பாகம் 58, 59 & 60

   பாகம் 58💗

நன்னெறி காவாது நன்நெஞ்சின் புண்ணீருண்டு புன்னுறும் பொல்லாப் பூனைகளொழியும். தீநெறியை தெள்ளாய் தினம் தின்று மெல்லினம் தனை வதைத்த பாதகரினம் பதைபதைத்தழியும்.

     கறுவுடை கயவர் கூட்டம்  கருவறுத்தகற்றப்படும். கச்சேரித் தலைமை ஏற்கும் கறுநெஞ்ச பச்சோந்தியரை முச்சந்தியில் வீழ்த்தி விதிகள் திருத்தப்படும். 

      வெட்டுக்கு இறங்காத வேலவன் மெய்யிருக்க வீணர்க்கு அஞ்சுமோ அழல் குஞ்சு ஐயன் நெஞ்சம்.

பிட்டுக்கு மண்சுமந்த பிறைச்சூடி கறுமலர் கண்டனின்று 

திரிபுணரி கட்டுக்குள் நட்டுவைத்த கனகமணி வேளுக்கு செறுபகை வித்திட்டோர் கண்டே 

வெறி கொண்டிவன் விதி சுமந்தன். 

மட்டற்ற மகிழ்ச்சியில் யாமுறைய நெறிபிறழ் மன்னாதி மன்னவரும் கொலை நடுங்கி திக்கற்று திசையற்று சிதறியோடி சிதைக்குள் ஒழிவாரே. 

     சட்டங்கள் குப்பையாகும். வானவர் நலத் திட்டங்கள் மண்ணை ஆளும். குற்றமெலாம் இவனகற்றி கொட்டும் வளம் கூட்டி உலகொன்றை நட்டு வைக்க பட்டுக்கரங்கொண்டு பங்கையன் வருவானே. அற்ற குளமன்ன அல்லலுற்றழும் மண்ணில் அட்டையாய் ஒட்டி உயிருஞ்சும் கட்டிப் பாவியர் விட்ட வேரறுத்து வியக்கும் திருத்தொண்டை சிறக்கும் வண்ணம் செய்துமுடிப்பானே.  

கெட்டுச் சீரழிந்து கீழ்கிடக்கும் பாழுலகில் பட்டு சருகான பாமரரை தோட்டு நலம் புரிந்து தூக்கி உயர்த்திவிட்டு பட்டமென பறக்கவைத்து பொன் மழை பொழியும் வண்ணமுதிக்கும் ஒளிமகன் ஓய்வறியாதுழைப்பானே.

                பாகம் 59💗

நாடுகள் நிதி இழக்கும் நாதியில்லா கதி பிறக்கும். திரு ஒடுதனை தான் ஏந்தி ஓலமிடும் நிலைபெற்று பேரரசே பிச்சைபெற்று திண்டாடி திணறி நிற்கும். 

    ஐயனிவன் அறனரசு திறனரசாய் திரிபு கொண்டு திக்கெட்டும் புகழோங்கும். புகழ்வீசும் பன்னாடே ஆற்றல் கெட்டு அல்லலுற்று வந்திணையும் சித்தராளும் செழுநிலத்தில். வல்லரசே வாய்ப்பு இழந்து கொடுநோயால் வாய்பிளந்து மெல்லரசாய் போகுமென எம்மரசே பரம்பொருளே எமக்கு நீ சேதி தந்தாய்!   

        பார்வடித்த கண்ணீர் பாழாய் போவதில்லை. இங்கு யார் வடித்த கண்ணீரும் வீணாய் வீழ்வதில்லை. நேரிழைகள் வடித்த கண்ணீர் நிலத்தை எரிக்கும் முன்னே நெறியாயன் வெறி கொண்டு நமை நாடி நலம் புரிவானென்று அன்றே அருட்பெரும் ஞானியர் அறிந்ததனை அடியேனும் அறிந்தேனே பரம்பொருளே. 

       சீர்பெருகும் நிலம் வேண்டி சிவனடிகள் நோற்ற தவம் செவ்வரம் கொண்டுவந்து சேர்த்ததுவே கண்மணியே. இனி யார் தடுத்தும் வாடாது நமையன் அருள் தூவும் மெய்மலர்தான். ஊரடங்கி போனாலும் ஒளிவண்ணன் காற்கமலம் ஓயாது நமை உயர்த்தாது . பாரடங்கி போனாலும் பதமலர்கள் கடுக்காது கடனாற்றும் பொன்மணியே.  

       உம்மையில் உதித்த இனத்தவரெல்லோரும் இம்மையிலும் இவனருகே இருந்து செம்மையாய் பகைத்தீ வளர்ப்பரென அறம்பாடி சித்தன் யான் அறிந்தேனே பரம்பொருளே. 

  தன்னை பிரித்து தாதை சேர்த்த பின்னம் முலைப்பாலீந்த அன்னை நிலத்தவர் ஆயர் பிறவிப் பாத்திரமேற்று கலியன் தோழமை கைகோர்த்து நித்தம் சுற்றி நிறை கடன் முடிப்பதை என் சொல்வேன் பரம்பொருளே.

         எம்மை நன்கறிந்த இளம்பிறை சடையோனே மும்மையை நன்குணர்ந்த மூலவனாய் நீ இருக்க உம்மையிலும் உம்மை யான் சரணடைந்தேன். மறுமை அறுத்த மாமுனிகளிருக்க இம்மையில் இன்னலுறும் நல்லோரை உயர்த்த கற்பகமாய் உதித்தவன் நெஞ்சிற்கு உரமருளித்து நீங்கா மறத்துடன் ஆர்ப்பரித்தெழ ஐயனுக்குதவிட மெய்யாய் வேண்டினேன் மேன்மைக்கு இணையிலா மேதினி காக்கும் மேதகு அறனே.

