பாகம் 76, 77 & 78

 பாகம் 76🌺🌺

வேழம் வளைந்தாடும் வெண்டலையானருளாலே ஞாலம் காக்க வரும் நாதனிவன் மலரும் நறுநிலம் ஒளிர்வதனை  ஞானம் பாய்ச்சியே நலமாய் நுகர்ந்ததேனே. நீதிமானறிய நெஞ்சை திறந்தேனே. 



    பாதி திருமெய்யை பத்தினிக்கு பதிவு செய்த ஆதிபகவனின் ஆலயத்தை ஒட்டியொரு கன்னியாக கண்ணுறங்கா எண்காணி குளமிருக்க களிறுறங்கும் கற்குன்றில் காற்று வீசும் தென்திசையில் கண்டேனிவன் கால்தடத்தை கானக்குயிலே நீ கேளு. கண்மணியே இதைப்பாடு.



      தாழம்பூ தலைவிரிய தந்தசூகம் நடமாட வேலன் கோவில் காற்காதம் விலகும் தூரம் யானமர்ந்து நாளெல்லாம் புலனடக்கி  நாயகி நயனம் திறந்திடவே முலாதார கனலெழுப்பி முற்றிலும் யான் கண்டிட்டேன் முக்திக்கு வானுலகில் வித்திட்டேன். ஆளவந்தான் தோழனின்றி அங்குமிங்கும் அலைவதனை கூறவந்தான் இக்கூத்தன் உற்றான்.  இக்கூற்றை நீயும் நம்பிடுவாய். கூறுகெட்ட அரைகுறையர்  கொள்ளும் புரிதல் யாதுக்கும் பொருள்தான் பிழையாய் வருமென்று இருளில் மூழ்கிய குருடரையும்  எச்சரிப்பாய் பரம்பொருளே.

      நாலுடன் இரண்டிணையும் நல்லுடல் அகவையிலே கோழிக்குஞ்சு தீண்டியதால் குற்றுயிராகி நம்மையன் வாழ்வின் எல்லை வரை சென்று வல்லமை பெற்று வருவானே. காலதேவன் அழைக்காமல் அவன் காலை தொட்டு துயின்றாலும் வேளை இன்னமும் வரவில்லை என விதியே தொடர வழிவகுக்க வேல்போல் நிமிர்ந்து வலுப்பெற்று வேண்டும் வரங்கள் பல பெற்று அம்பை அருளால் நோயற்று ஐயன் எழுந்துவருவானே. 




       மூன்றில் வந்த காமாலை பின் முப்பதில் மீண்டும் மூண்டிடவே தேவர்கள் வேண்டுதல் தூண்டிடவே தெற்கில் உயிர்த்தெழுவானே. தீபோல் ஐயன் திறன் கொண்டு தியாகம் தொடர துணிவானே. 









       வேங்கடம் வடக்கே வீடமைத்து வேண்டும் வரங்கள் பொழிந்திடுவாள். அங்கு குன்ற கொண்டையில் கூத்தாடும் கோட்டையிலமர்ந்து கொலுவிருப்பாள். கண்கவர் பட்டை தானுடுத்தி கனக மேனியில் காட்சிதர ஐயன் பாதம் பதிந்திடவே அங்கும் விரித்த கண்ணிகளில் ஐயன் வீழாதிருந்திடவே அன்னை துர்க்கை காத்ததனை அகிலமறிய மொழிவேனே. அறிவேன் அடியேன் இவனே தான் அழிக்க இயலா அறவேளாய்  முத்தமழ் காக்கவந்தவனே. பாரே பெருமை கொள்வதற்கு ஏறாய் ஒருவன் எழுவதனை யாரும் உரையா உண்மையினை ஊரும் உலகம்  அறிந்திடவே ஒங்கி உரைத்தேன் பரம்பொருளே. துணிவேன் ஐயன் பிறப்பறிந்து தொடர்வேன் நிழலாய் அகனமர்ந்து. யாதூரும் நிலையாத எமக்குதவி புரிந்திடவே தூது செல்வாய் தேன் தமிழே. சூது கொல்ல வருவானே தொடரும் தீது கொய்து எறிவானே.  




       காவேரிக்கரையோரம் கபட துயில் கையாளும் பூதேவிக் காதலனின் பூவிழி ஒளி பாயும் பொன்னயல் கண்டத்து கயல்விழியன்னை ஈன்ற கனிவுடை மைந்தனும் ஐயன் கரம் கோர்த்து அகிலம் முழுமையும் அன்பமைதி வளர்ப்பானே. 

        

 பாகம் 77🌺

     முக்கண்ணன்  திலகமவன் முத்தமிழின் வதனமவன் முளை விடும் நாள் வரைக்கும் ஆகாத காலமாய் அகிலத்தார் அழுதிடுவார். தேறாத கலகத்தால் தீதுறம் காசினியே ஆறாது கண்கசக்கி அல்லலுறும் காண்பாயே. ஆதவனிவன் வருகையாலே ஆடா மலையாட பாடாத வனம் பாட ஓடாத நதியோட பூவாத நிலம் பூக்க பொல்லாரில்லாத புவியியலை கண்டேனே எல்லாம் வல்ல இறைமுனியே. 

