பாகம் 94, 95 & 96 மடம் அமைத்து பணம் பறித்து மனம் ஈர்க்கும் அற்ப வேடம் அய்யன் அவனிடுவதில்லை. தீமைக்கு துணைபோகும் பேய்களுக்கு பலிகொடுத்து தெய்வத்தின் திருப்பெயரால் அருள் வாக்குரைப்பதில்லை. வேத விற்பனனாய் விடியும் வரை வேள்விகள் வளர்ப்பதில்லை. நாதன் நானென்றுரைப்பவ னெவனும் நம் நாதனுக்கிணையில்லை. நாயகன் இவனென நாரணன் உருவென நான்முகனே நன்கறிவான். பின்னேனிதை சொல்லவந்தேனென்பதை பேரவாவில் நீ வினவ பாரறிய யான் பகர்வேன். தானே அத்தலைவனென்றும் தரணி மீட்பன் தானென்றும் ஒப்புதல் வாக்கு மூலம் ஒருபோதும் உதிக்காது இவ்வுத்தமன் வாயில் என்றும்.
பாகம் 94
🌸 இரண்டாம் மலராக எம்மானில்லாள் சூலகத்துள் கொடையாலுறைந்து கூதிர் காலத்தில் குறையாய் மலர்ந்தும் மலராது மண் பாரது சிதைந்திடுமே அம்மலர் மதி சிறையுள்ளே. பேடைப்புறாவாகி பின்னம் பிறப்பெடுத்து பெருமான் முற்றத்தில் வளர்ந்த கதையறிவேன். வானவருமிதைறிவர். வானில் பறக்க ஒண்ணா வன்சீக்கு தாக்கியதால் விழிகளிழந்தவளாய் மலர்ந்த மாசுறு மண் வீட்டின் ஆசுறு வினையறுத்து அவ்வீடு சேர்ந்ததனை ஐயனும் நன்கறிவான் அக்கதையை அடியேனும் நன்கறிவேன் .
🌸 எம்மான் இடம்பெயர்ந்த இல்லத்தருகிலே இருநூறு கைமுழம் தொலைவிலே இணைபிரியா இரும்பு வடம் இரட்டையர் போல் கிழக்கு மேற்காய் தடம்பதிக்க அவன் வாசலுக்கு வடதிசையில் இழுவை வண்டி நாளிகைக்கு ஒன்றாக நடுநடுங்க விரைந்திடுமே. அது அரவரசன் ஆலயப்பதியையும் அனந்தனுறை அருள்மிகு புரியையும் நாற்காதம் நீளத்தில் நன்றாய் இணைத்திடுமென்பதனை நாதர்முடி மேலிருக்கும் நல்லரவன் எனக்கு சொல்ல நானிதை நம்பி வந்த நன்மகன் உனக்கு சொல்ல நம்புவதும் நம்பாததும் நாளை விடியும் போது நாடறிய தெரியுமைய்யா. நான் பாடும் அருள் வாக்கு அப்போது புரியுமைய்யா.
🌸 நிலத்தாமரை மணம் வீசும் நெடுமலையை தலைப்பாகையாய் யணிந்த வட புலத்தில் வாழுகின்ற மலர் முகத்தில் திரையிடுவோர் பல காலம் படும் துயரை ஒருக்காலும் பொறுக்காது உளம் கொதிப்பான் எம்மைய்யன். அங்கு கமலம் கையாண்ட கர்வத்தில் கண்ணீரொடு உதிரம் குடிக்கும் ஓநாயினங்களின் உயிர்பறித்து ஒறுத்திடுவான். இமயத்தலை தாங்கி இமைபோல் எமை காக்கும் உமை ஒரு பாகன் தலைமீது ஆணையிட்டேன் தங்கமே நீ கேளாயோ.
🌸 நம்மைய்யன் மலைபோல் நம்பியவர் அனைவருமே நட்டாற்றில் விட்டதனால் நம்பி நம்பி ஏமாந்து நம் நாதன் மனம் நொந்திடுமே. நாளெல்லாம் நினைத்த வண்ணம் நல்லியதயம் வெந்திடுமே. நம்பிக்கை தகர்த்தவராய் நண்பர்களனைவருமே நன்னெறிக்கெதிராக நன்றி கொல்வார் பொன்மகனே.