         பொதிகை மாமுனி பூத்தூவும் அகிலத்தினருமருந்தை அனந்தன்புரிக்கடுத்துறைந்ததோர் திருப்பதி நதியோரமடையாளம் கண்டேனுன்னருளாலே. இவன் மலர் முகம் காண மட்டற்ற அருள்பொழிந்தாய் மார்பிலரவம் ஆரமாட அடியார் நெஞ்சுக்கு விருந்தாகும் மாமணியே உனை புரிந்தோர்க்கு பூவுலகில் பொல்லா வினையில்லை. 


 பாகம் 60💗

கயிலையில் கடுந்தவன் புரிந்த பயனாய் கைத்தலம் கீழுள்ள அகவல் புள்ளதன் அரை மெய் கண்டேன். அது ஈசன்  குறிபோல் எழிலாய் தோன்ற உமையாள் உன்னத குய்யமாங்கே ஐயன் வலப்பூங்கைத்தலமடியில் அணியென அடியேன் அழகுற கண்டேன். இருபால் குறியும் இருக்கும் கையன் எம்மையன் என்பதை இங்கே கண்டேன்.  




        

   பகைக்கஞ்சா பார்த்திபன் உள்ளங்கையுளுறைந்த பாற்கடலூரான் திருமால் தரித்த மணிமுடி சின்னம் புதன்தொட்டிரு திட்டில் வள்ளியை அள்ளியக் கள்வன் தாரகை மேலொட்டி இருக்கக் கண்டே நவரசமுண்டேன். இடக் காதருகில் இலவம் விதைபோல் மரகத மச்சமிருப்பதை கண்டே பரவசமடைந்தேன். வலத்தொடை தன்னில் வரமல்லி வடிவில் செந்நிற மச்சம் செவ்வரமென்பேன். வலக்கரம்சேர் புயம்கீழ்புறம் மிளகென ஒரு மச்சம் மிளிர்வதைக்கண்டேன். இடுப்பினிடம் கொடிமுந்திரி விதையொத்த மச்சம் இருக்கும் விந்தையை சிந்தையடக்கி சிறப்பாய் கண்டேன் அறனே. 

        எழிலன் இடது  கணுக்காலுட்புறம் ஈரெள் அகலம் கருநிற மருவொன்று கலையாய் இருந்து எதிரே அமைந்த வலக்கால் கணுவை எள்ளி நகைத்து ஏளனம் செய்யும் ஆணவம் கண்டே அடியேன் வியந்தேன் அறனே அறிவாய்.

            கரிமுகன் நாற்கரச்சின்னம் கண்ட நாள் முதலடியேனிரு கண்ணயரவில்லை அறனே. அது ஐயன் சுட்டு விரலடி தன்னில் மோதிர வளையம் தொட்டெம் அம்பை சூலம் கைப்பிடியுள்ளே என்றேனன்பே. ஆகா இவன்தான் அகிலம் காக்க திகழும் திலகம் என்றே புகழும் ஞானியர் கண்டேன்.      



            விண்ணவர் வியக்க மண்ணவர் வணங்க மன்னவர் பணியும் சுயம்பு லிங்கம் பொதிந்துலாவும் வலதேயமைந்த வல்லமை பாதம் பாதமல்ல. அது ஞானியர் கண்ட வேதமென்றே வேதியர் வாயால் பாடிடக்  கேட்டேன் .



Comments

Popular posts from this blog

பாகம் 124, 125 & 126ஆருக்குமஞ்சானவன் ஆல்லிப்பெருவிரல் வலதெம் அன்னை நிலம் நோக்க அகத்தலம் நோக்கின் முன்னழகு முகத்தோற்றத்தொடு முறக்காதுடன் இருகோடுடை எழில் களபமங்கு செங்குத்து பாகையில் சரிபாதி சாய்வினில் அங்குற்று அடியேன் கண்பறிக்குமே.

பாகம் 118, 119 & 120 ஒளிரும் கல்கி கனலென காணா அறம் பாராட்டி கண்ணன் முன்னம் காலூன்றிய கைக்கோடரி காவலன் தோன்றி கடை வரை கரம் தந்து செங்கோல் ஏற்க காரணமாவான் கடுந்தவம் பூண்டு. நீணிலம் காக்க நெஞ்சம் மிஞ்சும் நன்னெறியோடு நிலையா உலகில் நிலைக்கும் நீதி.

பாகம் 133 மலைவாழை மணக்கும் மணவீடே சிறக்கும் மகிழ்மண் செழிக்கும் கதலி கண் சிமிட்டி கரை எல்லாம் சிரிக்கும் நுரை ததும்ப குடகுக் குய்யமீன்ற புனல் குழலி புறப்பட்டு பொற்புடை சிலம்புச் செல்வி பூத்த புகாரை தொடும் இடையில் பொங்கும் வளம் கொழித்து புன்னகைக்கும் பழம் பதிக்குள் தன் பொற்கரத்தால் அயலார் அகம் குளிர அன்னமூட்டி அன்றாடம் குடி நகர்த்தும் அருள் அம்பையின் கொற்றவன் வீழ்ந்தும் குணம் வீழாது கொலுவுற்று கொள்கையால் தனிநின்று இருகண் மணிகளது இடர் நீக்கி இருள் தீண்டா திருக்கரம் தழுவும் சுடரொளியை வாதை தரும் வல்வினை வந்தணைத்திடாது ஈரிமையாய் அணைத்து இதயம் ஏற்கா இழியோர் நடுவினிலே பரிதியை ஈன்ற பைம்பொன்னன்னைக்கு இளமலர் குடத்துள் இட்ட விளக்காகி இறையருள் பெற்று இல்லறம் மலர்ந்திடுமே.