பாகம் 85, 86 & 87 பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் வரும்.
பாகம் 85🌸
உள்ளம் சிறிதும் உறுத்தாது உத்தம அணில்கள் என்றறிந்தும் உளவுப் பூனைகள் புசித்திடுமே. வெள்ளைப் பூனைபோல் வேடமிட்டு வீணர் கைதடியாய் நின்று விபரீதத்தை விதைத்துவிட்டு வேண்டுமென்றே உடல் வளர்க்கும் கோரப்பூனைகள் கண் சூழ எம் கோட்டை சாமி நடப்பானே. மண்ணே வணங்கும் மனிதரையும் மாண்பு கொண்ட புனிதரையும் கண்ணிமைக்கும் நேரத்தில் கல்லறை கட்டி முடிக்கின்ற கயவர் காலடிப் பூனைகளை கண்ணீர் ஒழுக யான் கண்டேன். பூனைகுட்டியும் தப்பாது யானைகூட்டமும் தப்பாது எல்லாம் புவியுள் புதையுண்டு இருந்த இடமே தெரியாமல் புல் பூண்டும் முளைக்காத புண்ணீர் பூமி ஆனபின்னர் பூப்பான் ஒருவன் பொதிகையிலே. போர்கள் சூழும் உலகத்திலே. இதை யாரும் அறியாதிருந்தாலும் அவ்விருவிழிகெட்ட இழியோர்கள் ஐயன் விதியை அறிந்ததைப்போல் அளைத்தும் அறிவேன் பரம்பொருளே. கையும் களவுமாய் சிக்கியது அவன் காலடி பதிந்த மலைநாடு. அந்நாட்டுலோடும் வட்டாறு. அங்கு வந்து போனதாய் வரலாறு உண்டு என்பதே என் பாட்டு உன்னிப்பாக நீ கேட்டு உள்ளக்கோவில் தளம் போட்டு அவ்உத்தமன் ஒழிமுகம் வரை வாயே.
நாகம் உண்ணும் குறு நிலத்தை நன்றாய் கெடுத்த வடநிலத்து வேடனொருவன் விரைவானே. வேந்தன் விரியும் பொன்னிலத்துள் வீரியக்கதிரின் பேர்தாங்கி காரிருள் நெஞ்சை உள்வாங்கி கடன்பட்டதொரு கைத்துப்பாக்கி உரிமையை ஒடுக்கும் ஓநாயாய் உண்மையை ஒழிக்க முயன்றபடி விடத்தை விதைத்து அழிந்தோரின் வெகுவான வரிசையிலே அகந்தை கொண்டு அழிவானே அறம் பாடி பாட்டாலே. ஆக்கையோடு எரிவானே எம்கரம் அவன்மீது பட்டாலே. தடத்தை யானே கைகாட்ட குடத்துள் விளக்காய் எரியாமல் குன்றின் விளக்காய் அமைவாயே. முடத்தை நீயே கண்டுபிடி மூலாதார கனல் எழுப்பி ஆயிரம் இதழ் சூழ் கமலத்தை ஐயனுக்கென்றே அற்பணிப்பாய்.
நாசன் கலியின் உறைவிடமாய் நமனின் பாசப்பிணைப்புடனே பாவம் மலரும் இடம் கண்டேன். மதுவிடம் வழியும் மாடத்திலும் மன்மத விற்பனை கூடத்திலும் உயிர்பலியிட்டு ஊன் விற்கும் உணர்ச்சியற்றோர் நரகத்திலும் கனகம் குவித்து கண்ணிழந்தோர் புழங்கும் மானிடர் மத்தியிலும் தினமும் பெறுமே பெருவிருந்து
தேடி அலைய தேவையில்லை.
துயிலாத சிவன் அடிகள் தூண்டுகோலாய் பின்னிருக்க உருகாத உள்ளம் உண்டோ சிவனில் இணையாத மானிடமே இடருறும் நிச்சயமே.
பாகம் 86
🌸 சுற்றமும் அரவாகி சூழ்ச்சியில் வலைபின்ன சுற்றிலும் பகைசூழ சற்றுமே நினையாத முற்றமே முரணாக முல்லையில் விடம் விரிய சித்தர்களருளாலே சிவனொடு மொழிபேசி உற்றவரெவருமின்றி உயிர்த்தெழும் கற்றதோர் கலைதான் இங்கு கண்மணிக்கு கைகொடுக்க சூட்டெரிக்கும் சூரியனார் மெய்யெடுக்கும் சூத்திரமறிந்தே மூலவனாய் எழுவதனை மாலவன் முன் பிறந்து தன் மாணாக்கன் ஆக்குவது மலை பொதிந்த பொருநை வாய் உமிழ் நீர் ஊறிடும் உயர் வரை என்று சொல்லி உண்மையை கக்குகிறேன். அமரரே மன்னியுங்கள் அடியேன் அடிகளில் பிழையிருந்தால்.
