பாகம் 109, 110 & 111 தேவநகரியின் திருச்சொல் ஓமென்றமைய உயிர்மெய்யிணைந்த உறவிலி கரம்பிடி உடுக்கையும் மைத்துறைய உடையாளீன்ற செவ்வேள் உடுமீன் அறுமுனை அம்போருகமுள் அழகுறு இருக்கையும் திருமால் கையுள் திடமாயுறைந்த திவ்விய சங்கமும் தெளிவாய் தெரிய அவன் திருவழி மரபினர் நெற்றிகுறியென நெடுங்கொடி போன்ற திரிகோடுயர தெக்கண ஒவிய தென்னில பாகமும் ஆலய தீபமாய் அழகுறு ஈழமும் அருகினில் அமைய அனைத்தையுமொன்றாய் அன்பாயணைக்கும் ஆருயிர் தாயென தாமரை தாங்கும் கைத்தலங்கொண்ட எம்மானவனே
பாகம் 109
🌸 மன்னனெழும் முன் மண்ணிலுறைந்திடுமவன் மனையுடை மறைவெண் அடியேன் அறிவேன். அது எம்மன்னை மலைமகள் அழகு பெயருடை மற்றொரு புரத்தில் குற்றம்புரிவோர் கூடிவாழும் கோற்கொடியடியில்
வஞ்சகர் குலமே வளைத்துக்கொண்டு இவன் வாழ வழிவிட மறுக்கும் வண்ணம் விடுப்பு கைதி போல் விடுதலை கொடுத்து வெளிவரும் வாயில் வரும் எண் சொல்வேன். அங்கு மறை எண் கொண்டு மன்னவனுறங்கும் முரசு கட்டிலின் கீழே உமையொரு பாகனுறைந்த எண்ணுடன் திருவுடை செல்வம் சேரும் எண்ணுடன் துரைமொழி தந்த மூன்றாம் எழுத்துடன் சுவைபொழி எண்ணும் அண்டி அருகிலமைய அதை அவிழ்க்க இயலும் புதிரென பொதிந்து பூ போலுன்னிடம் தந்தேன். வானில் மீனை இயக்கி வந்து வாஞ்சையில் கோனாய் அமர்ந்தவனொருனாள் குற்றுயிரிழந்து குண்டால் சிதைந்து அவனெழிலுடலறியா வண்ணம் அழிந்தவன் இரு பெயர் சொல்லும் சிற்றூரொன்று பேரூரென்னும் பெரும்பாம்பொன்றின் அரசனமர்ந்த ஆலயமுள்ளில் அருள்பெற கண்டேன் அறனே அறிவாய்.
🌸 மண்மகள் மார்பு கச்சையுள் மயங்கியே மறப்பாலருந்தும் மரகத மைந்தனவன் மைத்துனனிருவர் மரண வியாபாரக் குற்றேவல் புரிவோரென குறிப்பிட்டு கொன்றை வேந்தன் தன் கன்றாய் நினைந்தென் காதில் சொன்னான். மனங்கொன்றவனொருவன் ஐயனப்பன் முன்பிறந்தோளின் முகம் கறுத்து அகம் சிறுத்ததோர் வகையறியா தலைமகனவன் இணையிலா வரையடியில் வடக்கு தரைமடியில் வன்படை இயக்கி கொலைக்கள ஓநாயாகி ஓய்வான் ஆங்கே அப்பாவி ஆயிழையரணிந்த அறமுறை முலைச் சரடறுக்கும் துப்பாக்கி சண்டாளனாய் முப்பாரும் சபிக்க முன்னரே அறிவேன். மற்றொருவன் தலை தங்கையெனும் தரப்பிழை பொற்கிளிக்கு தாலி தரும்
தன்மானம் இழந்த மற்றொரு தற்குறியென பொற்றாமரைதாள் பணிந்து பூதநாதனைகேட்டறிந்தேன்.
