பாகம் 112, 113 & 114 முப்பார்க்கும் மூலவனாய் முத்தமிழ் காவலனாய் எப்பார்க்கும் தொண்டு செய்யும் எம்மான் மனம் சிதைத்தால் எப்பயனும் இல்லையென்று இறையனார் என்மூலம் எச்சரிக்க உறுதியாய் வாக்குரைக்க உலகே நீ செவி மடுப்பாய். இதை அறுதியிட்டடியேனும் அகிலத்து அன்பரெலாம் அறிந்திடட்டும் என்றே அகம் கொதித்தாடுகின்றேன்.
பாகம்112 🌸
ஐந்தாறு அரவங்கள் அங்கமூர்ந்து ஆர்ப்பரிக்கும். அணங்குடை அருநிலத்தில் அறுவடைக்கு அல்லலெழா வழிவகுத்து பருவங்கள் பொய்க்காது பயிர் வளர்த்து பாருக்கே அமுதூட்டும் பண்புடை புவியாய் வளம் கொழிக்கும் பைந்தரையை சேர்ந்ததொரு கடல் பாகை கட்டியதோர் கடன் பட்ட கிழமொருவன் செல்வப்பூ மலரும் செழுங்கலையறிந்த சிந்தனை பழமொருவன் அறிவார்ந்தோர் திறம் பயின்று முண்டகத்துள் வீற்றிருக்கும் முப்பெரும் தேவியருள் காஞ்சனாத்தாள் பாலருந்தி கற்பூர மதியுடுத்தி கனக அமைச்சாகி பின்னம் கண்ணிய பேரவையுள் காவியம் படைத்தோனின் அரியணையிற் நேரெதிராய் நீதிகொன்று நிலையுயர்ந்த தற்குறிதான் தலைதூக்கி தானாளும் தருநிலத்தின் தரம் கெடுத்து கொக்கரிப்பான். செய்யாளை புறம்போக்கி செழுநிலத்து செல்வத்தை சீரழித்து வாய் ருசிக்காய் வாழ்திடுமே பேயாளீன்ற பெருந்துயர்கள். பேராண்மை தனை மறந்து நாட்டவரை நாயாக்கி நடுத்தெருவிற் விடுகின்ற வெந்துயரை யானுணர்ந்தேன். வெய்யரெல்லாம் அவை நடுவே வீற்றிருக்கும் நெடுமரம்போற் வெறுமனே அமர்வதனை சாபமாய் பெற்றது தான் பாவத்திற் பாவமாகும். பரந்தாமா கண் திறவாய். பொய்யர் பூக்கும் வையத்து வன்னாடுகளனைத்துமே உய்ய வழியின்றி உதவிக்கரமின்றி வீழ்கதியுள் உழலுகின்ற தாழ் நிலமாய் தரமிழக்கும் நிலை போக்க பரணியிசை முழங்க தரணியை ஏற்றேடுத்து தயாளா உயிர் காப்பாய்.
🌸 கன்னியவள் கொலுவிருக்கும் கடலோரம் செல்லுகையில் காதமொன்றரைக்கு கால் கடுக்க யான் தளர்ந்து தரை அளந்த கரையோரம் பொன்னையன் பொழிந்ததொரு பொல்லா சின்னமென கனகக்கனி வயிற்று கயமையின் கருவாய் உருவுற்று கனிவறியா கபோதியாய் கலியன் கைவலுக்க காரணமாய் உதித்தோனும் ஐயன் இடமறிவான். அதை அடியேனும் நன்கறிவேன்.
🌸 பாரெங்கும் பாம்பெனவே பற்பல புற்றுவைத்து பாவ இளவல்களை தன் பல்லறிவால் திசை மறித்து மங்கை பாகத்து கங்கை தலையர்க்கு கொங்கு வரையடியில் குன்றென சிலை எழுப்பி கூத்தாடும் கொலைக்கஞ்சா குடிசேர்த்து குணக்கேடனறிவதனை கோளறு பதிகம் பாடி கூடுதல் யானறிவேன்.
