பாகம் 121, 122 & 123 அனல்விழியன் அரசியாக அவன் கழுத்து மாலையென மணிவண்ணன் திருவாட சிவன் கொடுத்த வாளாக புடைசூழும் படையொடு புயல் வேந்தனெழும் நிகழ்வை விழல் விழியோரறியாது தழல் விழியோரறிந்திடுவார்
பாகம் 121
🌸 அன்னை நிலம் அழிவடையும் அகிலமெலாம் சிதைவடையும் கூற்றுவன் மனமகிழ்ந்து கொல்லும் போர் படையாலே கொண்ட நம் இமைகூட குத்திக்கொள்ள கூர்விழியும் குருடாகும். நாதனுயிர் குடியிருக்கும் நட்டவுடல் நலிவடையும். வேந்தர்களே நெறிமறந்து வீணர்களாய் அறம் மறந்து வாழும் காலம் தலை தூக்கி வந்துசேரும் வல்வினைகள் மாந்தர்களை நாளெல்லாம் மனம் குமுற செய்தபடி மேய்ப்பனுக்காய் ஏங்கிடுமே. விண் நோக்கி கரம் குவித்தும் வேண்டும் ஏதும் விளையாது விழலுக்கே வாழ்வளிக்கும் வினையாகி விழிவழியும் . குலம் தளைக்கும் விளைச்சலின்றி கொலைக்கருவி விளைச்சலாலே கூக்குரல்கள் வலுவடைய குற்றுயிர்களறுவடையாம். வாக்குகளின் விலையழிந்து வாடும் இனம் வழியழிந்து வகை வகையாய் இன்னல் வரும். வரம்பிலாமல் எல்லை மீறி இயலன்னை இரக்கமற்று உரக்க சீறும் அரக்கியாகி ஓய்வெடுத்த பின்னரொரு குடைகீழ் உலகு வந்து ஒருவனுக்கே உரிமையாகும். அக்குமரன் வந்தமரும் தருணம் வரை கொண்ட நிதிகுறைவதோடு பன்னாடும் தலைகுனிய பாரதமும் நிலைகுலையும். அன்னமேற்கும் திருவோடு அரசன் கைக்கே வருவதோடு அனைவர் கையும் காலியாகும். தேடியோரனைவரையும் திகைப்பிலாழ்ந்தி தென்முனை ஈன்றதொரு தெய்வமகன் தீயெனவே தீயோர்க்கு திகிலூட்டி நல்லோர்க்கே நலம்படைப்பான். திண்ணமிது மன்னுயிரே எண்ணமெலாம் இன்புறவே இறையோனின் கண்படவே எம்மையன் வரவறிந்தேன். மறுமலர்ச்சி தொலைவில் இல்லா மண்ணெல்லாம் பொன்னாகும் மன்னன் ஆட்சி மலர்ந்திடவே எண்ணம் போலவன் வருவான். முன்னம் அக்கொடுமரத்தில் மூர்ச்சையற்று மரிக்கும் போது கன்னிமகன் கனிவோடு கள்வரையும் மன்னித்தான். இம்மை தனில் எவரையும் ஏறெடுத்தும் பார்க்காமல் மண்டியிட்ட மாற்றான்கள் மனம் மாறியணுகினாலும் உண்மையிது எம்மையன் ஒருபோதும் விடமாட்டான். எமையென்றும் ஏமாற்றானென உமை மீதாணையிட்டு உலகறியச் சொல்லுகின்றேன்.
🌸 மாற்றான் கதை முடிக்கும் மன்னனவன் கதை சொல்வேன். இதை கூற்றாக கூறாமல் கொண்டதொரு அருள் வாக்காய் வெண்டலையான் வரவேற்க விதி எழுதி நான் தருவேன். இதை முன்னரும் காதோரம் மொழிந்த கதை ஊரறியும். வெந்ததையே தின்னாமல் விளைந்ததையும் விடாமல் வாய்க்கு வந்ததையும் சொல்லாமல் வரிவரியாய் மெய்யுரைப்பேன். வானவர்கள் கைதூக்கி வாழ்த்து சொல்ல வழிவகுப்பேன். வேள் அவனின் விதியோடு இக்கதையும் வினையகற்ற உற்றதொரு மாலவனின் கதையாக மனம் மகிழ்ந்து சொல்ல வந்தேன். அவனியிலோர் ஆலமரம் அதனடி புற்றத்துள் அரவம் வாழ்ந்த கதை அதையும் நீயறிவாய். அதன் கோட்டுக்கிளையொன்றில் கூடமைத்து முட்டையிட்டு குஞ்சுக்காய் அண்டங்காகம் தவமிருக்க அடிப்பொந்துள் உறைந்ததொரு அகமுருகா கருநாகம் அவ்வப்பொழுதெல்லாம் கிளையேறி மேல் வந்து கிடைத்த முட்டையத்தனையும் கௌவி தின்றுவிட வாரிசே இல்லாமல் வாடியது புள்மனமே. ஊனுருகி உயிருருகி உளம்நொந்த காகமது உற்றதோர் தீர்வு காண ஓடும் நதி நீரில் ஒய்யார அரசி வந்து உளமாற நீராட