பாகம் 64, 65 & 66
பாகம் 64💗
சென்னீரருந்தி சேர்த்த செல்வச்செருக்கில் மன்னுயிர்க்கிரங்கா மார்புறைந்து பொன் குவிக்கும் கண்குழிப் புண்ணுடை பொல்லா முதலைகளை கௌவி மெய் வளர்க்க காலன் அனுப்பி வைத்த வேடுவனொருவன் விடியலுள் வந்து நிற்பான். பூமகள் ஊணெடுத்து பொல்லாரை உள்ளிளுத்து பொன்னகம் பூரிப்பாள்.
பாருலகின் கரூவறையில் படுத்துறுமும் பகலவன் பண்புடை தீஞ்சுனையோ திரையெழும்பி வானுயர வந்துவீழும். வளங்கொட்டும் நிலமெங்கும் கனகமென உருகியே கண்பறித்து பெருகியோடும். ஆழிக்குள் துயில்கொள்ளும் அருமலர்கள் தலைதூக்கி மேனியினை பரப்பியே மேல் விரியும்.
ஆதவன் குணக்கே ஆழ்கடல் அசைபோட்டுண்ண நன்னிலங்கிட்டி நெடுநீர் போர்த்துமே. எண்ணிலா மண் நடுங்க இருந்துமையம் கொண்ட மாது தன் பெருவாய் பிளக்க அன்னை அல்குல் விட்டழுத வண்ணம் வந்த அருமாந்தர் பலர் பின்னும் அழுதபடி பெயர்ந்த பெருங்குய்யம் தன்னுள் புதையுண்ட பூபோன்று நீருறைந்துறங்குவரே. அன்று மேதினியில் தலை விரித்து மேனிலமாய் மனம் களித்த வீண்கர்வ விந்தை நிலமத்தனையும் ஆழிக்குள் பள்ளிகொண்டு அசையாதுறங்குவதை ஓசையின்றி நானிறங்கி ஓடுமீனாய் கண்டேனே !
வானுதிர் கனல்கனியோ வல்லமை பூப்பந்தை கண் இமைக்கும் நேரத்தில் கருணையின்றி சிதைப்பதையும் நிலமெனும் குலமகள் நிலை குலைந்து நெடுவடம் சாய்வதையும் தரணியெங்கும் தாங்கவொண்ணா பிண்டக் குவியல் பிணந்தின்று கூத்தாடும் புழுக்களையே உண்டுகளிக்கும் கோட்டான்கள் கோடமர்ந்து உரக்க கூவுவதை அண்டையிலே யான் நின்று அகச்செவியால் கேட்டேனே.
நண்டு புதைந்தது போல் நன்னெறியர் வளையெடுத்து மிஞ்சிய எச்சத்தில் மீட்ட முற்றத்தில் வாழும் வரமனிதர் விழிநீரின் வெப்பத்தை அறமுனியாய் உணர்கின்றேன்.
நல்லரவ ஆரநாதர் அழல் கண்ணெரிக்கு முன்னர் உள்ளிருளொழிந்திடவே ஒளிவிளக்கை நீயேற்றி உய்ய வழி காண்பாய். ஆசுபொருள் குவித்து அறம் கொன்று அகம் கெட்டுக் கறைபடிந்து காலனேவும் ஓசையிலா ஓநாய்க்கு உணவாய் போயிடாமல் ஆசைதனை கழுவேற்றி அவனடி பணிவாயே.
நெருப்பு முளைவிட நெருப்பே மழையாகும் கருக்கல் நேரம் ஒரு கண்ணீர் காலத்தில் மண்ணெரிந்து மாளுவதை மன்னுயிர்கள் தேம்புவதில் மாண்புடையோர் மீளுவதை நெருங்கியே நான் வந்து நேரில் கண்டேனே. ஐயா அறவேளே அனைத்தும் அறிந்தவனே உய்ய வைத்தெம்மை உயிர்க்க வைப்பாயே. மெய்யாய் நடப்பவர்கள் மேதினியில் சிலருண்டு. அவர் மெய்தான் எரியலாமோ. பொய்யர் பூக்காமல் பொசுங்க வழி செய்வாய்.
