பாகம் 100, 101 & 102 அறம் பாடி அழிப்பேனே அகிலத்தை ஒழிப்பேனே. அத்தகு வல்லமையை அரவமதை ஆரமாக்கி அம்புலியை தோகையாக்கி புருவத்தின் மத்தியிலோர் பொறி விழித்தழல் தாங்கி பொல்லாது ஆடுகின்றோன் அவ்வரம் தந்துவிட்டான். அடியேனுக்கு அளவிலாது அதிகாரமுண்டென்று அருளோடு ஆணையிட்டான். அதை யான் செய்யாது அண்ணலுக்காய் காத்திருந்து அருந்தவத்தால் ஈட்டியதை திருவரத்தால் மீட்டியதை புலம்பாது தாரைவார்த்து தயங்காது தலைவன் தாளடிக்கே அர்ப்பணிப்பேன்.
பாகம் 100
🌸 கொடியோரனைவரின் அகமேறி குரூரமனைத்தையும் அரங்கேற்றி கொண்ட கூட்டை விட்ட பின்னும் வீடடையா விதியமைக்கும் வீணன் கலியன் தலை கொய்ய விடை கண்ட வழியது மெய்யாய் வாழ்விது பொய்யாய் ஒளிர்ந்திடும் சாலையை ஒருவனேயமைத்து விழிவைத்துதித்தே வினையறும் நல்லற வீரியச் சோலையுள் மாளா தலையுடன் மடியாவுடலுடன் சூடாமணியென ஆறாதொளிர்வதை அடியேன் கண்டேன். விண்டுவிற்கிணங்கி வேதம் பொழியும் வியத்தகு தாய் முலையொப்ப தமிழ் வளர் பாண்டியப் பைந்தமிழ் நாட்டுள் பல்லின மரபினர் புதிதாய் புகுந்த கோட்டைச் சோலையுள் குடிகளாய் பதிந்த குறைவிலா ஊற்றுள் பாசக்கயிறே பாயாத சாலையுள் பாயுமொளியொன்று பால் சங்கென உறங்கிடக்கண்டேனங்கு குன்றத்து விளக்கினை கொலுவென ஏற்றி கோபுர சூழுமுனை வாசலிற் நிறுத்தி தெய்வத்தை யானே தேடாதுணர்ந்தேன். சூது தீண்டா மாந்தர்கள் வாழ்வர். எம் சூரியன் தீண்டி சுட்டு எரிக்கும் பாத்திரமேற்ற பாவியரனைவரும் பரகதியடையா புதைக்குழி வீழ்வார். சூத்திரமறிந்து சூழ்ச்சியை தகர்த்து சுடர்கதியடைவது நாதன் எழுதிய நல்லோர் விதியே.
🌸 மையக்குணக்கே மன்னன் புதையும் முன்னே பொல்லா மகவுகளிடையே குடிப்போரெழுமே. மணிமுடி அரசுக்காய் மனத்தே வெறியேறி மண்ணாளும் நோக்கிலே தனையன்கள் தலைகள் தரைமீதுருண்டு குருதியிலுறைய கோட்டான் தமயன் கொள்ளும் அரியணை தனிலமர தரையே மாறி தகரும் அரசே வாழ வரமாயமைந்த வயலே கருகும் வேளை வருமே. அன்று கதிவேள் தயவால் ஐயன் தலையே எழுமே. இதைக் கனா கண்டவரனைவரும் பெறுவது நலமே. அதன்பின் கண்ணால் காண்பதோ எல்லையில்லா எம்மான் இணைடி நிலமே.
🌸அறம் பாடி அழிப்பேனே அகிலத்தை ஒழிப்பேனே. அத்தகு வல்லமையை அரவமதை ஆரமாக்கி அம்புலியை தோகையாக்கி புருவத்தின் மத்தியிலோர் பொறி விழித்தழல் தாங்கி பொல்லாது ஆடுகின்றோன் அவ்வரம் தந்துவிட்டான். அடியேனுக்கு அளவிலாது அதிகாரமுண்டென்று அருளோடு ஆணையிட்டான். அதை யான் செய்யாது அண்ணலுக்காய் காத்திருந்து அருந்தவத்தால் ஈட்டியதை திருவரத்தால் மீட்டியதை புலம்பாது தாரைவார்த்து தயங்காது தலைவன் தாளடிக்கே அர்ப்பணிப்பேன்.
தென்குமரி தீஅணங்காள் தேவர்களை அவள் வணங்காள்
தீர்த்த அலை எழும்பும் திரிகடல் தலம் அடங்கி அத்திருமார்பற்க்கருள் வழங்க எரிமலைபோல் எழுவானே எம்பெருமான் தெரிவானே.