🌸 காவிரி நதியை கைது செய்து கமண்டலத்துள்ளே அடைத்த முனி பாதியை பொன்னியாய் தவறவிட்டு மீதியை கொண்டு பொதிகையிலே மீன்களோட விட்டதொரு திரிகூடன் மாமலையுள் திரிந்தலைவான் கால் கடுக்க தீரன் எம்மான் தேர்ந்தவனாய் வீரம் விளையும் மண் காக்க; வேண்டும் நல்லோர் நலங்காக்க ஈரமுடை அகமுடையான்.
🌸 சுத்தமாக்கி இப்புவியை பக்திமயம் ஆக்கிடவே ஐயன் சத்தமின்றி புறப்படவே யுத்தம் உடன் நடைபெறுமே. நித்தமும் போர் மேகம் நிலமுழுக்க சூழ்ந்திடுமே. நெஞ்சடக்கி புலனடக்கி நெடு வரைக்குள் குகை புகுந்து கொற்றவன் தவம் செய்ய கூற்றுவன் விருந்துக்கு மற்றவர்கள் பட்டினியால் மண்மீது மடிந்திடுவர். கெட்டவர்கள் கொள்ளையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி கொள்வர். பெண்டிற்கு காவலின்றி பிறப்புறுப்பு புனிதம் கெட கண்டவர்கள் களவாடும் கருணையிலா கொடும் செயலலை கண் சிவக்க கண்டேனே காத்தருள்வாய் பரம்பொருளே.
பாகம் 95🌸
உலகிற்கொளியேற்ற உதயமான பொன்மகனை ; உங்களுள்
ஒருவனாய் ஒழிந்திருக்கும் பன்முகனை ஒருவராலும் இனம் காண இயலா தென்மகனை என்னாலியலும் என்பதனை இறையானாரே நன்கறிவார் என்பதனை நீயறியாய். என்புதோல் போர்த்திய இன்னுடலில் இருளகற்றும் சக்கரம் சுழலாது மிலேச்சனாய் இருந்து மேதினிக்கென்ன பயன் ?
🌸 ஆண்டியின் கூட்டத்தில் அருளாளன் அவன் மலர்வான். அம்புலியன் இருள் மாய்த்து என்றென்றும் உடனிருப்பான். வேண்டும் வளமனைத்தும் வேண்டுவோர்க்கு விளைந்திடவே விண்டுவின் தேரணையை அவன் தரித்து வீரிய கல்கியாய் உருவெடுப்பான். ஐயன் நீதி அங்குறை தேவருக்கும் பீதி தரும் மேன் நீதியாதலால் மாண்புடையோர் எம்மவனை மன்னவனாய் வணங்கிடுவர்.
🌸 மடம் அமைத்து பணம் பறித்து மனம் ஈர்க்கும் அற்ப வேடம் அய்யன் அவனிடுவதில்லை. தீமைக்கு துணைபோகும் பேய்களுக்கு பலிகொடுத்து தெய்வத்தின் திருப்பெயரால் அருள் வாக்குரைப்பதில்லை. வேத விற்பனனாய் விடியும் வரை வேள்விகள் வளர்ப்பதில்லை. நாதன் நானென்றுரைப்பவ னெவனும் நம் நாதனுக்கிணையில்லை. நாயகன் இவனென நாரணன் உருவென நான்முகனே நன்கறிவான். பின்னேனிதை சொல்லவந்தேனென்பதை பேரவாவில் நீ வினவ பாரறிய யான் பகர்வேன். தானே அத்தலைவனென்றும் தரணி மீட்பன் தானென்றும் ஒப்புதல் வாக்கு மூலம் ஒருபோதும் உதிக்காது இவ்வுத்தமன் வாயில் என்றும். பொய்யருடன் புல்லரும் பொருள் குவிக்கும் போலிகளும் தானே அவன் என்று தம்பட்டம் அடித்து நிதம் தயங்காது தரங்கெடுவர்.
🌸நான்முகன் குமரிகளாய் நறுவெண்ணெயுடையணிந்து மேன்மக்களை குறிவைத்து மீட்பர் வேடமிட்டு மிடுக்காய் நல்லான்மீகம் போர்த்தியலையும்
பொல்லார் கூட்டமொன்றும் உத்தமனிவன் உயிர் பறிக்கும் திட்டமுடம் உலவியதை என் தீக்கண்ணால் தெளிவாக யான் அறிந்தேன்.
🌸 இளம்பருவம் தன்னில் இசை கருவியொன்று விரல் தழுவி இனிக்க வரும் நன்று. பள்ளிக்கு பின்னும் பல்கலைக்கு முன்னும் பதமலரால் பந்தாடி பெற்ற பற்பல பதக்கங்களும் உண்டு. இறகுகள் பறந்த வண்ணம் எழுப்பி களியாடும் திறன் படைத்த வல்லானிவனை கலையே வடிவுடை கல்கியென யான் சொல்வேன். கண்ணிருந்தும் கண்மணியை காணயியலாதார் கண்திறப்பாய் பரம்பொருளே.