ஆட்டு உடை தரித்த ஆயிரம் ஓநாய்கள் மேட்டுக்குடிதனிலே மீண்டும் சீறலாமோ. காட்டு மனம் கொண்டோர் கோட்டை தனிலமர்ந்து கொற்றவர் கோலத்தில் அற்ற குடிதன்னை குற்றுயிராக்கலாமோ. வாடும் பெற்றோரை வதைக்கும் இளவல்கள் விதைத்த பாவம் தான் வீணாய் போய்விடுமோ.
கூட்டுக் கயமையுடன் குறுக்கிடும் கலிப் பேயை தாக்கும் திறன் கொண்டு தகர்க்கும் மறம் கொண்டு வேளின் தாயாகி விரைந்து காப்பாயே. கண்ணில் கருணை கொட்டும் புண்ணிய கோடிகளே பொய்யினை புறந்தள்ளி மெய்யாய் அகனமர்ந்து மேதினயில் அறம் வளர்த்து ஐயனை அடிபணிந்து அக்கரை சேர்ந்திடுக.
பாகம் 65💗
உம்மை கடலுள் உடனிருந்து காத்ததுபோல் இம்மைக் கனலுள் எரிய விடாதெம்மை கண்ணிமை காப்பதுபோல் மீட்டெடுத்து மறுமை எடுக்காது மாபாவம் அண்டாது பிறவிச்சிறைவிட பேரொளி சிறகளித்து விண்கலக்கவேண்டிய விழிப்புடன் கண்ணயரா காணுகின்றேன் உன்னொளியை. நன்நெறியை மன்னெறியாய் நாளும் அமலாக்கும் எம்மிறையே பரம்பொருளே எளியோர்க்கருளிடுவாய். ஈரேழ் பிறப்பெதற்கு ஈசன் துணையிருப்பவர்க்கு.
கொன்றைப் பூந்தலையன் உந்தையாயிருந்தும் எந்தையாய் அமர்ந்து எழும் குண்டலினியை விந்தை அடக்கி யான் வித்தை கற்றுணர விந்தை செய்தானே.
அரவமெழுப்பி அவனில் கலப்பதற்கு பருவம் பாழ்செய்யா பக்தி பயின்றேன் யான். முக்தி யடைந்தே யான் மூத்த தமிழெடுத்து முத்தாய் உதித்த முல்லை நில ஐயன் குறித்த அமுதனைத்தும் யான் இங்கு அள்ளித்தருவேனே.
எழில் தோற்றம் ஈறுவரை இணைபிரியாதுடன் வருமே எம்மையன் முகத்தோற்றம் முரடரையும் முட்டியிட வைத்திடுமே. நிழலாக தொடர்கின்ற நெருப்பொத்த இன்னலது அகலாது அகன்றுவிட அரை நூற்றாண்டாகுமென புனல் சடையன் சொன்னதனை பற்றற்றோர் பூஞ்செவியுள் பதுங்கிய ஒற்றனைப் போல் பதறாது சொல்லுகின்றேன். சிதறாது செவிசாய்ப்பாய். செவ்வேளருள் சேர்ப்பாய்.
காணும் காலொன்றில் கணுக்காலிடதில் களிறு நோய் கண்டு அருளாளன் தயவாலே அற்ற இடமறியா அகன்று மறைந்ததுவே. இல்லம் அருகமைந்த எழில் பொய்கை நீருள் இடறி போய் வீழ்ந்துடனே குலமாதர் உயிர்காக்கும் விதிபெற்று உய்த்த மழலையாம் பின்னொருநாள் விளையாடி காலிடறி தடுமாறி வீட்டின் முன் வீழ்ந்ததிலே வலப்புயம் பெயர்ந்து வலி தந்து புறம் வந்து அகம் சேர்ந்த அவலமிவன் பதின் பருவம் என்பதனை பக்கத்தில் நானிருந்து பார்த்தது போல் அப்படியே ஒப்புவிப்பேன் அறம்பாடி சித்தனிவன்.