🌸 பூதனையும் பிறப்பெடுப்பாள். பொல்லாதாருடன் இருப்பாள். இதில் வேதனையென்னவெனிற் விண்டுவின் வருகைதோறும் வாதையினை விதைத்தவாறு வன்முறையை கையாண்டு விளைச்சலின் பலனறுத்தும் விதியறியா அரக்கியாகி இடர் மகனாம் சாத்தனின் வாக்கியத்தை சதுர் வேதமாக எண்ணி சாதனை புரிவாளே. ஆராதனை பெறுகின்ற எம் அன்பகத்து அணிகலனாய் புவியரசன் பூத்தெழுந்த பொன்னிலத்திற்கு பூவாடை கொண்டு வரும் திசை எண்ணிற் காதத்திற்கப்பால் கனிவின்றி கயல் கொல்லும் கடலறுவடையை கரையோரம் கரம் பிரிக்கும் சேர நாட்டின் சீரெழில் துறைமுகத்தின் தீதின் மகளாக தெரு மங்கை உருவெடுத்து திரை கடந்த புகழ் உடுத்து மாடமடம் அமைத்து மரை முகத்தான் தடமறிவாள்.
🌸 புண்டரீக மலரேந்தி பொன்னிலம் தகர்க்க வந்த சந்திர பதியுதித்து சண்டாளனாய் அமைந்து மோகமுடை இறை பெயரில் முறையறியா அந்தண குலமுதித்த அற்பனவன் முத்தமிழன் முழுமுகத்தை முன்பே அறிந்ததனை அடியேன் யானறிவேன். அறனே நீயறிவாய் !
🌸 ஆயிரங்கால் அட்டைக்குள் ஓராயிரம் பேரமர்ந்தபடி ஆயர்பாடி மன்னவனின் அரசவை மண்ணினிலே அமைதியோடு இடம்பெயர்வர். அதிலப்பாவி அறுபதனை எரிதழலுக்கிரையாக்கி நரியரசாய் நாடாள புவியரசன் பூப்பானே. அவனரவத்தின் அருமகவாய் அரசர்க்கரசனாகி அமரேசன் பெயர் தாங்கி அரியணைத் தீயெனவே ஆணவம் தனிலுறைந்து அகிலத்தை வலம் வந்து அருள் நிலத்தின் வளம் சிதைத்து அகமறிய அறம் கெடுப்பான். கண்ணீருறை கனகமனைத்தையுமே காலடியில் குவிக்க விட்டு மன்னுயிரின் நலமறியா மாமடையனாயமைந்து ஊர்கழுகின் உள்ளமர்ந்து உறு கண்டம் பல பறந்து அகிலத்தில் வலம் வந்து ஆடிடும் அற்பனவன்
அழலோடு அழிவதனைஅகக்கண் ஆறாது அடியேன் கண்டேனே. கொடுங்கலியின் கடைமகனாய் கூடொருவன் உடனிருந்து குடி கெடுத்து மடி நிறைத்து கொண்டாடி மகிழ்வதனை அகம் கொதிக்க யான் எழுந்து அறம் பாடி அழிப்பேனே. அறனே நீ அருள் பொழிவாய் !
113 🌸 இருகாணி சிறகமைத்து இலுப்பை மரக்கோடுயர்த்தி இதமாக நிழலூட்டி என்றென்றும் தாலாட்டும் புவிமாது மடி தன்னில் புன்னகை இதழ்விரித்து மலர் சிரிக்கும் குளமொன்று குணக்குன்று உதித்தெழுந்த குலமாதர் அணங்கு வாழ் மாடத்தின்பிற் குடக்கே ஐநூறு அடிகோலுக்கப்பால் இருள் சூழ்ந்தால் இனநரி இறங்கும் குன்றங்களில்
மலையாட்டி முலை காட்டி தன் மழலைக்கு பாலூட்டி மனநிறைவு பெற்றது போற் சிறுகுன்றம் தலைதூக்கி சேயெவே வருகின்ற குயின் குஞ்சிற்கமுதூட்டி குளிருறை காரோட்டி கொஞ்சிவரும் அளவளாவிய காட்சி தனை அளவின்றி கண்டேன் இச்சிவனாண்டி.
