பாகம் 73, 74 & 75
பாகம் 73🌺
கடன்பட உடன்படான் கறையிலா நம்மையனுடன் விரிந்த பேயாள் வாழ்விற்கொளியேற்ற பெருமானுதித்த மனை நிலையாது விலைபோகும். பெருந்தங்கம் பேழைவிட்டு பிடி தவிட்டிற்கிணையாகும். வைரமும் வகையிழந்து வெறும் வறட்டிக்கே நிறையாகும். வான்மயிலும் வஞ்சனையால் வல்லூறுக்கிரையாகும் காலம் இதுவென்று கயவர் இனம் கண்டு ஞானம் தெளிந்தானே. ஐயனவன் வேதனையை வெறும் விழியால் கண்டே நான் வெந்து நிதம் நொந்தேனே.
மணந்த வீடும் பறிபோகி மண்ணில் புதைந்த மேடு ஆயிடுமே. புகுந்தவீடும் பலவாகி ஐயன் பூநெஞ்சை புண்ணாக்கும். மலர்ந்த வீடு நிலைமாறி ஐயன் பதிந்த வீடும் கைமாறி விண்ணிலுறைந்த வீடே நிலையாகும். ஐயனூழ்வினையே இதுவாகும்.
திரிகடல் தொலைவில் திரை கடலோரம் கொல்லும் கோடுடை கொடி மரம் தூங்க அன்னை அவளே கேடுறை குலத்தின் பிடரியை பிடித்து ஆட்டின் தலைபோல் அறுத்து அகற்றி குருதியில் குளித்து கொண்டாடியே கொடியோர் துடிக்கும் பீடம் கண்டேன் துர்க்கை தாயாய் தீதற தோன்றி தாண்டவம் ஆடி தகர்க்கும் தொண்டை அவளே துவங்கி அவளே முடிப்பாள்.
மரையேந்தி மாந்தர் நெஞ்சில் விடம் பாய்ச்சி மண்ணறம் சாய்த்து மனிதம் மாய்த்தோர் தலைதனை இழந்து தரையினில் துடிக்கும் தளரா காட்சிகள் விழிக்குள் வீழ்ந்ததை வெளியே சொன்னேன். தீயோர் ஒழிந்து தெளிவை அடையும் தென்னிலம் கண்டு அகமே குளிர்ந்தேன் அறனே அறிவாய்.
தெற்கிலுதிக்கும் திறவேள் இவனை தீயாய் தூண்டி இத்திருமண் முதலாய் திக்கை ஆள திருப்பணி புரிவாள். திரிபுர சூலினி வரமுடன் இவன் மேல் திருக்கண் பாய்ச்சி தருமம் காக்க தரணியர் அனைவரும் எம்போல் மகிழ்ந்தே தன்னிறைவடைவர். இடரிலா தாயார் போர்வாள் என்று இவனைத்தானே அன்றே சொன்னேன் நன்றே அறிவாய் நாதர் நெஞ்சே. அமுத மொழியில் அருங்கவியாத்து இவனுக்குதவ எழுந்தேன் அறனே. புண்ணியருலகே புகலிடம் தருமே மண்ணிலுதித்த மாசுறு மனமே இனி எம்மானாளும் இனிய உலகை செம்மையாக நானும் காண்பேன். இது உமைமேலாணை உலகே உணர்வாய் உண்மையறிய புகன்றேன் கேளாய்.