🌸 மண்மீது மட மாந்தர் மெய் முழுதும் விடம் புகுந்தி வேதிவினையறுக்க அதை வேந்தர்கள் சலுகை பெற்று வேண்டுமென்றே ஊக்குவிக்க பெரும் வணிகம் மேலோங்க பெறும் கொள்ளையர் ஆரவாரம் செய்திடுவர். பணம் பொழியும் பன்னாடும் பகுத்தறிவுக்கு தடை போட சினங்கொண்ட சிங்கமவன் சதியறிந்து வலை கிழித்து மலை புகுந்து ஒளிபெறவே ஓராண்டு உள்ளிருந்து உடல் பெறுவான்.
உடலோடும் ஔடதமே உயிர் பறிக்கும் பின்னாளில். அது முழு அறிவை கைப்பற்றும் அணுவளவே வடிவான அவ்வுயிரி உருமாறி தலைச்சோற்றில் சென்றுறைந்து தான்தோன்றித்தனமாகி தரணி மாந்தர் கூடு இயக்கி கொடுமை செய்யும் கோரத்தை கூத்தனருள் வாக்கு தத்தம் கூறுகின்ற அறம்பாடி கோடு காட்டி எச்சரித்தும் கொட்டமுடை மாந்தரிதை கேளாது போகலாமோ. கெடுதல் தரும் ஊழ்வினையால் பாழாய் சாகலாமோ பாரெல்லாம் பரம்பொருளே.
🌸 மணி கட்டிய பூனை ஒன்று மால் வண்ணன் பெயரெடுத்து மாநிலத்தின் தெற்கு வந்து அணி சேரும் அறங்கொல்லும் அண்ணனுறை கொடியோடு அணிவகுக்கும் திருவுறை மலர் சின்ன உருவுடை கொடுங்கோலன் கூலிக்கொலைஞர்க்கு பைங்கொடி காட்டி பாவப்பொருளீட்டி ஐயன் உயிர் பறிக்க இயலாது இடம் பெயரும் இழிமகனை யான் கண்டேன். அவன் கொங்கில் விரிந்ததொரு கொலை வல்லான் என்றறிவேன்.
🌸 உடல் உண்ணும் கடல்மகளும் ஒளிவீசும் மகனிவன் வருகை தந்தால் மழலையை மார்பணைக்கும் குலமகள் அன்னையென அலைகரத்தால் அரவணைத்து அன்புடனே தாலாட்டும் கலை களஞ்சியம் இவன் என்று காதுக்கு சேதி தந்தேன்.
🌸 பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப
சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று
சீக்கிரம் மண்ணில் வரும்.
இயல் அன்னை பிரிந்ததாலே இன்முகத்தான் அழுததாலே கயல் விழிகள் கரைந்ததாலே காக்கும் குல ஏவல் தெய்வம்
கை கட்டிநின்றதாலே கடும் நோய்கள் கடல் தாண்டி
உடல உண்ண வரக்கண்டேன்.
கற்பக நிலமாகும் காலம் வெகுதூரமில்லை.
பொற்கிழியே பொறுத்திருப்பாய். புண்ணியவான் பூத்துவந்து புவி எங்கும் பறக்க வைப்பான்
பைங்கிளிகள் போலே உன்னை. உண்மையிது பொய்யில்லை.
அதுவரை பிச்சைகள் வாங்கியே என்னரும் பிள்ளைகளழுதிடுமே.
சிவனார் துணிவுடனே சித்தம் தெளிந்து நானிருப்பேன்.
பித்தம் தெளிந்து நீயிருப்பாய்.
பிறைசூடி பெருமானின் அருமகனின் குறிப்புகளை
மறை நூல்கள் மறைத்தாலும் மறைக்காது யானுரைப்பேன் மன்னுயிரே செவிசாய்ப்பாய்.
பாகம் 87🌸
மழைக்கு ஒதுங்கிய மானிடராய் வடக்கு தூவிய வணிகர்களும் வன்மம் கொண்டு வாழவைத்த தலைக்கு நிகராம் தென்னிலத்தை தகர்த்து எறியும் காலம் வரும். அதைத் தாங்காது துடி துடிக்கும் தக்கதோர் நேரத்திலே வெடிக்கும் நிலமே வாய் பிளக்கும். வானம் அதிர்ந்து வலுவாக அண்டம் நடுங்க எக்காளம் எங்கும் ஒலிக்கும் இயல்பை கேட்டேனே.