கொடும் தலை ஏற்றதொரு கோரப்பூனை ஒன்று தலைப்புறமமைந்து நெஞ்சக நஞ்சுடனே அடும் நோக்கில் ஐயன் தலை தகர்க்க அலையும் மாந்தருடன் அணிசேர்ந்து முயன்றாலும் மரணம் விளையாது மாண்ட சதியை விதி வென்று ஐயனை அறம் காத்த கதையை அடியேன் நன்கறிவேன்.
வணிகர் மன்னனொருவன் வன்முறை கள்வனறிவேன். இவன் பொன்னனென்றொரு பூமரைச்சின்னத்தான் சிறகினத்தானாய் உதித்தான். அங்காடிகளிணைத்திவன் ஐயன் மெய்யரிய முற்பட்டான் முத்துநகரடுத்தானெனும் முழுப்புரட்டு தொழிலுடை முரட்டு உருவத்தான்.
பாகம் 66💗
கனக வழியருகில் கானகம் அடுத்ததொரு உந்திமரையுதித்து உயர்மறையேந்தியவன் பேருடை புரம்தனிலிவன் பக்தி பரம்பரையர் வெற்றிக்கனி உதிர்க்க கண்டேன். பின் சக்திதாயூரில் பக்திப் பயனாக காத்த பூவாய் கொண்டேன். இருட்டில் பதுங்கிய திருட்டு வேங்கை போல் தீடீர் பாய்ச்சலை துவங்கியே புதிராய் வருமென்பேனிதை புரியார் புண்ணுடையோர். புரிய கண்ணுடையோர் அறிவர். புருவம் சேரொளி பூத்த பேரொளி விழியுடை பூமான் பட்டு கம்பளம் அருகில் பார்க்க அரவமின்றி பதுமம் பதிந்த பொய்கைக் கரையினில் மரைபோல் விரிவானென்பதனை மருளாளர் ஒருவரும் அறிகிலார் அன்றி அருளாளரறிவார் இதை தூரத்தே தூங்காது விழி பூத்த துருவன் நன்கறிவான் பரம்பொருளே.
உதயம் கண்ட இவனுறைவிடம் தொட்டு இமயம் இணையுமே. இவ்வகிலம் முழுதும் உழலும் தீவினை முற்றிலும் அகலுமே. தங்கப் பாதையிற் சிங்கம் சீறி எழும் பாங்கை அங்கே யான் பார்க்க பேறு பெற்றேன். அறனே இது நம் சங்கம் காக்க எம்மங்கா நிலம் தன்னில் பொங்கும் புகழ் ஓங்க பொலியும் அரசே. துறவறமூறி மணமறியார் அகம் தெளிந்திவன் வரவறிவர். அகல்விளக்காய் இனமறிவது இவரியல்பே.
ஆறுகளடிசுடும் அடிச்சுவட்டில் நீரூற குடம் நிறையும். வானழுது தீர்த்தாலும் வாய்ப்பின்றி பாரழ பயிராகா பாழ் நிலையை புவி பெறும். பசிதாங்கா மென்வயிறும் மீளா வலிகொண்டலறும் காலம் ஐயன் அடிவாரமேறி அடியெடுத்து வைத்ததற்கு அறிகுறியை உணர்த்துமே.
கரும் பிண்டம் வாராது கனல்வயற்கு உரமேது. புனலோடும் பூங்காவும் சொல்லாது குருடாகும். பூவுலகே பழுதாகும் பொல்லுலகாய் போனதற்கும் நல்லோர் நலிந்ததே இந்நானில அவலமென்று நாதனென் செவி சொன்ன சேதியை யான் சொன்னேன்.
இத்திரு நாட்டுடை காலம் கொண்டொரு ஈனன் ஊடகமொன்று ஐயன் அடியொற்றி தொய்யா படையமைக்க குடக்கே பழுத்த கோவை பழத்துள்ளில் கொங்கையில் பள்ளிகொண்டே கோட்டை சிவவமைத்து சித்தன் தோற்ற சீழகம் கெட்டவன் நேசக்கரமிணைத்து நீதியறுக்கும் பாசவடம் பிணைத்து பரமன் அகலை அடும் நோக்கில் வாடையர் பொன்னை வான் மழை தூவி தென்றல் திசைக்குள் தேவன் தசையெரிக்க பாவம் செயுமே பாராய் அறனே.
Comments
Post a Comment