பாகம் 79, 80 & 81
பாகம் 79 🌸
வெண்தாடி விழுந்து தொங்க விரைந்தோடி தொண்டு செய்யும் எம் நாடி துடிப்பாய் வந்த எழில் தொண்டைமான் இவனை இன்முகத்தோடு எதிரே தில்லையன் ஆலயத்துள் தித்திக்கும் செம்மொழி பேச தீரனை ஒருநாள் கண்டேன். கண்மை கருநிற அடர் குறை குழல் கொண்டு ஐயன் தலையொரு சித்தன் சடையாய் சிறப்புற கண்டேன்.
உச்சி சிரசில் ஒழிந்த மயிரால் சொட்டை விழுந்த சொற்ப இடத்தை சொல்ல எனக்கு எல்லா அருளும் தந்த ஈசன் எந்தன் ஐயனின் பணிக்குதவி பாதம் தழுவி பணிந்து நிற்க ஆணையிட்டது அகிலம் அறியாது அன்பே நீயுமறிந்து கொள்வாய்.
வலக்கண் இமையில் வாழும் வெளிறிய கடுகினும் பெரிய வடிவில் மருவொன்று பெருமான் கண்ணில் உருவாய் கண்டு மாண்புடை மன்னவன் இவனென வியந்தேன். கழிசடை என்னை கடைக்ணால் கண்டு கருணை வீச ஈசன் சிலையை இருவரும் துதிக்க அவ்வினிய நாள் என் வாழ்வின் அருளுடை நாளாய் அடியேன் உணர்ந்தேன். மன்னவர் பணியும் இவ்விண்ணவ வேனேந்னை வேதம் மறைத்தும் வெளிகொண்டு வந்தததை எங்ஙனம் இயம்ப என்னால் இயன்றதோ என்றே எண்ணி உள்ளம் வியந்தேன்.
அகக்கை கொண்ட மரைப்பூவழகின் அளவை ஐயன் அறிய அகிலம் தெரிய செய்யும் விதியை செவ்வன செய்வேன். அதை வெய்யருமறிந்து வீழ்த்த நினைத்ததை மெய்யாயறிந்து மீண்டும் வெளியில் மேதினியறிய சொல்வேன். பொய்க்கா கையின் போற்றும் வரத்தை பூவே நீயும் புன்னகை பூக்க கேளாய். நடுக்கையுள்ளே நாவிரல் நீளமும்
இருவிரலகலமும் எழிலாய் கொண்ட திரு அமர் தாமரை என்பேன். பங்கயம் கொண்ட தாழிதழ் வலதில் சங்கின் வடிவாய் சிகண்டியின் தலையை சீருற கண்டேன். மரைப்பூ இதழ்கள் எல்லாம் அம்மயிலின் தலையில் பூவாய் வீரியும் புதுமையை கண்டு பூரிப்படைந்தேன் அறனே. தாமரையுள்ளே ஒளிரும் திருமுகன் கொண்ட அறுமுக கோணம் தெய்வ அருள்தரக் கண்டேன். மன்னன் அணியும் மணிமுடியொன்று இடது இதழ்களில் எழிலாய் பதிந்து எனக்கருளிட கண்டேன்.
பூண்டதிகம் சுட்டு பூரித்து உண்டி நிறைத்த மழலைப்பருவம் கொண்டு கற்பகக் கட்டிகளை எப்போதும் சுவைத்து உண்ட மதுரம் கவர்ந்ததொரு மழலைக் காலம் கொண்ட தருணம் அய்யன் வாழ்வில் தன்னிறைவைத் தந்ததுவே. இதனால் முன் பற்கள் சொத்தையாகி முன்பே கழன்ற கதை எம்போன்ற ஏழையர்க்கே இயம்பும் வரம் தந்த ஈசன் கருணைதனை எங்ஙனம் போற்றுவேனே.
சிங்க பற்களிரண்டு சீராய் வாயில் கொண்ட ஐயன்
அங்க அடையாளம் கண்டேன்.
அது இடைவெளி கொஞ்சமுமின்றி ஒன்றி
ஒளிரும் முத்தின் உவமையை உலகிற்கு தந்தேன்.
முப்பத்திரண்டை மொத்தமாய் கொண்ட ஐயன்
மெய்வாய் தன்னில் சொத்தையாகி கடைவாய்
பல்லொன்று வலத்தாடை மேலே வேரோடு தகர்ந்த
வெளியிடை கொண்ட விதியை யான் கண்டேன்.
