பாகம் 103, 104 & 105 அன்னை பெரு மலராய் அவளுடன் அலர்ந்ததொரு தங்கை சிறு மலராய் தந்தை வியக்கும் வண்ணம் சிற்றாள் எவருமின்றி சித்தி அரவணைப்பில் சேயோன் துளிர்ப்பானே.
பாகம் 103
🌸 மலர்ந்தெழும் மாமன்னவன் மணவாட்டியொரு மாசுறை சேற்று மரையாய் சீருற மலர்வாளவள் உற்றாருறவும் உதவாது ஐயன் பொற்றாள் மறந்து புகுவது பொய்யரோடு புண்ணீர் கறையுறைந்த வெய்யர் வீட்டு விழியிலா பொருளுறை பொற்பேழையென பொறிவிழி துயிலும் எரிதழல் இடுகாட்டு எண்குணன் எனக்கு ஏதுவாய் எடுத்தியம்ப அறிவொளி சுடர் தீண்டிய அன்னை பகவதி அவனை அள்ளி எடுக்க அனைத்து வினையுமே அருநீர் குமிழ் போல் அற்றுப்போவதை யான் குற்றேவல் புரிந்து உற்றதோர் பிறப்பெடுத்து உடனுறைந்தே உணர்ந்தேன் பரம்பொருளே.
🌸 பூச்சி புழுவிற்கும் பொல்லா செயாது புண்ணியம் கோடி பெருஞ்செல்வமாய் குவித்த பூமகனிவன் பொன்மனமறிய இங்கு போதாது எமக்கு இவ்வொரு பிறவி.
கரையில் துடிக்கும் கயல்களுக்கு இரங்குவான். கருணை வடிவாய் பறவைகட்கும் இரங்குவான். மறந்தும் கூட மாநிரைக்கின்னா மனதாலும் புரியாது இதயத்தால் நெருங்குவான்.
அழல் கொட்டும் அருணன் தழல் கரம் பட்டழுது சாய்ந்த பைம்பயிர் மீது பாசம் பொழிந்து வாரி அணைத்து வாய்விட்டழாத குறையாய் வாக்குரைத்து வருந்துவான். உடல் நோய்வாய் பட்ட உயிரனைத்தும் உடன் சிலிர்தெழ வேண்டி உரிமையொடு உமையொரு பாகனை உளமார நினைந்து ஓயாதுருகுவான்.
அறம் வளர்க்க அடிகோலும் அழியா நூல்களை அவன் விழிகளால் விடிய விடிய வேண்டியே பருகுவான். அருளுறை அன்பர்க்கு அகம் நிறை அர்ப்பணம் புரிவதினும் பிறிதொன்றும் நினையாது பௌதிகன் புகழிசை தன்னை பொழுதெலாம் முழங்குவான்.
ஈடிலா எம்மான் வீடுறையும் முன்னம் விரியுலகின் வேந்தனாகி விடுதலையடைந்து விரும்பியே உறங்குவான் என்பதனை யானுரையாது இங்கே எவருரைப்பர் பரம்பொருளே.
🌸 கூர் வேல் பாய்ச்சிய குமரவேள் கைவண்ணம் சீரலைவாய் கடலோரம் தெளிவுற யான் கண்டேன். கண்ணனவன் கை வண்ணம் கார் குழலி பாஞ்சாலி கற்புக்கடம் காக்கும் காவிய தருணத்தை கௌரவரவை தன்னில் கண்ணார யான் கண்டேன். பின் கல்கியின் கைவண்ணம் கனாக் கண்டு கடுந்தவமே யானேற்று கனியும் நாளை கயிலையனருளாலே கரவாது யான் கண்டேன்.
கயவர்க்குதவிய கருணையிலா குரூர சேனையை குறிவைத்து கொன்று குவிக்க கொடுவலை விரித்து கடும் களையெடுக்க தினம் கண்ணீர் பூவுதிர்த்து காரிருள் பூனைகள் கதறி அழும் அவலத்தை அகம் குளிர யான் அம்மையப்பனுடனங்கு கண்டேன். குற்றமுறை கோரப்பூனையெலாம் கூண்டை விட்டகலாமல் கொலை நடுங்கி குற்றுயிராகி மடிவதையும் கூத்தனருளால் குறைவாலாது யான் கண்டேன். கொலைவெறியுற்று குருதி குடித்த கூர்நகப்பூனைகள் நல்லோர் வாழ்வை நரகாய் சிதைத்த நஞ்சுறை பூனைகளனைத்தையும் கொன்றொழிக்கவே எம் கொற்றவன் வருகை தர அற்ற குளமாகி அழும் அல்லலுற்ற அவனி அறமோங்கி தளைப்பதையும் ஆறுதலை தாங்கி அரவமதை மாலையாக்கி ஏறு மீதமர்ந்த ஈசனுடன் யான் கண்டேன். நிலை மாறும் நிதிக்கு நெஞ்சம் மயங்காது நீசர்க்கு அடிவருடாது நிறையுடை நீதியுடன் நிமிர்ந்து நிற்கும் நேரிய பூனைகள் அரண் அமைக்க ஐயனுடன் அடியேனும் அன்றிருப்பேன்.