🌸 குழலிற் வீழும் அரவென கொடியிடை அரம்பையரகமே மயங்கும் அழகுறு வேந்தன் விரியா செங்குமுதமொத்த குய்யம் விரித்தால் விரியும் மொட்டு இதழுடன் மொத்தமும் மூடும் தோகை போற் முன்னழகோர் முகுந்தன் சண்ணமாய் மூவுலகறிய பகர்வேன் கேளாய்.
🌸 எல்லா விழிகளும் இகத்தோருடனே பிணையும். அவன் வெல்லும் வேல்விழியோ விண்ணவருடனிணையும்.
ஐயன் வாசல் முன் ஆருமறியாமல் குந்தி குதம் பதித்த கூகையெனவே வெய்யர் பொறித்த விழிப் பொறிகள் விழித்தே அரவத்தலை தூக்கி ஐயன் அசைவிற்காய் ஆண்டெலாம் அக்கரையோடிருக்கும். காடுறைந்தவனிருந்தாலும் ஆங்கே கல் மறைவிலவனொழிந்தாலும் காய்மறைவில் விழி பதுக்கி கதிரூட்டும் ஊணுண்டு கண் துஞ்சாது பூத்திருக்கும். ஊற்றரவம் ஊரும் இடங்கூட ஒற்றர் பதித்த ஒளிவிழி ஒழிந்திருக்குமென்பதனை மெய்யகற்றி மேலெழுந்து மேன்மகனருகிலமர்ந்தவாறு மெஞ்ஞானக்கண்ணாலதை மெய்யாற கண்டேனிதை மேதினியே செவிசாய்ப்பாய். அவ்விஞ்ஞானக்கண்கள் அவனை வீழ்த்தாது கண்ணே.
பாகம் 101
🌸 மையத்து கண்டமுறை மாணிக்க கடலோரம் பாழ் பட்ட நிலந்தன்னை பட்டு மரகதமாய் பல்சுவைக்கு மாற்றியதும் இறை கூட்டம் யாமென்றும் ஈடுகட்டி நிதி கொட்டி மறை காட்டி நிலம் பிடித்து மண் மைந்தர் யாம் என்றும் மார் தட்டியழைக்காமல் அம்மண்ணோரை மனம் மாற்றி மாநிலத்தை கவர்ந்தோராய் அங்கு கருங்குன்றின் கொண்டையிலே கற்கோவில் ஒன்றிருக்கும். நான்காயிரம் ஆண்டு முன்னரங்கு நட்டமைத்த முப்பிரிவின் முப்பாட்டன் ஆலயத்தை முறையோடு காப்பவராய் ஆளுகின்ற அவ்வினத்தை அன்றொரு நாள் ஆர்ப்பரித்த ஆரியத்து ஓநாய் ஓடியோடி உயிர் பறித்து ஊனுறவு துணையுடனே உயர் விடமருந்தி உயிர்துறந்த பின்னரதன் தொண்டர்கள் உடலெரித்த விந்தையினை மண்ணுறைந்த மண்டலமே நன்கறியும். அக்கொலைக்களத்தில் மிஞ்சிய கூரறிஞர் குழுவாகி கூடி வந்து பாலை நிலந்தனை பைஞ்சோலை பரப்பாக்கி ஆளுகின்ற ஆட்சி கண்டு அடுத்தமைந்த அண்டை நாட்டு அரபுலக வேங்கைகளும் திறனமைத்து போர் புரிய திருமண் சிவக்கவும் திருமகள் பொருள் தேய்ந்து அத்திருநாடே ஏங்கவும் திரும்பிய திக்கெலாம் திணறிடும் வேளையிலே அறம் தளிர்க்க அனைத்தின்னலுக்கும் ஓர் அண்ணலே அருந்தீர்வு காண்பதுடன் பெருந்தமிழர் வாழ்விற்குள் பேரொளி பாய்ந்திடவே தன் திருத்தொண்டோங்கிடவே செவ்வேள் உதிப்பானென சேதி சொல்வேன் பரம்பொருளே.
🌸 இனியோன் எம்மையன் இளையோரில் இருவர் ஏறெனவும் மற்றிருவர் பூவெனவும் அமரர் எமக்கு ஓதியதை அப்படியே பரமன் தாள் பணிந்து பாரறிய பகருகின்றேன். பரிதியின் குலங்கொண்ட பண்புடை குமரன் பெயராய் முதலொருவன் பெற்றதையே மூவுலகறிய நானென் பாட்டுள் வைக்க பிறிதொரு பெருமகன் பெயரோ பூமுகம் தன்னில் பொறிவிழி மூடிக்கொண்ட பிறைமுடி பெருமான் பெற்ற குமரனின் உற்ற தோழன் போல் உலகறிய ஒப்புவிப்பேன். தங்கையுள் முதல்வி மட்டும் தங்கத்தின் தரக்கேடாய் தகுதியிலாது மங்கைக்குரிய மாண்பிலாதமைந்தாலுமவள் அண்டங்காக்கும் அம்பையின் பெயர் தாங்கி அநீதிக்கு தூது போயி ஐயன் அகம் தனை அகந்தையால் அழிப்பதுடன் அவளும் அழிவாளே. விண்ணவ அரம்பைக்காய் வெறிபிடித்தேங்கி விடியுமுன் அறிவிலி பெயரும் வாங்கி ஆயிரம் விழிகள் தாங்கி ஆனையூர்தி கொண்டோன் மனையுடை மறுபெயர் தாங்கி மற்றோர் மலராய் இவன் பின்னாறாண்டுள் பூக்கக் கண்டேன் என்பதனை புவிமகளறிய பொன்வாக்கு தந்தேன் .