🌸 வரிசையுள் நுழைந்து வஞ்சம் நிறைந்து குருதி குடித்து குற்றம் புரிந்து சூது துளும்ப விழியும் பதித்து விளங்கிய பூனைகள் விடியும் வரைக்கும் வளைந்து வந்திட மதியும் மழுங்கி மனமும் சுருங்கி மன்னன் பொன்னடி வீழுமெங்கும் அரவம் போலவே அருகிலுலவுமே. அதில் வெருகுகளாயிரம் வீராப்பாய் தோன்றினும் அவை சருகாய் எரியும் துயரமருகிலே என சாட்சி சொல்வேன். புனுகு பூனைகள் பொய்யகற்றி மெய்யை புரிந்திடும். அவைகள் பொய்யரினத்துக்குள் புக்காது புறம் வந்திட பண்பு கொன்ற சில் சீறும் பூவையர் பங்கு பூனையாய் படுகுழியுள் வீழ்வதை பரமன் சொன்னதாய் பாட்டில் தருகின்றேன். வரவு பல வந்து வாலை முறுக்கியே வேடர் வீரியம் விலையும் போனதால் வீடுறைந்திட வழிகளில்லையே . அவை வற்றும் வாவிக்குள் வந்துறைந்திட்ட அற்ற பறவை போல் கெட்டு நாறுமே வெற்றி குவிப்பதும் வெகுவும் கடினமே. உற்ற வரமென உதித்த வேந்தனை நட்ட வாள்முனை நறுக்கி வெல்லுமோ. நெஞ்சில் கனிவிலா நீச மாந்தர்கள் கொண்ட ஊழ்வினை கொடிய பாழ்நிலை கொண்டு வாழ்வதை கண்ட நானிதை கரிய நாளிதாய் கடிய நேர்ந்ததை வந்து பாடவே எந்தன் நாதனை எண்ணி கறையிலா கனகக் கல்கியை கண்ணில் கண்டுதான் இறைவன் உலகிற்கு எம்மை எழுப்பினான். காணும் வீரமோ அவன் கண்ணிற் கனலென தெரியும் நிலையிலும் வெறும் விழல் கன்றென யான் விட்டு விலகிடேன். வீணாய் வாழ்வதில் எமக்கு விருப்பமில்லையே. விடியல் தந்திட அவன் வேர்க்கு உரமென வார்க்க என்னயே வரமாய் வந்திட்டேன்.
🌸அளியனுதித்த அருநிலத்து வடதிசையிற் ஆறைந்து
காதம் பெருக்கி ஆலகாலனை அண்டிய தொலைவிற் பழவம் பதிந்த பைந்தமிழர் களபக் காரூரு தனில் கால்பதித்த கடும் வெய்யன் கொங்கர் நிலம் கொள்ளா அடிபதித்து ஆங்கே அல்லியனாக்கி ஆயிரம் கைம்மா குடிகெடுத்தோனெம் கொவ்வை செவ்வாயுறை குமரி பொதிந்த நம் நறுமுகத்தான் பொற்தலைக்கோர் அந்நரிமுகத்தான் விலை கொடுத்தானாயினும் எம்மானழியாதொளிர்வானிதை எம்மகவிளக்கேந்தி அறனார் நெற்றி அகல்விளக்கூன்றியடியேன் பகலிரவாய் பத்தி பரவசமுற்றிவேன்.
🌸 பெம்மான் இவனை பிறையோனழைத்த பேராசாய் கண்டேன். இவன் பிறவான் இறவான் பிறப்பாய் கண்டேன். பெருமானிவனை பேரெழிலுற்ற எம்மையுறைந்து இறையனாரமர்ந்த எழில் மலை சுற்றி வலம் வருமழகை வானோர் காண வரமாய் பெற்று யானோ வியந்தேன். எம்மான் எழில் கலை தன்னை இதமாய் இதயம் களிக்க செம்மான் கன்றுடன் செய்த குறும்பை உம்மையிற் கண்டேன். இனி மும்மையிலுழலும் முப்பிறப்பறுப்பேன்.