சீரணி துகிலணிந்து செம்புலத்தின் நீதி தனை சிதைத்த சிற்றின பூனைகள் ஓரிடமும் உய்யாது உயிர் மாய்க்கும் தருணத்தை பாமரனாய் அமர்ந்திருந்து பரமனுடன் பார்த்திருப்பேனிப்பாடல் தனை பதறாது செவிசாய்த்து பக்கமுறை மாந்தருக்கு பக்தியொடு செவி சேர்ப்பாய்.
🌸 கள்ளம் கபடம் கயமை மேலோங்க உள்ளம் ஊனமுற்று உய்யா மாந்தரை என்னென்று இயம்புவேன் எம்பெருமானே. திண்ணமிவர் தெருநாயினும் திண்டாடி தீண்டா நரகுறைந்து நண்ணமும் நலமடையாது நாய்க்கும் பேய்க்கும் உண்ண தம் ஊனூட்டி உயர்கதியிழந்தே ஓம்காரனருளிழப்பரென உயிலெழுதி யான் உலகறிவிப்பேன்.
பாகம் 104
🌸 ஏறுதித்த எழிலில்லத்து இன்முகத்தின் கீழ்திசை தலைவாசல் முன்னமைந்த முறைவாசல் முற்றத்தை முத்தமிட்டு முன்தழுவி வட திசைக்கு வழி காட்டி வரிந்து கட்டி வண்டியோட பெருங்கோல் ஆயிரம் பிடிக்கும் தூரத்தில் பீடுடை பொய்கையை பிணைந்த பெருங்கரைக்கு தெற்கிலமைந்த ஆலயத்திலமர்ந்து அடைக்கலம் காத்தோனாய் ஆலகண்டன் அருள் பாலிக்க அவனையே யான் சேவிக்க மரை கோடுறை மண்டலமென மாந்தர்களறியாது போனாலும் எம் வேந்தன் வருகைக்கு முன்னம் விடிவெள்ளியாய் விழித்தெழவேண்டி தந்தேன் யானுனக்கு இத்திருவருள் வாக்கு. இதை தக்கபடி நீயறிந்து உற்றபடி பொருள் கொள்வாய். உண்மையை உறங்கவிட்டு தவிட்டிற்கும் உதவாத தரங்குறை தமிழ் பயின்று ஒவ்வாத பொருள் தவிர்த்து ஒய்ந்த உலகத்தார் உள்ளமது மேன்மேலும் உடையாது உற்ற வலுசேர்ப்பாய் உயர்திரு உயிர் மண்ணே.
🌸 தேவனையே வணங்காது தெருத்தெருவாய் நிந்தித்து தென்னிலத்தார் கண்திறந்த தீஞ்சித்தன் வழித்தோன்றல் இங்கு தெய்வத்தின் வழித்தோன்றி அறக்கோடி ஒளிவீசும் அனைத்துலகும் மேலோங்கி மேதகு வான்புகழ மேதினியை அவனாள வடதுருவன் வன்னிலத்தான் செங்கரம் எம் செந்தமிழன் தோள் தழுவ என்னிலமும் எதிராகா ஏற்றமுறு இன்வழியை இவனேற்க
போற்றிடும் புவிகாண பொற்காலமுற்றிடுமே.
🌸 கண்ணனின் வகையை சேர்ந்த கண்களை புண்ணாய் கொண்ட தென்முனை தீயோர் கண்டேன். அத்திமிருறை நரிகளுக்கு தீரனின் திருபுகழ் கெடுக்க அழுக்குறு அருளிழந்த புதுபுது பொன்பொருளை பொழிவதோ வட்டியை பணியாயுற்று வான்புகா பிணியை பெற்று வடக்கினில் குடக்குறைந்து வாழ்ந்திட புலம்பெயர்ந்த வெய்யரின் கறைபடிந்த கைகளே அக்காரிருள் நெஞ்சினர்க்கு கரும்பென இனிக்க கண்டேன்.