செம்புலம் உறைந்த சீர்பெரும் மண்ணில் செழுநில செம்பருத்தி வேர்பலா விளையும் வீரிய மண்ணில் முல்லை வனங்கள் புன்னகை பூக்க பொன்ம்பலம் சூழ்ந்து புத்துயிரூட்ட அம்மையப்பனின் அகமெலாம் இவனை அன்பனாய் கண்டேன். அறனொடுவாழும் ஐயனின் அவலமறிந்து என்னகம் உருக இரு விழி ஒழுக பூவினும் மெல்லிய பொன் அகம் கொண்ட எம்மான் ஏழ்மையை எடுத்திடு அறனே தாய்மையின் சிவனே.
போரை தவிர்த்து பாரை மீட்க புவியை ஆளும் வல்லரசிற்கும் வல்லமையில்லா வாய்ப்புகள் வருமே. அதன் வேரை அறிந்து வெட்டி எறிந்து விழுதை கிழித்து வீழ்த்தும் எம்மான் வானளாவிய வல்லாண்மை தன்னை வானவர் சொல்ல அதை வாக்காம் இசைத்தேன்.
யாரும் வளர்க்கா அறனை வளர்க்க தேவர் இறக்கிய வள்ளலொருவன் வதனம் கண்டு வையம் முழுதும் வணங்கிட நின்று எந்தனகமே குளிர்ந்திட உணர்ந்தேன். இது நடப்பதும் உறுதி. நான் தரும் பாட்டு சிவனார் வாக்கென செவிசாய் மனமே.
உலகம் முழுக்க அழுகுரல் கேட்டு உள்ளம் வெடித்து கண்ணீர் வடிப்போர் அபரிமிதமாய் அகிலத்தில் கண்பது ஐயன் வரவை அருகென சொல்லும் அடையாளமிதை முன்னறிவாய் நீ மும்மலம் போர்த்திய மூடமனமே. இதை உரக்க சொல்ல ஒரு நொடி தருவாய் பெண்மையை பாதி மெய்யிலில் சேர்த்து பிறைமுடி ஏற்று விந்தைகள் புரியும் எந்தை நீயே எதையுமறிவாய். கறைதனை அகற்றி கண்ணீர் துடைத்து கரைசேர் அறனே காக்கும் சிவனே.
பாகம் 80🌸
நீலக்கரையோரம் கீழ்திசை நெடுஞ்சாலை கடலோரம் பால்போலகமுடையானிவன் ஒருமையில் வாழ்ந்த இடம் அரங்கன் தோட்டமுடன் தெலுங்கன் குலமிணைந்த தலைநகர் மருதநிலம் அருகே வானின் நிறம் கொண்ட வரதன் உறங்கும் இடம் வரம் மிகு திருவிடந்தை புரம் காதம் ஒன்றரைதான் தொலைவாய் அருகில் வரும். இக்கோவில் தலமிங்கு இவன் பலநாள் வந்து போனதனை யான் கண்டு அகமகிழ்ந்தேன் என சொல்லமுன் வந்தேன்.
வரைநெடுக வன்பாவம் வானளவு குவித்தார்கள் வாய்மொழி கடும்சாபம் மேன்மேலும் எடுத்தார்கள். குலை நடுங்க ஆட்டமிட்டு நடுநிலைமை குடைசாய கலைகற்ற சூனியத்தார் நிலைகொண்ட நீள்பரப்பாம் மலை நாடு அழிந்தவுடன் மலை மொழியார் மிஞ்சியதில் மனம் வருந்தி திருந்திடுவார். கொலையாளி குணங்கொண்டு கொலோச்சி மனம் கெட்டோர் கோட்டைதனை அலையாழி அழிக்கும் திடம் அதில் மிஞ்சுவதோ சொற்ப இடம். புவியாள வந்தவனை புண்ணியம் செய்தவனை சதியாலே கொலை புரிய துணை போகும் சூழ்ச்சி பல செய்தவரை மதி வெல்லும் விதியிருக்க வேந்தர்களும் வீழுகின்ற பூங்கரத்தான் சங்குடையோன் புதையாமல் முளைவிடுவான். இழிமக்கள் குழி பறித்த இடமறித்து சூறையாடும் சூது கொன்று வினையறுக்கும் வேலனும் எமக்குண்டு. மனைமுழுக்க மாளாத மந்திரத்தால் தகடிறக்கி விதைத்தாலும் விளையாது வீணடிக்க வேண்டுவோர்க்கு நலம்புரியும் மாலனின் துணையுண்டு. புவிமுழுதும் காவல் காக்கும் போர்குணத்தால் தலைவிரித்த காளியருள் கணிசமுண்டு. இதனால் ஞாலமேற்க நயந்துவரும் நாதன் தனை அரிந்து கொல்ல நாள் பார்க்கும் வீணர்களின் விபரீதம் விரியாது வீழ்ந்திடுமே.
