் பதிக்குள் தன் பொற்கரத்தால் அயலார் அகம் குளிர அன்னமூட்டி அன்றாடம் குடி நகர்த்தும் அருள் அம்பையின் கொற்றவன் வீழ்ந்தும் குணம் வீழாது கொலுவுற்று கொள்கையால் தனிநின்று இருகண் மணிகளது இடர் நீக்கி இருள் தீண்டா திருக்கரம் தழுவும் சுடரொளியை வாதை தரும் வல்வினை வந்தணைத்திடாது ஈரிமையாய் அணைத்து இதயம் ஏற்கா இழியோர் நடுவினிலே பரிதியை ஈன்ற பைம்பொன்னன்னைக்கு இளமலர் குடத்துள் இட்ட விளக்காகி இறையருள் பெற்று இல்லறம் மலர்ந்திடுமே.