கடும் பகை ஆடினாலும் கொடும் நிரை கூடினாலும் கயிலையன் முடியைக் காணது கண்டேனென்ற கமலனே தலை வணங்கும் காவிரிக்கரையோனிவன் பொன்னுடல் தனை எப்பொல்லா கரங்களும் புவியிலிங்கே எள்ளளவும் வதைக்க இயலாமல் இழந்து போக இவன் இல்லத்துள் பாட்டன் பூக்குமுன்னே பதிக்குள்ளே பூத்ததொரு பருவக் கன்னியவள் பழியேற்று மாய்த்த உடல் விட்டு மறுவுடல் ஒளியுடனே மாளாது உலவி வந்து ஓயாது உடனிருந்தே உற்றாள் போலிவனை உயிராய் காப்பதனை உமையாள் உள்ளத்துள் ஒளிந்து உண்மை அறிந்தேனிதை ஈசன் வாக்காக என் மேல் ஆணையிட்டு இயம்புகின்றேன் கேளாயோ.
🌸 பொல்லரக்க போரெழவும் புதுப்புது பிணி தின்று பிணங்கள் விழவும் வல்லரக்கர் நிலம் வெடித்து வான் மிதந்து வந்திறங்கி மெல்லரக்க தலம் பரவி மீண்ட நறும் பூவாய் மலர்ந்த புணரிகள் பூப்பெய்தி பூக்காதுபோவது பூமாதர் முன்வினைப்பயனாய் வல்வினையறிந்து வாய்விட்டழவே எம் வினையகற்றி இவ்வகம் குளிர செவ்வன செய்யும் செவ்வேள் உதிக்க செம்பொன் விளையும் செழுநிலம் கண்டேன்.
🌸 குறுமுனியெனும் திருமுனி பெருங்கொடை ஈந்த தமிழெனும் தருமொழி தானே வளர்ந்த பொதிகை வரையுள் இரு பூந்தொடையிடை பூவிதழ் தனில் பூத்து பொலிந்த பொருநை உயிர் கொடியோடி உறங்கா கரையிற் ஒளியுதிர் கனகமாய் மலர்ந்தது முதல்வனவன் முன் மழலையே. பின் மழலை கமலமவன் விமலனருளொடு ஐந்தில் அருந்தேன் தமிழை அருந்தி பயில பின் நோக்கியே பெருங்குமரி மடிபுகுந்தான் என்பதனை இசையோடு இயம்பவைத்தாய் ஈடிலா இறையோனே.
🌸 பொன்னன் மகன் எரிவான் பொல்லாதவர் எரிவர் இன்னும் பலர் எரிய இழியோர் கனல் குளிக்க இனியோருடனிருப்பர். சிரசில் மதம் பிடித்து சீறும் பெருங்கயவர் புதையும் இடம் கண்டு பூரிப்படைந்தேனே. அரசில் அறம் வளர்த்து அன்பை யுடன் விதைத்து முரசை அறைத்தபடி முக்குரவை யொலி யெழுப்பி முத்தி யெழும் தெக்கணத் திருவடியில் தெள்ளுதமிழ் வளர்ப்பான் நேரிய நெறி நாடன். குன்றா வளம் பொழியும் கொற்றவை நிலமிணைத்து அவள் கன்றாய் கடன் முடித்து காவியம் தனை படைக்க ஒரு கற்பக தரு கிடைப்பான்.
பாகம்105
🌸 அண்ணலின் அம்மை அப்பன் ஆருயிர் காதல் கொண்டே செம்மையாய் இணைந்தொரு செழுவாழ்வமைத்தாலும் உண்மையாய் வாழாமல் ஒயாது கடிந்தபடி உள்ளத்தால் பிரிந்தபடி ஒருவற்கொருவர் ஒற்றுமை சிதைப்பரென்று ஓம்காரன் ஒருமுறை எம் உட்காதில் புகுத்தியதை யான் வாங்கி வாக்குரைத்தேன். இன்னும் பல உனக்குரைப்பேன்.
எம்மான் அன்னைவழி முன்னமைந்த அப்பன் குடி செம்பொன் செல்வமுறை செழுங்குடியாய் பொலிந்ததோர் ஊரறிந்த நற்குடியின் உயர்திரு நன்மனையுள் பெருமான் நம்மையன் நலமுடன் உதித்தாலும் தரித்திர குடி தந்த தேவநேய தாதையொரு மேதையாகி தக்கதோர் பணியேற்று நீதியின் நிழலடியில் நெஞ்சார்ந்து விதி எழுதும் வேந்தர்க்கு உதவும் கரமாகியே ஊதியம் பெற்று தன் ஊழியம் முடிக்கு முன்னர் உயிர் முடிச்சவிழ்ந்து அவ்வுயர் பறவை பறந்ததன் ஊழ்வினையை யான் அறிவேன். உத்தமரே கேளீரோ.