    வஞ்சம் கொண்டு வருவானே மஞ்சள் நதி மண்ணசுரன். நம்மைய்யன் தோற்றம் தனை தோராயமாய் முன்னறிந்து  மன்னார் மேட்டில் தளமமைத்து நம் மண் தகர்க்க முனைவானே. கொஞ்சும் தமிழ் நிலம் அழிக்க எக்கொற்றவர்க்கும் வலிமை இல்லை. மிஞ்சும் இறையருள் பொழியும் மேன்மகன் இங்கிருக்க நஞ்சுறை உயிரினத்தை நல்லுணவாய் கொள்ளுகின்ற அஞ்சா இனம் அங்கு கண்டேனதை அழித்தொழிப்பான் தென்னிலத்து தீரனிவன் தீதை அறுக்கும் தேவனிவன் பிறவிக்கடன் தாங்க பேரினமே பிழைத்தெழுமே. சிற்றினம் சிதைக்குள் வீழ வாய்மையினை உயிராக வரம் வாங்கி வந்தவனை ஆண்மை உள்ளோர் வணங்கிடுவர். அவன் அடிபணிந்து இணங்கிடுவர். 

      தொங்கும் மீசை ஓநாய்கள் தொன்மையான செந்நாய்கள் தங்க நிலத்தின் வேலியினை தகர்த்து உள்ளே புகுந்திடுவார். பொங்கும் சிங்க போர் மக்கள் போர்த்தி அரணை காத்திட்ட காவல் தெய்வம் ஆகிட்ட கடமைவீரர் யான் கண்டேன். தீயாய் உலவும் தென்நிலத்தார் சீறும் புயலாய் எழக் கண்டேன். வீரம் வீழ்த்தி வடகுணக்கே வேற்று அரக்கர்கள் புகக்கண்டேன். கொஞ்சம் கூட கருணையின்று நம் அங்கங்களை கொன்றழிப்பான். வங்கம் கொண்டு வெஞ்சினத்தில் நம் வாரிசுகளை சிதைத்தொழிப்பான். தங்கங்களே செவிசாய்ப்பீர். அவன் தரைப்படையை விரிய வைத்தும் நம் அங்கங்களை இரையெடுப்பான் ஆருயிரே அறியாயோ.  

      தலைகுனிவை நமக்களித்து மதையிலே கொக்கரித்து வாகை சூடி வலம் வரவே எம்மையன் பொங்கும் படையெழுப்பி புயல்போல் பொறி விதைத்து வேங்கைகளை அணிசேர்த்து அறம் புரண்ட அம்மாந்தர்களை ஒடுக்கிடுவான். எதிரிகள் எழுச்சியுற எள்ளளவும் இடம் கொடாதடக்கிடுவான். எழில் நிலமாம் இந்நிலமழிக்க எக்கொற்றவர்க்கும் வலிமை இல்லை. மிஞ்சும் மூவிழியன் மைந்தன் இங்கிருக்க 

        காந்தாரம் வந்ததொரு கலை கொடை தந்ததொரு மேற்காயமைந்ததொரு மேன்மக்கள் திருநாட்டின் இருநூறு மதிப்புடனே எழுத்துக்கள் பதினெட்டாய் ஈரலுண்ணும் சூரர்களும் வீரியமாய் விழி ஏய்த்து விருந்தாக தீனி தின்ன பிணக்கொடை தந்ததொரு பெருங்கூட்டம் எழுப்புகின்ற அழுகுரல் அலறல்களை அகமுடைந்து யான் கேட்டேன். அறனே நீ அகலாது அல்லல்களை அகற்றுவாயே.

       

பாகம் 78🌺

 நாற்பத்தோர் நாள் கழிந்தவுடன் நலமாய் உதித்த நம்மையன் ஆட்பட்டான் கொடும் நோய்க்கென்று. ஆறாது சீரழித்து அங்கம் முழுமையும் கொப்பளத்தால் சீர்கெட்ட சிற்றம்மை சிதைத்தது மட்டுமின்றி செவ்வேளிவனின் வல்லாற்றல் வற்றிப்போக வாய் விட்டு ஐயன் தனையே அழவிட்டு பெற்றம்மையுடன் விழவைக்க பெரிய அம்மை இல்லாத பெருமானுக்குதவிடவே சிற்றம்மை தயவாலே சீக்கிரம் மீண்ட வரலாறு உன் பேரறிவுக்கும் எட்டாது. சிலர் சிற்றறிவுக்கும் கிட்டாதென்பதனை பலர் செவிகேட்க கவி பதிப்பாய்.  பதர்மாந்தர் பாழ் செவிடாய் புவிநிறைத்து சேருமிடம் நமனிடமே தவியாய் தவிப்பதனை தடுக்கத்தான் நான் யாரோ. விழியை திறந்து விதியறிவாய். வேண்டும் வரங்கள் பெருகிடுமே ஒளியை கொண்டு உள்ளத்துள் உறைந்த அழுக்கையை அகற்றிடுவாய். ஒசையிலாது உய்த்திடுவாய் உண்மை விளம்பும் உத்தமனே.