பாகம் 74 🌺
அன்றனந்தன் புரியாண்ட அரும் பரிது பெயர் பூண்டான். அகனமர்ந்து அறம் சிதைத்த எட்டு வீட்டுப் பிள்ளைகள் எதிரியாய் முரண்பட்டு பிறவியெடுக்க அப்பாதக ஆடவரை பண்பாளனிவன் அரிந்து கொன்றான். முன்னமுதித்து முறையாய் வேணாடாண்ட சின்னமாய் திகழ்ந்தவன் வாழ்வில் அரவமாய் ஆயிரம் பகைவர் படமெடுக்க நகுலம் ஆயினன் நம்மையன். அவர் இல்லத்து பைங்கிளிகள் இளம் பிஞ்சுக் கொடிகள் என நிறையுடை நேரிழையரை பஞ்சம குழல் கொய்வோர்க்கும் பரவிய கயல்வேடுவர்க்கும் கைமாற்றி கண்ணீர் பணம் பெற்று கன்னிகள் கற்பை விற்று ஞானம் கெட்டு குலம் தகர்த்த சாபம் பெற்ற கொடுமைகள் உடன்வர இப்பிறவியில் அவர் வழி இளவல்கள் இவன் எதிரியாய் பிறப்பெடுத்து குரல்வளையை நெரிக்கவே கொதித்தலைவார்கள் என பொதிகையாசான் சொன்னதை யான் புறம் சொல்லி அழுகின்றேன். பொறுத்தருள்வாய் பரம்பொருளே. கற்பகமேறி கனிரசமிறக்கும் கனமார்புடைக் குடிகளிலும் ஈழம் விட்டு ஞாலம் பெயர்ந்த இல்லாள் சூலறைகளிலும் ஊனுறைந்து உயிரமைத்து இவ்வெண்வீட்டார் சூழற்சி பிறப்பெடுத்து சூழ்ச்சி பொறுப்பமைத்து அழற்சி ஒங்கிடவே ஐயன் கதை முடிக்க முயற்சி பல எடுத்து காலம் கடந்தாலும் கடுஞ்சினம் தணியாது ஓலமிடுகின்ற ஊழிப்பேயாய் அலைந்தே பாழும் கொடும் நாயாய் பாரில் பிறந்தே நன்நெறி கொன்றனரே.
இவனை கள்ளிக்காட்டில் கன்னிநீலியுலவும் பூமிக்கருகில் நின்றுலாவியதை நெருங்கி நான் கண்டேன். இப்பிறவிக் கடன் முடிக்க துறவிக்கோலமெடுப்பான். இறைவிடுத்த ஆணைக்கிவன் இணங்கியே செம்புலம் தன்னில் பிந்தியும் அவதாரம் பூண்டு பேரரசாய் உருவெடுப்பான் என்பதனை சிந்தை சிதறாதுணர்ந்ததேன். மந்தைகள் அறிய அல்ல மானிட விந்தைகள் புரிய வேண்டும்மதி நீ எமக்கு தந்தருள்க. தளராது ஐயன் பின் நின்றருள்க.
பகை சூழ் பாழுலகில் புகை முகில் வண்ணனை புன்னகை பிறவியாய் கழைக்குழலூத கலிதோன்றும் முன் கண்டேன். பின் எழில் பீலித்தோகை மின்னும் அம்மலர் மன்னனை மற்றோர் மெய்யில் மண்மணக்கும் பவளமுல்லை திருமேனியாய் மனம் சிலிர்க்க யான் கண்டேன். தென்முனைக்கருகில் தேன்சிந்தும் கருங்கல் வரையுடுத்த கருநாகம் குடிகொள்ளும் கற்றாழை கரைகாக்க சீறும் சிற்றோடைக்கருகில் சீரழிந்த உற்றாருறவே உயிருக்கு உலைவைக்க உலகே வியக்கும் பொற்றாமரை புதையலை புடம்போடாது கண்டேனிது வெற்றுக்கதையல்ல. விண்ணவர் வரம் வாங்கி வேண்டுவோர் எண்ணம் தனை தாங்கி ஈடேற்ற மண்ணில் மெய்யிறக்கி மனம் கொன்ற வெய்யரினத்தின் வேரறுத்து விடக்குருதி உரம் தன்னை நிலம் நிறைத்து ஐயன் ஆடுவதை இவ்வாண்டியின் நெஞ்சம் நாடுவதாய் நன்கு நீயறிக நற்றமிழ் கூறும் நல்லுலகே.