வரமேற்ற வான்மகனின் வலக்கை மலர் தன்னில் சுட்டு விரல் தாழில் சொலல்வல்ல மேதைகளின் மோதிர வளையம் கண்ட குருமலை பரப்பெங்கும் கூர்சூலம் பரந்திருக்க அதன் பேரெழிலை யான் சொல்ல நேர்வழியில் வந்தேனே. நீளம் கொள் திரிசூலமொரு விரலிடை கொண்டாலுமதன் கரப்பிடியோ காண்பதற்கு அரை விரலகலமென அரவேந்தி அருள்பாட அதை அப்படியே பகர்த்தேன் யான். அம்பையின் ஆயுதம் செங்குத்து பாகைக்கு சரி பாதி சாய்ந்தாலும் சீராய் சூரியனின் சிறுமேட்டை கூராய் குத்த நிற்கும் கோலம் கண்டு யான் வானத்தை வணங்கியது வரம் வேண்டி பாடிடவே வானவரே வழிமொழிக. ஐங்கரனின் நாற்கரமும் திரிசூலக் கைப்பிடியில் சிறப்புற அமைந்ததைத்தான் செப்ப என்னில் வார்த்தையில்லை அற்பர்களோ அறிவதில்லை.
பாலைப் பிழிந்து தரும் பாழாக்க பூங்குழியை விரித்து தரும் பாவையின்பம் தனை துறந்து ஓயாது சேவை செய்ய யான் ஒருபோதும் தளரவில்லை. எப்பொழுதும் உனை நினைந்து முப்பொழுதும் பாடுகின்ற கற்பகத் தமிழ் வேண்டி யான் காலடியில் தவம் கிடப்பேன். எந்நிலையும் கையாளும் நிகரிலா நிபுணனிவனை கண்மணியாய் காத்திடுக. கரம் கூப்பி வேண்டுகின்றேன். ஒருமைப்பாட்டை இன் உலகில் விதைத்து சிறுமையை சீராக்கும் சித்தன் இவனென மொத்த வாக்கு தந்து முன் மொழிவேன் பரம்பொருளே. வறுமையை வேரறுக்க வான்வரம் வாங்கி வந்த இவ்வருந்தலைவன் பெருமைதனை பரணிபாட நாளை தரணியர் முன் வந்துநிற்பேன். தவறாது எம் வாக்கு தழல் விழியன் தவறினாலும் சிதறாது எம்சிந்தை சிவன் தலை சிதறினாலும் பதறாது எம்மகம்தான் பரந்தாமன் பதறினாலும் உறையாது உள்ளம் தனில் ஊறியதை வெள்ளமென திறந்துவிட்டேன். அறியாது போகலாமோ
இப்புதிரை ஆர்வலரே அவிழ்த்திடுக.
பாகம் 81🌸
பொதிகை தென் மலையில் பூத்தோடும் புனிதவதி பொங்கி எழுவதுண்டு. ஆங்கு அறனை வளர்க்க வேண்டி அருளாசான் அங்கமொரு அழலாய் அங்குமிங்கும் உலவக்கண்டேன். திறனை ஒன்று சேர்த்து அத்திருமகன் தான் கடன்பட்ட வித்தை கொண்டு வேண்டும் வரம்மேற்க வளர்பிறையில் எம்மையன் வரும் வரைக்கும் வரைநெடுக வழிமேல் விழிவைத்து வாசம் செய்யும் அப்பொன்னசான் பொறையுடை பொறிமுகம் யான் கண்டேன். அருள் விழுதை தானிறக்கி விண்ணக வரைவுடன் பழுதை தீர்ப்பதற்கே பாருக்கு விளக்காவான் இப்பங்கய முகத்தான் என்பதனை தொழுத கரத்தோடு தொடர் அழுத்தம் தந்தேனே அருளாளர்க்கருள் புரியும் அளப்பரிய பரம்பொருளே.