🌸 கல்கியின் கையெறி தூண்டிலிலுறைந்த கடிமீன் புழுவாய் ஒரு சிலர் தங்கள் உயிர்வதை ஏற்று எந்தன் பாடலை நல்லோரறிய நாடுமுழுக்க பகர்ந்திட அவனின் அவனியுள் உறைந்த பக்தகோடி மாந்தருக்கெல்லாம் பரம்பொருள் ஈசன் பொழியும் அருளும் அகத்திய பாதம் பற்றியே அடிமைக்கடிமை அடியேனருளும் அளவிலாதமையும் என்பதை
அறிவாய் எல்லாம் இனிதாய் நன்றாய் அடைவாய். வில்லில் இருந்து தெறிக்கும் அம்பாய் மின்னல் இடிபொல் மின்னிய படியே மேதினி அதிர மீண்டுவந்து அகிலம் முழுக்க ஆண்டு கொள்வான். சொல்லின் செல்வன் அகத்தியபெருமான் சொல்லாதெனக்கு சொல்லித் தந்தார். வல்லாதமைந்த வரமென சொல்வேன். அவ்வான் மகன் பூமியை நெருங்கிவிட்டான். நில்லாதவன் வரும் நீதி நாட்கள் பொல்லாதவரைப் புதைக்குழிக்கனுப்பும். எல்லாம் வல்ல எம்பெருமானே எம்முயிர் காக்கும் ஈடிலா கல்கியை இம்மாந்தர்க்கு காட்டி கருணை உள்ளம் உளோரை மீட்டு காலம் சிறக்க அறநெறி காப்பாய். கொல்லா நோன்பு கோடி கொடுப்பினும் குழையா மனத்துடன் யாவர் செய்யினும் காலையா தவமாய் கருதுவான் எங்கள் கன்னி குமரியின் உந்திக் கனியென உதித்துறங்கி உயிர்த்தெழுந்த எம்மண்ணின் மைந்தனை காண வேண்டி காலங்கடந்தும் பனி போல் நெகிழ்ந்தேன்.
🌸 மண் புகழும் மாந்தரையெலாம் விண் அறிய வழியேயில்லை. வேதம் நான்கிலுமுறைந்த கண்கவர் மால் கணையொடு வில் தூங்கும் தோளெடுத்து விதிசூழ் பிறப்பெடுத்து கனல் கண்ணுடை காலகாலன் கழலடிக்கே மலர் சொரிந்து மன்றாடுவதையுணர்ந்தேன். அகிலாண்டவன் யாரென ஐயம் தெளிந்தேன். இதை அறிந்தோனே அங்குறைய பெரும் பேறு பெறுவானென பிறப்பறுக்கும் பெருவழி சொன்னேன்.
பாகம் 110
🌸 அஞ்சன் நெஞ்சுறை அஞ்ஞை அருளிலா அசிதனை அம்மையப்பன் மெய்யுறை அணங்கவள் அருள்நிறை ஐயனை இங்கெவரும் நெருங்கா நெருப்பென நிமிர்ந்த நெடுவரை நிகர் தேவனை யெவரும் வஞ்சம் தீர்க்க இயலா வரமொடு வந்தோனை அறிய வல்லிலா வீண் வில்விழிகள் போதா விண்வெளி ஆண்டு வேதம் பூண்டு விளைந்தோனை அரிய ஆயுதமும் கொய்ய தேறாது கூற்றுவனும் கூடாது ஓடும் கொற்றவனிவனென்று மற்றவரெவருமறியாது மண்ணுறைந்து போயினும் மாமுனியறிவர் உடனவர் சீடன் மடமுனி யானறிவேன் முடமுடை மும்மல மனத்தொடு நடை பயில் நாணமிலாது நாறுமுலகே.
🌸 ஆடவள் கண்டம் சூழ்ந்தறந்தாங்கும் காஞ்சனச் சரடறுத்தோடும் கயவரினம் கண்டு எம்மான் இதயக்கமலமுருக எளியோர்க்கிரங்கும் பொன்மனம் புயலெழும் தென்முனை திருவாளன் முன்னில் வானமே வளையும் வள்ளல் வலக்கரக் கைத்தலமுள்ளில் கள்ளழகு காமுகன் கைதவழ் வலம்புரி தலைச்சங்கம் கயல் வாலொடு இணைய அக்கார்வண்ணன் கண்கவர் சங்கின் கடை முனை பாண்டியச் செஞ்சேல் படிந்த தலையொடு அறுபத்தொன்பதாய் அணைத்து புணரக் கண்டே பெருவிரலதன் பேரவா பெருக்க
சீர்மயில் சிரமாய் செவ்வெழில் தரமாயமர கண்டேனது கிடையாய் கிடந்து கீழ் செவ்வாயிற் உறைந்து இருவிரற்கிடைக்கொரு விரற்கிடை உயர்வாய் திருமாலவன் மாதமர் பெருமலர் வலம் வருமிதழொன்றில் குழலெழில் குந்தன் ஊதிய திருச்சங்கின் பாதியை கண்டென் அஞ்சா நெஞ்சம் அஞ்சனரும்பிறப்பென்றே அடிபணிந்தெழுமே.