பாகம் 75💗
ஆற்றுப்படை ஒங்க ஆறுதலைதாங்கி அகிலம் காத்தோனும் அம்புலியை தாங்கி ஆறுதலையோடு கூத்தை கலையாக்கி குதூகலித்தோனும் வேளமுகம் தாங்கி வேறுதலை வாங்கி நம் ஊறு தடுத்தோனும் நாளும் துணையிருந்து சுலம் தனை தாங்கி ஞாலம்காத்தெம்மைப் பேணிவருவோளும் பீடை பிறப்புக்கு பெரும் முற்று பெற ஐயன் நாளை எதிர்நோக்கி நாடே காத்திருக்க இவனை பூக்க அருள் தென் உவரி மூன்றுறை தெய்வகுமரி திருவடி கழுவி புண்ணியம் சேர்க்க பூச்சொரிந்தோதினேன். வேண்டுவோர் கண்ணியம் கூட்டிடும் காவியம் தோன்றிடும் காட்டாற்று நுரை தெறிக்க கரை நாதம் செவிகிழிக்க கேட்காமல் சொல்லவந்தேன். கேடுடை களை நடுவில் கனக கதிர்மணியை கண்ணாரக் கண்டேன். கன்னியின் கைத்தலம் பொதிந்த செம்பொன் விளையும் செழுநிலமருகில் மெய்த்தலம் கண்டு மேதினியறிய மெய்யைக் கொண்டு நெய்யாய் உருக்கி சத்தியம் செய்து பத்திரம் பதித்தேன். பாணர் இனத்தின் தலைகளுடைய சிண்டை பிய்த்து சேதமடைய மாதவமிருந்து எதுகைப்பிழையுடன் மோனைகள் தவறிய வான்கவி வரைந்தே வார்த்தை புதிரை வக்கணை கோர்த்தே புதரில் புதைத்து பூவை விதைத்தேன். சிதைக்கா வண்ணம் சேதியறிவோர் வாதை தீண்டா வானக விண்மீன். கேடுடை பொல்லார் பீடையில் உழன்று பிறவி வீண்மீன். இவர் கரியின் உருவாய் காற்றில் கலந்து எருவாய் கூட எதற்கும் உதவ இயலார் என்பேன் எந்தன் அறனே.
தையாள் ஈன்றாள் தன்னுயிர் மாசில் தகைசால் மதிமகளொன்றை. தவத்தைமகன் இவனை ஈன்றது பங்குனி திங்களை பதமாய் ஈன்ற திங்களீன்று திருமெய் தந்தாள். மேன்மகனுதித்த வானோரருளிய வரமாதமிதுவே வையகம் அறிக பொய்யுரையில்லை. வருத்திக் கொய்யும் தீவினை குருதியருந்தி மெய்யினை புதைக்குமுன்னர் மேதினியறிய மீட்க உதிக்கும் தெய்வத்திருமகனிவனே அன்றி தேவனாய் எவரும் உலகத்தார்க்கு உதவயார்க்கும் ஒருவரமும் இல்லை.
வல்லரசாய் குடக்கே வளம் கொழிக்கும் கண்டத்தில் வன்நோய் பதம்பார்க்க. வெள்ளரசன் வீழ்வான். பெண்ணரசி வாகை சூடி பெரும் பொறுப்பெடுத்து மண்ணரசியாவதை மாற்றார் தேராது முகம் சுழிப்பர். மன்னவர்பலர் மாண்புடனே ஏற்றிடுவர். வரலாற்றில் வஞ்சியேறும் அரியணை அங்கமையும் வேளையிலே எம்மண்ணில் நெறியிழந்தோர் அரசு வீழந்து நோயுற்று அவதியுற விண்ணதிர போர் மூண்டு வீரர்பலர் தலை வீழ்ந்து அண்டை நாட்டு அகமவிந்தோனொருவன் அரவ ஊனுண்ட விந்தை கொடியோன் விதிமீறி நிலம் பிடிக்க நிலைகுலைந்து வீழ்ந்திடுமே வேதம் விளை பூமி கருகிடுமே. வேலியோரம் மலர்ந்த பூங்கழுத்தில் தாலிகள் தங்காது தகர்ந்திடுமே. புருவம் விரிந்த பூநாகங்கள் நுழைந்திடுமே. பருவமெய்யாத பைம்பயிரை பாழ்படுத்தி மேய்ந்திடுமே. வல்லரசின் அப்பொன்னரசி வன்படைகள் தந்துதவி குள்ளர்களை குருதி கொட்ட கோட்டைவிட்டு விரட்டிக் கொல்ல வல்லரசாய் தலை நிமிர்த்தி வரலாற்றில் இடம் பிடிப்பான் வரமெடுத்து வந்த ஐயன். எவ்வரசும் எட்டாத விண்ணரசு அடிகோல பாம்பையன் இருவருமே பக்கத்துணை இருப்பதனால் மேம்பட்டு புகழ்பாட எம் மெய்வாயை அற்பணித்தேன். நன்னெறிகள் வளர்ந்திடுமே. நன்றி சொல்வாய் மானிடமே நாளை தாயகமே நீணிலமாய் தரைமீது பரந்திடுமே. ஐயன் செல்லும் நிலமெல்லாம் தெள்ளுதமிழ் அவையெழுந்து தேன்சிந்தி மலர்ந்திடுமே.
Comments
Post a Comment