மூலவராக சீதளப்பொய்கை சூழ் நல்லூர் தனிலே சீரும் சிறப்பும் பெற்றவன் பெற்றோருடனே உற்றார்யெனவே பொற்றாள் பணிந்து உற்று நோக்கியே உலகினை மறப்பேன்.
🌸 நெருப்போடைக்கருகாமை நீரோடை கருகாதோ ? உறுப்போடு உருகாதோ ? உதவிக்கரமின்றி உலகு என்செய்யும் . பொறுப்பானாய் புதல்வா நீ ! பொறை கொண்டு புறம் காட்டி தடம் பேணல் எவ்வறம் ? அறமறுத்து ஆயிழையர் அருங்கற்பு தனை பறித்து அவள் சிரமறுத்து மதம் பிடித்து அகமகிழ்ந்தகலும் மறுமை ஈட்டா வறுமை தீண்டும் மாபெரும் கைதவன் போற் கைகழுவி போவது தீதினும் தீதாகும்.
பாகம்.114
🌸 சின்னம்மை வடிவுடை செந்நாகம் சீறீயது. அது செந்தமிழ் குணக்கர் சீருடை புற்றில் சீறியே வந்து சேர்வோருடன் சேர்ந்து சேரமான் நிலமுதித்த செங்கமல முகத்தோனின் சின்னமதில் கன்னம் வைத்து தன் வல்லினத்தை வாழவைத்து வாழும் முத்திரையை வாள்முனையில் கவர்ந்திடத்தான் தோள் ஈந்த கள்வருடன் தூக்கிட திட்டமிட்டு தலைசிலிர்க்கும் தமரமைத்து தரை முழுதும் விடம் விதைத்து கொற்றவன் அவை பிடித்து கொலுவிருக்க எண்ணிடுமே. கொட்டமடங்காதாள் பட்டத்தரசியாக படாத பாடுபட்டும் பார்ப்பனர்கள் படியகற்றி படு குழிக்குள் விழ்த்துவரே. பரந்தாமன் பகை ஈட்ட அறந்தாங்கும் உயிர் பறித்து மறமறியா அரக்கியாகி மாநிரையை ஏவியதால் கொடும்பாவி பேரெடுத்து கோட்டைக்குள் கூடாத கூகையாகி கொள்ளியுள் சிதைந்திடுமே. உலகளந்தான் உலகுதித்து உய்த்திடவே உமையொடு உறைந்திட்ட உடுக்கையன் உடனிருந்து ஓயாமல் துணையிருந்து இடடுக்கண் அகற்றியதை யாரறியாதிருந்தாலும் யாம் அறிவோம் பரம்பொருளே. பொன்மனத்தான் புன்னகையை புலிநகத்தால் பறித்தவளின் பதிபக்தி பாழ்பட்டு பல்வளம் கெடுவதற்கு நல்லறம்பாடியே துர்க்கையை தூண்டுதால் தொழும் அவன் நன்மகற்கு தோடமைத்து துயர் தீண்டா கோடமைத்து சீருற காப்பதனால் கேட்டின் கீழ்மகளும் கேள்விக்குறியாகி ஏட்டில் இடம்பெற்று இழிமகள் ஆவாளே. என் போற் ஈசனடி இருப்போர் இடும் சாபம் ஈசல் இறகெனவே எளிதில் உதிர்ந்திடுமோ ? இனியவன் வாழ்வுதனை இருட்டடிப்பு செய்வோர்க்கு இந்நிலையில்தான் தீர்வெனவே அரவம் முடிந்தவன் மேல் ஆணையிட்டு ஆர்ப்பரிப்பேன்
முப்பார்க்கும் மூலவனாய் முத்தமிழ் காவலனாய் எப்பார்க்கும் தொண்டு செய்யும் எம்மான் மனம் சிதைத்தால் எப்பயனும் இல்லையென்று இறையனார் என்மூலம் எச்சரிக்க உறுதியாய் வாக்குரைக்க உலகே நீ செவி மடுப்பாய். இதை அறுதியிட்டடியேனும் அகிலத்து அன்பரெலாம் அறிந்திடட்டும் என்றே அகம் கொதித்தாடுகின்றேன். இதை அந்தணர் குலம் துளித்து சந்தண மனம் வீசும் செந்தணலே அறியீரோ.