செல்வச்செருக்குடை சினமுறை அன்னையொரு சீறும் அரவம் போல் அசுர குணமுற்றிருக்க அம்மை குணம் அதில் கொஞ்சம் எம் அய்யனுக்கு தொற்றக் கண்டேன். ஆயின் அப்பனது அருங் குணம் தான் எம் அண்ணலுள் அசலாக அகமெலாம் அடியேன் கண்டேன்.
புனலாலே அனல் பூத்தெழும் பூதமாகி பூவுலகில் ஒளியேற்றி புத்துலகை படைக்கின்ற பெருந்துறை நற்பணியால் பெற்றாள் பொருள் சேர்க்க உற்ற பிதா உறவு தந்த யோனிக்குதவாது போனாலும் பொற்றாமரை போல் ஐயன் பொன்மகள் நிழல் போர்த்த புதுப்பொலிவுடன் பூப்பானே.
🌸 உற்ற சில மாமனுள் உயர்திரு மாமனாய் பெற்ற அன்னைக்கு பின்னுதிக்கும் நாதனாய் கிட்ட நெஞ்சீரம் பெற்ற தயாளன் தன் சோலையுள்
காயறுக்க கற்பகம் ஏறி கால் தவறி தாழே வீழ்ந்து தழல் போர்த்தி தகனமாகும் தாய்மாமன் தயவை தலைவனிவன் நோயுற்று துடிக்கும் போது நொந்து தூக்கி சுமந்தபடி ஔடதமனை நோக்கி அழுதோடிய தருணத்தை என்றைக்கும் நினைத்தபடி இருவிழியை நனைத்தபடி எம்மானுருகுவானே. ஈசா நீ அருகமர்ந்து இதமாய் அன்றிருந்து இனிதே தேற்றிடுவாய்.
🌸 அன்னை பெரு மலராய் அவளுடன் அலர்ந்ததொரு தங்கை சிறு மலராய் தந்தை வியக்கும் வண்ணம் சிற்றாள் எவருமின்றி சித்தி அரவணைப்பில் சேயோன் துளிர்ப்பானே. மழலை தனை கடந்து மரையாய் களித்தபடி மீளிப்பருவத்தையும் காளி கடத்திவிட கன்னல் தளிராகி கனகன் துளிர்விடவே மறவோன் கழிந்த பின்பு திறவோன் காலத்தில் திறனை வளர்த்தெடுத்து விடலை விட்ட பின்னும் விரும்பும் காளையாகி கன்னியர் நெஞ்சத்தில் காதல் கணை பாய்ச்சி கண்களால் சாய்பப்பானே. கனியா கனவுகளை கன்னியர் நெஞ்சினில் கதிரெனவே குவித்தாலும் முதுமகனான பின்னே முற்றுமுணர்வானே.
🌸 தோற்கா பேரரசன் தோற்கும் தருணத்தில் ஏற்கா கதிர் காயை எய்து முடிக்கையிலே இகமே மாறிவிடும் இருளே சூழ்ந்துவிடும். போர் காய் பூரித்து பொரிக்காய் பல பறந்து ஓர்காய் ஆயிருந்து உருக்காய் உறைந்ததொரு உலகை உலுக்கிவிடும். பூக்கள் பூக்காது புல்லே பொசுங்கிவிட பொறி காய் கதிர் வீச்சில் பொசுக்கும் வீச்செழுந்து புவியே ஓலமிட புண் காய் ஆகிவிடும் புழுக்காய் நாறிவிடும். விதியுள் வீழ்ந்ததனால் வெற்றிக்கனி பறித்த வேந்தர் வேந்தர்களும் வெந்து அழிவதுடன் மேற்கில் கொடிகட்டி மேதினி ஆண்டதொரு மாநாட்டின் மனை அழிய மதியை விலை கொடுத்த மாந்தர் சேர்ந்தழிவர். மாயோன் மண் காத்த மலர்கள் சில மட்டும் மாயாதிருந்திடுமே. மற்ற நிலமெல்லாம் மரண அடி வாங்கி மயான அமைதி கொண்டு மண்ணுள் உறங்கிடுமே. நாட்கள் பல அல்ல நான்கு தலைமுறைகள் புல்லும் தலைதூக்கா பொல்லா அவலத்தினை போரே சூழிபோட்டு போரே வழிகாட்ட எம்மான் இவன் முகமே இருளில் ஒளிர்கின்ற பொன்னாய் கண்டேனே. இதை உமையே நன்கறிந்தும் அவளுள் உறைந்தோன் நன்கறிந்தும் உரைக்காதிருந்தாலும் உயிரே யான் அறிவேன். உன் பயிர்கள் கருகாமல் பார்க்க வரமில்லை. பார்க்கும் விழிகட்கு பக்குவம் வலுவில்லை. சிவனே மன்னிப்பாய் இச்சேதி கசிந்ததற்கு.
Comments
Post a Comment