 சாகாக்கால் கொண்ட சந்தன மேனி பூண்டு வேகாத்தலையுடனே விந்துகட்டி வித்துறைத்த சூடாமணி ஒப்ப சுடர்விடும் சூரியனாய் மாறா அறத்துடனே மன்னனிவன் எழக்கண்டு தேறா வெய்யர்களை தீதான் தேடி தின்ன ஆறா புவிமகளும் அலுக்காது இரையெடுப்பாள்.

    பூக்கள் வரம்பெற்று பூங்கா நிலமெழுமே. ஆக்கள் நலம் ஒங்க அன்பறம் தளிர்விடுமே. ஆசு குவித்து அறுவடை செய்தோரை மாசு துளிர்த்து மனம் கெட்டு காசு நிறைத்தோரை தீது தீண்டி தெரியாது ஓசையின்றி பிறர் அறியாது ஒழிப்பதனை உன்னருளால் கண்டேனே என்னிருளை அகற்றிய அகத்திய மாமுனியே.

      வற்றாத வான் நதிகள் வாரியோடும் நிலம் அமைய பொற்றாமரை பூப்பதுபோல் புவிநாதன் பூப்பானே. கிட்டாத நலங்களெல்லாம் கிடைக்க பெற்று  அட்ட திக்கெங்கும்   அழகான நீர்நிலைகள் முட்டியெழுந்திடவே முழுமையான  செழுமைதனை எட்டிபிடித்திடவே  இந்நிலமே எய்திடுமே.

        இதயம் கிழித்து எழில்கமலம் பறித்து உயிரை பிரித்து வெய்யர் வல்வேள் புண்ணீர் குடித்து மெய்யின் கழுத்தை மீண்டும் நெரித்து பொய்யர் ரதத்தில் பெருந்தொலை பறந்து  பொன்னாய் மின்னும் பூவை கொணர்ந்து இருளுள் புதைத்த பொல்லா வினையால் புவியே துயருள் வீழ்ந்து துடிப்பது விண்ணில் விதைத்த வீரிய விதியே.







Comments

Popular posts from this blog

பாகம் 124, 125 & 126ஆருக்குமஞ்சானவன் ஆல்லிப்பெருவிரல் வலதெம் அன்னை நிலம் நோக்க அகத்தலம் நோக்கின் முன்னழகு முகத்தோற்றத்தொடு முறக்காதுடன் இருகோடுடை எழில் களபமங்கு செங்குத்து பாகையில் சரிபாதி சாய்வினில் அங்குற்று அடியேன் கண்பறிக்குமே.

பாகம் 118, 119 & 120 ஒளிரும் கல்கி கனலென காணா அறம் பாராட்டி கண்ணன் முன்னம் காலூன்றிய கைக்கோடரி காவலன் தோன்றி கடை வரை கரம் தந்து செங்கோல் ஏற்க காரணமாவான் கடுந்தவம் பூண்டு. நீணிலம் காக்க நெஞ்சம் மிஞ்சும் நன்னெறியோடு நிலையா உலகில் நிலைக்கும் நீதி.

பாகம் 133 மலைவாழை மணக்கும் மணவீடே சிறக்கும் மகிழ்மண் செழிக்கும் கதலி கண் சிமிட்டி கரை எல்லாம் சிரிக்கும் நுரை ததும்ப குடகுக் குய்யமீன்ற புனல் குழலி புறப்பட்டு பொற்புடை சிலம்புச் செல்வி பூத்த புகாரை தொடும் இடையில் பொங்கும் வளம் கொழித்து புன்னகைக்கும் பழம் பதிக்குள் தன் பொற்கரத்தால் அயலார் அகம் குளிர அன்னமூட்டி அன்றாடம் குடி நகர்த்தும் அருள் அம்பையின் கொற்றவன் வீழ்ந்தும் குணம் வீழாது கொலுவுற்று கொள்கையால் தனிநின்று இருகண் மணிகளது இடர் நீக்கி இருள் தீண்டா திருக்கரம் தழுவும் சுடரொளியை வாதை தரும் வல்வினை வந்தணைத்திடாது ஈரிமையாய் அணைத்து இதயம் ஏற்கா இழியோர் நடுவினிலே பரிதியை ஈன்ற பைம்பொன்னன்னைக்கு இளமலர் குடத்துள் இட்ட விளக்காகி இறையருள் பெற்று இல்லறம் மலர்ந்திடுமே.