🌸 மயூர மணி விளக்கை மனமோங்க வணங்கிடுவர். ஆளும் அரபுலகால் அடங்கி வாழும் அருளாளர் அருஞ்சின்னம் எம்மான் எழில் கமல கைத்தலமுள்ளாலே கண்கவர் காரேங்கல் கவின் மகுடம் சூட்டியதை சூரியவிழி பாய்ச்சி அதன் சூட்சுமத்தை யானுணர்ந்தேன். ஆங்கிவர் இன்னல் அனைத்தையும் இரிக்கும் இடிமின்னல் வடிவாகி இடர் துடைக்கும் மீட்பனிவனென்று மெல்லிசை மீட்டுகின்ற நாரதன் வீணையோ நாதம் எழுப்பகேட்டேன். நாதனே உனக்கு நன்றி பல கோடி சொல்வேன்.
🌸 கடல் மகள் உடலுண்ண கருணையின்றி வருவாளே. உலகழித்த ஓநாய்கள் ஒன்றையும் விடாமல் உளமாற உண்பாளே. படகெனவே பல்லுடல்கள் பாழான படுமரமாய் நெடும்புனல் மேல் நீந்திவர நீலக்கரை நெடுக
மனமுறையும் படியாக மருத நிலம் மறைந்துவிட மலர்ந்திருந்த மண்மாது மௌனத்தில் சுருங்கிடவே சொல்லொண்ணா வலிகொண்டேன். சொல்ல இனி சொற் சுனை சுரக்கவில்லை.
🌸 கல்கியை புறந்தள்ளி கண்ணீரை நிலம் குடிக்கும். கடல்நீரை மிக அள்ளி பொல்லாரை புசித்தபடி பொங்கும் கொடுங் கடல் புறமுதுகிடாமல் புகுந்தே நகரத்தில் நகராமல் மையம் கொள்ளுமிதை மன்னுயிரே நீயறியாய் மாதவத்தால் யானறிவேன். இங்கு மாதவனோ வந்து அறிவாய். சூது உண்ட பாழ் மனத்தார் சூழலுக்கே இரையாகும் சூழல் வெகு தொலைவிலில்லை. ஆணி வேரிறங்கி ஆல்வளர்க்க வழியின்றி அவ்வேர் இறக்க வழி வகுத்தாய் வீணான வல்லினமே. ஊரிறக்க விதி வகுத்தாய். ஊழ்வினையே வலியதென்றும் வேதத்திலும் பெரியதென்றும் பாழ்மாந்தர் அறியாமல் பகலிரவாய் எம்மானை சல்லடையால் தேடியதால் மண் வளர்த்த அத்தனையும் எம் மனம் கொதிக்க கருகிடுமே. பொல்லரக்க மாமழையும் புயலோடு நிலம் சிதைத்து புன்னகைத்து மகிழ்ந்திடுமே.
🌸 நிறை கொண்ட தமிழ் பரப்பின் நெடுவாயில் தகர்ப்பதற்காய் முறை வாயில் நுழையாமல் புற வாயில் புகுந்தவனாய் முக்கறை அகம் கொண்ட முப்புரி அணிந்தோனாய் முக்கண்ணன் வெறுத்தோனாய் கண்ணொன்று சிறுத்தோனாய் கண்காணி பூனையொன்று கயமைக்கேவல் செய பெரும் விளைவை எதிர்கொள்ள கொடும் தலைமை நியமித்த குற்றம் புரி நரியாக கோன் நீதி கொன்றோனாய் மனு நீதி நிறம் கொண்ட மாண்பிலா வஞ்சகன் நெய்தலூர் சிரம் தன்னில் நிலை கொண்டு நேர்மை கொன்று அம்மண்ணிலடங்கி மரண வலியுணர்வானே.