🌸 காளையாய் கழித்த காலம் கடும் காமம் மேலோங்க மானமழிந்த மாழைக்கூட்டம் மன்னனுக்கு புணர்ச்சி தர பால்வினை விடத் தாமரையும் படர்ந்து வர பத்தரை மாற்று பைம் பொன்னங்கத்தை பாழ்படுத்தி அண்ணலை அலைக்கழித்த அவ்விதியை யானறிவேன். முருகப்பன் முழு வரத்தான் முத்தமிழ் வளர்த்து வந்த மூலப்பொருநையை ஈனும் மலையிடை தீர்த்தம் கொண்ட பொதிகை வாழ் திருமுனி பூதேவிக்கு சித்தமாயருளிய சிவமருந்தால் சிதிலமடைந்த சிந்தாமணி நறுமேனி நலம் பெற்ற நல்விதியை நானறிய நல்லோருமறியட்டுமே பரம்பொருளே.
🌸 பசி அறியா மாந்தர் கூட புசிக்க உணவிலாது புரண்டழுவர் பட்டினியின் பிடியில் சிக்கி படாத பாடுபட்டு நசி என்றும் பாராமல் நாடு விட்டு நாடு சென்று நாய்படாத பாடு நலவாழ்வடைவாரே. அகிலம் முழுமையும் போர்கள் வெடிக்க அழுகுரல் பூமியில் எங்கும் ஒலிக்க விதிகள் தளர்த்தி வேந்தனை தருமே. வீட்டுள் முடங்கிய ஐயனை விடுமே.
🌸 இரு நிலத்திற் உடல் பதித்த இணையிலா உறு நாட்டில் முத்திரையிட இயலா முகம்படைத்தோன் அரசனாகி அகமுறை ஆணவத்தால் ஒட்டிய குறுநிலத்தை உரிமையொடு
அடக்கியாளும் பெரும்போரால் பேரண்டம் எரிந்திடுமே. அது மொத்தமும் அணைய மூன்றாண்டுகள் முடிந்திடுமே. முக்கண்ணன் ஆளும் முழ உலகை மூர்ச்சையாக்க மூடர்கள் முயன்றாலும் முத்தமிழ் வேந்தனவன் முற்றிலும் அகற்றியே சுற்றிலும் அறம் வளர்த்து சுடர் வீசும் நலம் பதிப்பான்.
பாகம் 96
🌸 ஐம்பதுகளின் எட்டை எட்டும் அன்னாளில் ஐயன் பூத்த அதே பொன்னாளில் உறைபனி உளியமுலவும் ஒப்பிலா செல்வச் செருக்குடை செழுநாட்டின் அதிபனே அகிலம் அதிர மூன்றாம் அழலின் மூல விதையூன்றும் ஊழ்வினையை அகிலாண்ட நாயகியின் அகம் காண அதை அறம்பாடி அருள்வாக்கால் புறம் பாட புகல் வேண்டும் மாந்தருக்கு வழி சொல்வேன். பொறியாலே விழிகொண்டோன் பூந்தாளே கதி என்பேன். அவனை போற்றி போற்றியே ஒளி மதியை யான் பெற்றேன்.
🌸 நாதியில்லா நாடுகளின் நிதியனைத்தும் நாநிலத்தின் நீர் வளம்போல் பாதியாய் சுண்ட கண்டேன். பின் நாடுகளின் கொடிகளெலாம் ஒடுங்கி நாயகன் நாவாணைக்கிணங்கி ஓர் கொடியை ஏற்று உலகில் ஒளிவீச கண்டேன். அருநீரும் அன்னமுமுண்ண கிடையாமல் விழிநீர் வழியும் காலம் விரைந்து வந்திட
அகிலமே அற்ற குளமாகி அலுத்துப்போக உற்ற வளம் பற்றாது உயிர் வலியெடுக்க புவி
பெற்ற சரித்திரமாம் புத்தம் பிறவி ஆளுமையுடையோன் அருளால் தரித்திரம் தானே தலைமறைவாகும் புரிந்திடு பொன்மகனே.