🌸 கற்றோரெல்லாம் கண் திறந்தோரிலையே. கண்ணிருந்தும் கசடற சொற்போர் புரிவோர்க்கும் சுழுமுனை விரிவதிலையே. விழிதழலெரியும் விமலனடி வீழ்ந்து வினையறுப்போர்க்கல்லால் பரம பதமதில் பதியக் கூடுமோ. விண்ணவர் வியக்க வண்டமிழை விற்போராயினும் வேண்டுவது யாதெனில் வெற்றிமுகமேறி விரும்பியே அறம் சிதைத்தால் அவனெச்சம் அனைத்தும் வேரொடு விரைந்தழிவது உறுதியே. அவர்க்குரைப்பதும் இறுதியே. அற்பர் உலகில் அழுக்கு இருளில் அறிவிலிகள் இயங்கி தற்குறி பொருள் தர தரம் பிழை உயிர்கள் உயர்வென கருதி ஊளையிடுமே உமையொரு பாகனே.
🌸 அரைக்கீழமைந்த அவ்விழி நாடி அதனில் கூடி இரைத்து போவதில் எப்பயன் கண்டாய். மரை மலரிதழுள் மதநீர் வடிந்தால் எதுவுமிங்கு இன்பமில்லை. ஈசன் பதமலரிதழில் படியும் கண்ணீர் பாழுலகை மீட்டு மேலுலகை காட்டும் காட்டா கன்னியர் கீழிதழ் உனக்கு கீழுலகுறைய கிடுக்கி பிடிக்கும் கேளாய் மனமே.
கறைக்குள் உறைந்து கண்களை மறைத்து சிறைக்குள் இருந்து சிந்தை மரத்து சிறுத்து போதலால் எவர்க்கும் பயனிலை அறிவாய். கரைக்குள் உறைந்து காமம் பெருத்து விறைக்கும் வெறியொரு வெறியா நீ சொல். அக்கரையை உடைத்து காட்டாறெனவே அவனியை துறந்து அவனிலுறைய நீ வா. யானுரைக்கும் ஒளியுரை உனக்கும் கேட்கும் ஒழியாதிங்கே வா வா.
எடைக்குப் போட்டால் எதுவும் இல்லை. இவ்வுடலால் வருவது மாபெரும் தொல்லை. எல்லாம் வல்ல ஈசனடியோ என்றும் நாறும் முல்லை. அதற்கீடிணை என்பது இவ்வுலகல்ல எவ்வுலகிலுமில்லை. சிரை மனம் செல்லும் இடமெல்லாம் இனி செல்லாது இங்கே வா வா. சுமை தனை தாங்கி சூட்சுமம் சொல்வேன். இது சுந்தர சொக்கன் மீதாணை.
எம்மறையோதி மறுமையை வேண்டி எவ்வழி தேடிடினும் சுரைப்பாலருந்தி சிரமறுப்போர்க்கு சுழுமுனை கருமுனையாகும். அது ஒளி முனை ஆகாதொருநாளும். அவ்வெய்யர் உய்ய வழிவேறில்லை யறிவாய்.
நரை விழும் முன்னே நாதன் திருவடி வீழ்வாய். அவன் நிறைதனை அறிய நின்னிருவிழி போதா நீசர் நிரையுடன் இணையா அருமுரை அடியேன் அளப்பேன்.
மறுமொழியின்றி இவ்வருமொழியொன்றை யான் தருமொழியெனவே கேட்பாய். வரைக்குள்ளமர்ந்து வாய்க்கு வரும் வாக்குரைப்பேன். வையத்துள் வாழாது போவோர் தேறாது போகார்.