🌸 நினையாத நாழிகையில் நினைக்கின்ற மாந்தருக்காய் மதயானை தோரணையில் மண்மீது வெடிப்பானே. உருகும் தெற்கில் தீ வளர்த்து தரும தேவன் வருவானே. காசிநாதன் அமர்ந்திருக்க கடலலை அவனின் காலடியை தீண்டி செல்லக் கண்டேனே. கணக்கை தந்தேன் விடை காண்பாய். கண்முன்னே விதை காண்பாய். உயிர்ப்பிக்கும் அருமருந்து ஊசலாடும் உறியடியை ஓசையின்றி யான் சொன்னேன். புயல்போலெழுமென் குலக்கொழுந்தை பழிக்கும் பற்பல புல்லுருவி படிந்ததொரு பொன்னிலத்தில் பாழாய்ப்போன புதர் கண்டேன். இந்நிலத்தில் ஆடிடுமே இழிமொழியர் பற்பலராய் எலும்புத் துண்டுக்காசைப்பட்டு மென்னிலத்தை வன்னிலமாய் மெல்ல மெல்ல மாற்றுவரே. மேதைகளே அறியத் தவறினாலும் இதை ஞானியர் அறியத்தவறுவரோ. வாதைகள் வரட்டும் எதிர் கொள்வான். எம் வான் மகன் அதற்கொரு விடை சொல்வான்.
🌸 கல்கியாய் இங்கிவன் பிறந்ததனால் கடவுளாய் கோவிலுள் யார் இருப்பர். தருமியாய் தெருவினில் இரந்தனால் கருவறைக்குள்ளே யார் கிடைப்பார். யாசகனாகி வந்தாலும் எம்மான் மாமன்னன் என்பதை யாமறிவோம். தெய்வமே மானிடன் ஆனதனால் திருத்தலம் எல்லாம் தொழுகையின்றி தோரணை தொலைத்தது ஊழ்வினையே. தோற்றம் இழந்தது வான் விதியே.
🌸 நன்னயம் செய்த வண்ணம் நல்லறம் காக்க வந்து நாயோரால் இகழப்பட்டு நரியோரால் சூழப்பட்டு பேயோரால் பீதியடைய பீடையர் இனம் நடுவே பிறப்பெடுத்த ரகசியத்தை தாயே நீ எனக்கு சொல்ல அம்மாயோனை கண்டுகொண்டேன். உறவாடி உயிர் பறிக்கும் விடமாந்தரினந்தன்னில் உதித்தவன் நல்லுயிரை உன்தயவாலே பேணி காத்து தகவிலா வெய்யர் தன்னை கொல்ல அங்கு கோடு போட்ட கூர்பல்லழிகியுன் பெரும்புகழை பாட்டில் சொல்ல பேரருள் புரிய பாதம் பணிந்து பாடுகின்றேன்.
🌸 அனைத்துயிராதாரம் ஐந்தையும் அழித்தொழித்து சேதாரமாக்கும் சிற்றலை பாய்ந்து பேராபத்தை தர மன்னுயிர் மட்டுமின்றி மற்றுயிர்களும் சொல்லொண்ணா சூடுதழல் பட்டழிந்து சூழலுக்கு உலை வைக்கும் பாழுலகை கண்டு பதைத்தேனே பரம்பொருளே.
🌸 வல்லரவு அணுவாகி வாழ்கின்ற இடம் கண்டேன். பொல்லரவு பூரித்து புதுப்புது வடிவெடுத்து புகுந்து கொல்ல பூந்தளிரே புறம் காணா நிலை கண்டேன்.
பெரும் தொற்று பிணம் குவிக்க பீதியில் நெஞ்சுறைய அருமருந்து வாராமல் அழுதிடுமே எம் குழந்தை. அவலத்தின் ஆழம் கண்டு அரவம் தரித்தோனின் புருவமிடை விழிதிறந்து அருள்வாக்கு யான் சொல்வேன். புவனத்தை மீட்டெடுத்து புத்துயிரூட்டும் எம்மான் வதனத்தை வையத்தார் காணும் வரை வாய்பொதிந்து மூக்கணாங்கயிறிட்டு மூச்சினை அடக்கியே முழு உலகும் ஓடுங்கிடுமே. அதுவரை வானளவு அதிகாரம் வைத்திருக்கும் நாடுகளும் தேனிலவு சுகம் கண்ட திருமகள் குடிகளும் தீது தீண்டி திண்டாடி பொலிவிழந்து பொருளிழந்து அருளிழக்கும் அல்லல் தன்னை அடியேனும் கண்டேனே அளப்பரிய பரம்பொருளே.
🌸 நானே சொல்லியும் நம்பவில்லை. நாளை உலகை ஆளுவது நற்றமிழ் காக்கும் தேவனென்று நமனே வந்து நீ சொல்லு. தேனே ஒடும் அத்திருநாடு தேடினாலும் இன்று கிடைக்காது. மானே மயிலே அவன் துதிபாடு. அம்மன்னன் வருகைக்கு அறம்பாடி வானோர் வாக்கினை வரவைக்கும் இவன் திறம் பாடி தேற்றிவிடு.
Comments
Post a Comment