🌸 குன்றுகள் சூழ கோட்டான்கள் கூவ கண்ணீர் கன்றுகள் கதற காரிருளுறை கற்குகையுள் குடி பெயர்ந்து பெருங்குடி மாந்தரே பீதியிலுறைந்து கூதிர் காலத்தில் குலை நடுங்கி வாழும் கொடுஞ் சிறை காலம் கூடி வருகை தர அகிலத்தின் நகரமெரிய அந்நரகத்துள் வீழ்ந்தாற் போல் நானே உணர்கின்றேன். ஒடுங்குவோர்க்கு ஒப்பிலா மனமிரங்கி உன்னுயர் முடியுறைந்த நல்லரவின் விடமிறக்கி நலம் செய்தாற்போல் துயர் கொய்வாய் வல்லரசின் வல்லரசாய் வலிமை கொண்ட பரம்பொருளே.
🌸 மஞ்சளும் செம்மையும் மண்ணில் இணைய மாமலை குடக்கே மன்னுதிரம் நதிபோல் ஓட உலகே திகிலால் உறையும் காலம் உரைக்காமல் உருகும் மனிதநேயம். கண்களில் நீரும் நெஞ்சினில் இரக்கமும் ஒன்றாய் நிறைந்த நெகிழும் மாந்தரை ஏன் படைத்தாய் இறைவா. இன்னலில் உழன்று இன்னுயிர் வலிக்க இதயத்தை சிதைத்தாய் இறைவா. கருணை செய்து கல்கியை எழுப்பி அவனியை காக்க ஆவன செய்யும் அருளை வாரி புவி மீது இறைப்பாய் அன்பே அறனே அகத்தில் நிறைந்த ஆதி சிவனே.
🌸 அநீதி அம்பெய்ய அரவணைத்த வம்பர்களை ஐயன் தலை காத்த வல்லறம் வதைத்தொழிக்க அதை எய்தோனும் எரிக்கப்படும் எதிர்காலம் தொலைவில்லை என்ற எம் மெய்வாக்கு மேதினியில் என்னாளும் பொய்வாக்காய் போவதில்லை புவித்தாயின் பொன்மகனே.
🌸 தமிழ் கூறும் நற்பாரில் அமிழ்தூறும் என்பாடல் பெரும்பான்மை மாந்தரின் கவனத்தை ஈர்க்காமல்
ஏராளம் இளவல்கள் இலக்கினை எடுத்தியம்பும் சொற்றொடர் வரியாக்கலாம். இசையாலே இதயத்தை பறிக்கின்ற பூபாளக்குயில்கட்கு அது அடியாகலாம். புவிமார்பில் என் பாடல் பொல்லார்க்கு இடியாகி புரியாத பல பேர்க்கு புதிராகலாம்.
🌸 ஐயன் கையுள் அடங்கும் போழைக்குள் அவனேயறியாமல் பொய்யர் புகுத்திய மென்பொருளுறங்க எம்மான் அறிவை அண்டாதறிவர். அதிலகிலமே சுருங்க அகராதியும் அடங்க தடையமிலாது தலைமறைவாகி
ஓயாதுயிர்க்கும் உறங்கா பொறியினை பதித்து காதம் பற்பல கடந்தும் கயவருடன் காவல் பூனைகள் கண்ணுறங்காது நோக்கும்.
🌸 அல்லல் பட்டு அலைக்கழிந்த அம்மி குழவி அண்டை கடல் நடுவில் மிதந்த வண்ணமது மீளா கடனால் சிதைந்த சின்னமது அன்னை தலைவி மேனியை அரவணைத்திணையும் பின்னம் செம்மை நிலமாகி சீர்பல பெற்று பூக்கும் சேதியை புதுமையென செவிக்குள் ஊட்டினேன்.
🌸நிதி விதைத்து நிதியறுக்கும் மதியுடை நடுமேற்கு நஞ்சர் வந்துறையும் சித்தர் திருமண் நீதியிழக்கும் நாளில் பல்லிடத்தில் பற்றுகின்ற பாழ் தீயை பார்த்தும் பாராமல் இருப்பானொரு வல்லிடத்து வஞ்சினத்து வடக்குறை மன்னவனும். சொல்லிடவே மனமுருகும் சூழ்ச்சியுடை மதக்கொடியோர் சூளுரைக்கு நல்விடை கிடைக்காமல் நாட்டு மக்கள் அலறிடும் அந்நாளின் தென்னாட்டில் நெஞ்சீரம் கொண்டதொரு நெறியாளன் பார்வை பட பட்ட மரம் பட்டு போர்த்தி பன்னாடே பாராட்ட பார்வை பெறும்.
Comments
Post a Comment