திரைக்குள் வீழ்ந்தவள் தென்னிலம் ஆழ்வாள். வலைக்குள் வீழ்ந்தவன் வஞ்சி அவளுடன் கொஞ்சி குலவியும் கூடி கலவியும் கடை வரை வாழ்ந்திட மறுப்பான். காமன் கலைகள் முழுமையும் சுவைப்பான் காதல் முடிந்ததும் அவள் கதையும் முடிய விலைபெற்றகலும் வெறும் வேடனாய் பறப்பான். அவள் தலைக்குள் செதுக்கிய இம்மை எழுத்தினை எம்மால் எடுத்து இயம்ப இயலுமே. மறுமையையன்று அந்த மாயோனையும் அறிந்து
உண்மை உரைக்க என் ஊமையை கலைத்தேன். அவள் சின்னஞ் சிறுமியாய் சிலுவையை அணிவாள். சீரிளம் குமரியாய் பணந்தனில் புரள்வாள். பேரிளம் கடந்தும் பேதையாய் பின்னொரு சிவனிலணைவாள் பின் செய்வதறியாதவனையும் பிரிவாள். பெருந்துயர் தின்று பேயவள் மைந்தன் பொய்யையுணர்வாள். சீரும் வாங்கி சேர்க்கும் வீட்டினர் இவள் உள்ளம் அளக்காதவள் செல்வம் அளக்கவே சிதையும் மனத்தோடு சிறகுகள் சிதற பறப்பாள். அன்னை அன்னையே அவள்க்கிணையில்லையே. அம்மானின்பம் அனைத்தும் கசக்க அவனையும் துறந்து அரும் பணி தொடர்வாள். வயதையும் இழந்து வாலிபம் கழைந்து வளவாழ்வையும் மறந்து பரமன் மீது பாரமிட்டு பொதுவில் ஊழியம் புரிவாள். பல்லுயிர் மதித்து வெல்லுயர் அவை தனில் விழைந்தே அவளும் மன்னுயிர் வணங்கும் பொன்னுயிராவாள்.
பாகம் -111
🌸 அறனார் பொதிந்தரவம் குவிந்த அச்சிவனாருறைந்த சீர்மலை சூழ் உவர் திரவம் உயர்ந்தெழுமே. அதை அடிமை கொள்ள எவன் வரினுமவனுடன் அழிவை தேர்ந்தெடுப்பான். பல மருமம் புதைய அங்கு தருமம் உறைய அவன் வரமாய் மறைந்திருக்க அங்கு உதிக்கும் பேயது போராய் கொதிக்க கண்ணீர் கரைந்தோடும். கருணையன்னையின் கருக்கலைந்தே போயிட வறுமை பாயிடுமே. உறைபனியை உடுத்த துருவ நாட்டால் பல தருநிலம் உருக்குலையும். நெருப்பு மழையால் நிலங்கள் எரியவே நெஞ்சம் பதைபதைக்கும். உண்ண உணவே கிடைக்கா கிடையாய் பல்லுயிர்கள் வதை படுமே. வல்லூறு ஊர்திகள் சொல்லாது கொள்ளாது பொல்லாத நமனாகும். அங்கு எண்ண முடியாமல் ஏராளம் பிணந்தின்று பணவைகள் விடைபெறுமே.
🌸 விண்டுவின் நகலவனை விரைந்தே காண விரி வியலுள் சென்றேனங்கே வீசுமொளி வீழா வியலுடல் ஒன்று கண்டேனதில் செம்முளரி முகமாய் முளைத்ததோ என சிந்தை மயங்கி அகமிழந்தேனவன் அறமோங்க அவதரித்த அண்ணல் கல்கியென அங்கடிபணிந்தேன்.
🌸 காமற் கரித்த கனல் கண்ணாருதிர்த்த கண்டிகை கழுத்திலாட கன்னிகழியா காக்குமன்னை குமரியாக வன்னிச் சுடர் போல் வாடா முகத்து மாமன்னனவன் மலர்த்தாளடி தனை தளராது தயவுடன் கண்டே
மேன்மேலும் வாக்குரைத்து மீதமுள்ள ஊழ்வினையறுப்பேன். நீடுலகில் நிறைந்தொழுகும் நெஞ்சுறை பரம்பொருளே.