பாகம் 102
🌸 வரையிரணடுள் வானெழும் இளங்கதிர் வன்கொடி வாழ்விடந்தன்னில் பன்கொடும் பாவியர் பதுங்கியதை பாரறியாது போனாலும் பகுத்தறிவோம் யாமே பரம்பொருளே. அப்பாசறையுள்ளே நெறி கெட்டு கறையுள கயவர் மறையுள் மறைந்த மன்னவனிவனை மாய்க்க எண்ணி விடம் விதைக்க வீராப்பாய் எம் வேந்தன ஆராட்டும் தேவி அமுத கலந்தழுவி அணைக்க எம்மையன் எழும் இடமெலாம் இவர் இடர் நிறுவி என்றென்றும் அறம் தவறி அகம் கெட்டு ஐயனடி தொடர்ந்து கடுஞ்செயல் புரியுமிடம் விடமுடை அங்கத கோனுறை ஆலயப் பெயருடை பெருநகராம் அங்கு முதல் அவையின் முன்னமர்ந்த முதல் தாதையோரு குள்ளக் குறுமகனவன் வாதை மைந்தனாய் வன்செயல் வரம்பிலாது புரியும்
சிற்றின சிறுநரி படைகளின் சீரிய தலைவனாய் சொல்வேனவன் நாகம் தனை தன் நறுமுடியில் நட்ட நாதரின் பிறிதொரு பெருந்தேவன் பெயர் தாங்கி நீதி நெறிகள் கற்றறிந்தும் நித்தமும் விற்று உடல் வளர்க்கும் நச்சுப் பாவியனை ஈசன் வெறுக்காமல் போவானோ எம்மையன் எழில் கண்டம் அறுக்க வந்தோனை. கண்டேனவன் அலறியழும் வாழ்விற்குட்பட்டு வாய்விட்டு அழுது அழிவதை அருள் வாக்கால் தந்தேனே.
🌸 ஊனுணவில் அணுவளவு உயிர் வளர்ந்து பயிராகும் உடனிருந்தே உடல் பறித்து நிலம் புதைக்கும் மானுடத்தை ஏப்பமிடும் மாகொலைகள் அரங்கேறி மண்ணெல்லாம் பதபதைக்கும். காய்கனியை கூட இங்கு நோய்நொடிக்குள் கொண்டுவிட நானிலத்து மாந்தருடல் நலம் கெட்டு சீரழியும் நாள் நான் அறிந்தேனதை நாதனவன் எனை விடவும் தன் ஞான கண்ணால் நன்கறிவான்.
🌸 மேலை ஔடதம் மேனிக்கு ஒவ்வாத வேளையிற் உயர்முனி ஓலை உரைத்த உன்னத வைத்தியம் ஓதும் மருந்தினை உத்தமனுண்டே நோயினை விரட்டி பொன்னுடலோடு பூவுயிர் காத்து பொல்லாருடல்களை புவிதனில் சாய்ப்பான். தீரப்பாலருந்தியவன் திக்கெட்டும் விருந்தினனாய் வீரப்பாலுண்டு விளைந்து வருவானே. வேந்தர் பலரும் இவன் கீழ் எழுவரே. வேண்டிய நலன்களை பூமியில் தருவரே. ஆண்ட இனங்கள் அனைத்துமொழியுமே. அற்பர் இனமோ புல் பூண்டோடழியுமே.
🌸 அடுத்து ஒட்டிய சிறுத்த மழலைகள் அன்ன ஆகாரம் ஏதுவுமின்றி கொழுத்து செழித்த பொறையுடை அன்னை பொன்மடி புக்க பெரும் பஞ்சம் தின்று பெருநிலம் அழுவதை கருத்து வடிவாய் கவிதை தந்ததை கண்ணே நீ ஏன் புரியவில்லை. இக்கண்ணீர் கதை உனக்கேன் தெரியவில்லை.
🌸 ஐவழியிற் ஆண்டவனை ஆராதிப்போர் அனைவருமே ஐயனை அழித்தொழிக்க அகமலர்ந்து முற்பட்டும் மெய்வழியிற் மேம்பட்டோன் புரிந்த நல்லறமழியாது நாயகன் தனை அகலாது காக்கும். வேண்டுவதை இயலன்னை வேண்டியே இன்முகத்தால் ஈந்து எம்மையன் வீழாது ஏந்திபிடிப்பது தயைகூர் தாய் நிலத்தின் தலையாய கடனாய் ஏற்றிடக் கண்டேன் எம்பெருமானே.
🌸 நீதிமகளை நெஞ்சம் பதைக்க பங்கம் செயும் நஞ்சுறை மாமன்ற நிழலில் கூட நொடிப் பொழுதும் நில்லான். நீசப்பூனைகள் நிறைந்த நிலைய வாயிற் கதவில் மறந்தும் கூட மழைக்கும் மறையான் மாண்பை கண்டு வானவர் வழங்கிய வரமாய் கொண்டு இந்நெறிமகன் வாழ்வே அமைய எம் திருவிழி திறக்க திகைத்து நின்றேன்.
Comments
Post a Comment