🌸 உயிர்க்கொலை செய்யானை உலகாள உருவெடுத்த ஒளிக்கதிர் மெய்யோனை பைம்பயிரை தருவென பரிவோனை பாரிணைத்து பல்லுயிருமொரு குடைகீழ் பலர் வியக்க கொணரும் பண்போனை பாவியர்கள் கொல்ல வந்து படும் பாட்டை கண்டோனாய் யான் துடித்து போவதேனே ஈசனே நீ பதிலுலரைப்பாய். செம்மண் காத்து செம்மான் மகள் சேர்ந்து செவ்வேள் மீட்ட எம்மண் மணம் தன்னை எண்டிசையும் வீசவிட்டு எம்மானை மீட்க மட்டும் இன்னும் நீ தாமதம் ஏன் ? பரந்தாமனாய் கொடுத்த பல்யுகமாய் வகுத்த கறைகாணா செவ்வரத்தை செவிசாற்றி செவ்வனவே உசுப்பிவிட அகமுருக யானழைத்தேன்.
பதிலுரைக்கும் பண்பிலாது பாம்பணிந்து பரம் தனிலே படுத்துறங்கும் மாதொரு பாகனே நீ மனமிலாது ஒதுங்கலாமோ ? கடும் தவத்தை கைவிடாது காதலுடை நல்லோர்கள் பலர் புரிந்த புண்ணியமே இப்பாழுலக மீட்பனாக அவனெழுந்த கண்ணியமே. கடன் வழுவா கருணை மிகு கார்வண்ணன் கனிமுகத்தை யான் கண்டேன். கன்னியவள் கைத்தலம் கதிர் பொதிந்து கைவிடாது காக்கும் தென்முனை தீபமென திருவுடல் கொண்டோனை தீண்டியான் நலம் பெறத்தான் வேண்டி யான் விதியமைத்தும் வெண்டலை நீயணிந்து வினை அறுக்க தவறாலாமோ. வேண்டி நிற்கும் வீணருக்கே உதவிடும் நீ ஆடவர்த்திலகினையே ஆரறியாதமிழ்த்தலாமோ ? வானளித்த வல்லோன் வாள் பறித்து வாழ்வின் ஊழ் மறித்து வையத்தை வாட்டலாமோ. அவன் தோளறிந்து அமரரே தூண்டிவிட்டும் தொய்ந்து நிற்கும் அடியாரும் அறிந்திடவே ஆணையிடும் அருகதை ஏதுமின்றி அடியேனுன் பொற்றாள் பொதிந்து வேண்டுகிறேன். புவி காக்கும் அவன் வருகைக்கேங்குகிறேன்.
🌸 ஆருக்கும் அடங்கானவன் அமரருள் அடங்குவான். அணங்கனுள் அடங்கும் அணங்கினையே அவதரித்தால் வணங்குவானவன் பாருக்குள் ஒதுங்கியே பன்னாட்டுள் பதுங்கினாலும் பரமசிவனருளாலே அப்பங்கயத்தான் பன்முகத்தை பால் பகுக்கும் அன்னமென பகலொளி பாய்ச்சும் வேல்போல் யானறிந்து அவ்வேளவனை கைதொழுவேன் ; கால் தளரா நடம் புரிந்து கண்டம் விடம் கொண்டதோர் கயிலை வாழ் பரம்பொருளே !
🌸 கூதிக்கெங்கும் குறையாதேங்கும் இவனோர் கொடியே மேலோங்கும். கொல்லா நோன்பினை போதித்தோம்பும் பொன்னகத்தானிவனை வாதிக்கே வணங்கத்தோன்றும் வள்ளலானிவன் வானவருடன் இணங்கியே வளமுறப் பெற்று வரம் தரும் நிலமுன்னை வாழ்த்த எமக்கும் வயதில்லை. உனை வணங்குவோர்க்கு அணுவளவும் குறையில்லை. மணங்குவிப்போர்க்கல்லாது மாற்றார்க்கும் மனமிரங்கும் மண்மகளே !
Comments
Post a Comment