🌸 செஞ்சேள் ஒப்பாய் சீர் புயம் கொண்டோன் வலக்கரம் பொதிந்து வானருள் பொழியும் தேனினும் இனிய தென்னவன் கொண்ட காஞ்சனமொத்த கைத்தலமுள்ளில் மாநிலம் மயங்கும் முண்டக இதழுள் முயங்கிய குண்டலி மயிற்சிகையாக மாதவன் தலையுறு மௌலியுமொளிர கண்டேனங்கே மறையாதருளும் தேவநகரியின் திருச்சொல் ஓமென்றமைய உயிர்மெய்யிணைந்த உறவிலி கரம்பிடி உடுக்கையும் மைத்துறைய உடையாளீன்ற செவ்வேள் உடுமீன் அறுமுனை அம்போருகமுள் அழகுறு இருக்கையும் திருமால் கையுள் திடமாயுறைந்த திவ்விய சங்கமும் தெளிவாய் தெரிய அவன் திருவழி மரபினர் நெற்றிகுறியென நெடுங்கொடி போன்ற திரிகோடுயர தெக்கண ஒவிய தென்னில பாகமும் ஆலய தீபமாய் அழகுறு ஈழமும் அருகினில் அமைய அனைத்தையுமொன்றாய் அன்பாயணைக்கும் ஆருயிர் தாயென தாமரை தாங்கும் கைத்தலங்கொண்ட எம்மானவனே உந்திக்கமலம் உயர்த்தியுறங்கி உலகை அளந்த பெருமாள் தோன்றும் பெரும் பிறப்பென்றென் கனலிமை காக்கும் கண்மீன் திறத்து உமையொடு கண்டதை ஒழியாதுரைப்பேன். இனி உலகில் உதிப்பது ஒப்பிலா நலனே.
🌸 அருங் கொடையுள் பெருங்கொடை அன்னமிட்டு உண்ணுவதே. இதை அம்மையப்பன் மெய்யுறை அன்னையும் அருள்வாளே. அண்டமுறை அனைத்துயிரும் அனுதினமும் மகிழ்ந்தாலே அம்மகளகம் குளிர்வாளே. பெருங்கொடையுள் பேறுபெற்று பிறப்பகற்றும் நீதி பெற பிறைசூடி பெயர் ஓதி பிழையறியா வாழ்வமைக்கும் கறைபடியா அடியார்க்கு கரத்தாலே அன்னமிட்டு அமுதூட்டல் ஒன்றேயாம்.
🌸 கண்ணனவன் கலி மாய்க்க காடுறைந்து தவம் நோற்றால் திண்ணம் இந்நிலம் நடுங்கும். தீயெனவே கதிரெரிக்கும். மேகமது வானமதில் மின்னலொடு வெகு
வெடிக்கும் திருவாழ்வமைத்தோரும் தெருவோரம் வந்து வீழ்வர்.. தீ தின்ன தீனியோ தினம் தோறும் கிடைத்திடுமே.
🌸 திங்கள் சூடி தீரன் மகளை தன்பாதி அங்கம் சூடி அண்டம் பகிரண்டம் இயக்கும் அடியாரினமே வியக்கும் வண்ணம் வையம் தனில் நின் வான்புகழ் நாமம் ஒலிக்க கேட்கும் செவியே நற்பயன் பெறவே நவில் தோறும் நற்கதி இழக்குமோ என் நாய் பிறவி. நாதா இதற்கொரு நல்வழி சொல்வாய். நானும் அவ்வழி ஊர்ந்தேனும் சேர்வேன்.
🌸 கந்தையணிந்த கனகவேள் கதிர் மேனியை கண்டே கண்ணீர் பெருக அண்டமெங்கும் அமுதூட்டும் அன்னம் பொழியன்னையும் அகிலம் விட்டகன்று போவதை கண்டு தேவாதி தேவரின் திருவிழிகளொழுகிட தீக்கண்ணாலதை சிவன் காண திருக்கண்ணாலதை இவன் காண திருநடனம் புரி தில்லையப்பன் நெடுவிழியால் எல்லையிலாது எல்லாம் கண்டேன்.
Comments
Post a Comment