இவன் புகுவது சிவனின் மலையென்று செவி ஏய்க்க கூறிடுவர். ஈசனின் மலைக்கோராயிரம் வாசனை பேரிருக்குமதன் வாசலறிந்தேன். அதிலொரு அரும் பெயராயிருக்குமென பெருங்கண் புண்ணான பிறவியர் அறியாரே. பிறைசூடி பின்னுமொரு நதிசூடி கலைநடனாடியே காலொன்றில் நிற்கின்ற மாமலை தலையோனே ஏனெமை பாரது ஏய்க்கிறாய் ஓயாது.
கண்கவர் தேரை தந்து களிக்கும் நல்லமுதை ஈந்து பெண்களை மயக்க விட்டு பெருமானின் முத்தொன்றை அருகாமை கயவர்களும் ஆருமறியாது கைக்குள் வைத்ததனை அடியேனே அறியும் போழ்து வஞ்சகர் திட்டமிடும் வாசத்தை நுகர்ந்தபடி நெஞ்சினில் அரும்புகின்ற நெறிகெட்ட எண்ணமெல்லாம் கொஞ்சமும் பிசகாமல் இக்கொற்றவன் அறிவானே.
குன்றில் அமரும் குணக்குன்றான் கோல மயிலுடை கண்டமொரு சுவரில் செங்கமலம் அமர் செல்வமகள் திருக்கோடும் மறுசுவராய் ஊழ்வினை கோடும் ஒற்றியெழ அதன் இறுதியில் காணும் எழில்வேள் அமர் சிறப்புடை மயிலின் அங்கமே தென்னாடுடையோன் திருமெய் இலிங்கமே அங்கும் பாய்வது பாற்கடல் தேவியின் ரேகைதான் தங்குமே. அது பார்வைக்கு பார்வதி கைபிடி சூலமாய் தொங்குமே பீலிப்புள்ளின் மேனியுள் பாய்ந்து மீண்டும் கண்களை கொள்ளையிடுவதை இன்னமும் தெளிவாய் இயம்ப இயலுமோ. அலகொடு மயில் தலை ஒன்றரை விரலிடை அதன் கண்டத்தினகலம் கைவிரல் அரையாய் நீளமறிவாய் இரண்டு விரலிடையென உள்ளதை உனக்கு உணர சொன்னேன். உள்ளிடும் உள்ளீடு உண்மையாயமைய உமையொரு பாகனை உதவிக்கழைப்பாய் உயிரோடவனுடன் இரண்டற கலப்பாய்.
தங்கையின் கையில் தகாத பொருளும் தரம்குறை பொன்னும் அகலாது மின்னக் குவியும் மீட்கும் இச்சிறுத்தையின் உயிர்க்கு செழு நிதி பெறவே அழுக்கு நெஞ்சுடன் அறம் கொல்ல துணிந்து அன்பை மறந்து ஆடும் உறவை அடியேன் கண்டேன். கயமை அணிந்த கரடு மனங்கள் கண்ணீர் விடும் நாள் அண்மையில் வருமே. இவன் பெருமையறியார் பெருந்துயருறுவர். எழும் பகைவரெவரும் பாழாய் போக மறுமை கொண்டு மண்ணில் வீழ்ந்து மீண்டும் உழன்று மேதினி நிலைக்க விதியை இவரே வேண்டிமைக்கும் கதியை கண்டேன் காக்கும் அறனே.
நெருப்பாய் உடல் படுக்க நீழ்விழிகள் தெற்கமைத்து நெடுந்தவம் பூண்டு கருக்கல் வேலையிலே கருணாமூர்த்தி கடுங்கானகம் நடுவே கனலென எழுவானே. தருக்கள் தோற்றுவிட தாளாளன் கொடை குணமே மேலோங்கி மேம்பட மையகிழக்கின் மைந்தரழுகையை கைவைத்து துடைக்கும் கனிவை இவனிடம் கண்குளிரக் கண்டேன். தரணியில் நிலைகுலைந்த தையல் முழுமையும் மனம் குலைந்து போனதனால் தயை காட்டும் தாயெனவே மலையளவு கருணையுடன் மார்புறைய வருவானே நிலையிலா நீடுலகில் நிலைக்கும் பரம்பொருளே.

Comments
Post a Comment