உட்புகுந்து நெடுங்கரை தன்னிலவள் நெஞ்சணிந்த மாலையதை நீக்கியவள் அங்கேயே கழற்றிவைக்க காகம் அதை தன் அலகால் கௌவிக்கொண்டு தூக்கியோட காவலரும் பின்தொடர ஆலமரத்தடியில் அரவ வளைக்குள்ளே அணிகலனை இட்டதுடன் மேலே அமர்ந்தபடி மிச்ச நிகழ்வுகளை மெதுவாய் கண்டதுவே. காவலர்கள் விரைந்துவர காஞ்சன மாலை தனை கருநாக வளைக்குள்ளே கிடந்தது அவர் கண்களுக்கு பட்டதுவே. கையிலுள்ள வாளைக் கொண்டு கண்டிகையை அகற்ற நின்று கடுமுயற்சி எடுக்கையிலே எழுந்த நாகம் ஏறெனவே அவர்மீது சீறியதும் கையுறைந்த வாளுக்கு மெய் இரையாய் போனதுவே. மேலமர்ந்த காகமது தானடைந்த இன்பமதை யான் உரைத்த கதை மூலம் எல்லோரும் அறிந்திடுக. இதில் அரவம் போன்றோர்கள் அறம் கொன்றோராயிடுவர். காகம் போன்றோர்கள் கண்ணனவன் குஞ்செனவும் கண்டிகை வடிவெடுத்த கல்கியின் கமலமதை கண்திறந்தோர் அறிந்திடுவர். அனல்விழியன் அரசியாக அவன் கழுத்து மாலையென மணிவண்ணன் திருவாட சிவன் கொடுத்த வாளாக புடைசூழும் படையொடு புயல் வேந்தனெழும் நிகழ்வை விழல் விழியோரறியாது தழல் விழியோரறிந்திடுவார் .
🌸 அணங்குடை அன்பகம் கொண்டோரனைவரையும் அரவணைக்கும் அணங்கனவன் அறந்தாங்கும் அணங்குகட்கே ஆணையிடும் அரவேந்தி முன்மொழியும் ஆக்கமுறை மறவேள் மறுமையவன் அகவை மூவாறில் அண்டம் தனிலுறைந்தோர் மகிழும் மதியொன்றில் கடகக் கரும்பிறைதான் உதிக்கும் நடுஇரவில் கண்ணீர் வழிவகுத்து தாயின் திருமார்பை தழுவியணைத்தபடி அறுவர் அழுகுரலில் ஐயன் இணைந்தபடி கனிவின் வடிவான கரந்தை நிலை கொண்ட தாதை
வானுயர்வானவன் இறவா உறவுற்றோன் இதயப்பிணியேற்று இயங்க மறுத்தது தான் இறப்பின் காரணமாய் இமயோனுரைத்ததனை யானும் உரைக்கின்றேன்.
🌸 கொழிகனகக் கொற்றவப் பொநையை பெற்ற பெருமலைக்குள்ளே கிடந்து பொன்னியை மணந்த பூமுனி அமரக்கண்டே களிக்கின்ற கன்றாயானேன். கல்கியை காண கதிர்கண்ணுற்று காலம் சுமக்க ஞானமமைத்தேன். நாதா நீ ஏனென் நாபுலம்பவிட்டாய். போதாதாயென் பொழிப்புரையுனக்கு. பொன்னாம் எம்மையனை புடம்போட்டனுப்பு. பொறுமைக்கு எமக்கோரெல்லையுமுண்டு. மறுமை வேண்டாமெமக்கெம் மன்னனே வேண்டும்.
பாகம் 122
🌸 தெக்கணத் தென்முனையிற் தேமதுரனுதித்த திருவூருக்கருகினிலே பாமரர் பலருறைந்த பைம்பயிர் கதிர்காமம் சூழ் மூவருறைவிடம் தனில் முக்கண்ணன் வரமருளும் முல்லைமலர் மணம் கமழும் பெருமானவன் பிறப்பிடமருகே தரமாயமைந்த தடயம் ஒன்றை அருள்வாக்குரைத்து அடியேனிசைப்பேன்.
அது முக்கனிக்குள் வாராத முல்லைநிலக்கொடையான அக்கனியின் மூக்கடத்து அக்கினியில் வறுத்தெடுத்து உள்ளுறைந்த முத்துக்களை உயர்குடி மாந்தர்கட்கு ஊண் உணவமுதாக பெரும் பேழை தனில் கொட்டி நெடுநாவாய் தனிலேற்றி வையத்து நாட்டில் கொட்டி வருமானம் ஈட்டிடுவர்.
🌸 ஐயன் வெளிப்படும் முன்னம் அவன் அழகெழில் அருமனையருகே விழுதுகள் இறக்கா மரமாய் விறகிற்குதவும் வரமாய் அது பொழியும் பாலை பதனிடும் ஆலை அது வெறும் கோல் ஆயிரம் அவன் வீதிக்கு வடப்புறம் சிறு ஓடைக்கு மறுபுறம் தூரத்தில் இருப்பதை பாருக்கு சொல்ல யாருக்கும் இயலா ஞானத்தால் அளந்தேன் எல்லாமறிந்த எம்பெருமானே !
🌸 புலனடக்கியோனவன் தாதை போனதும் புலாலெடுக்கா கடும் சபதமெடுத்த பெருங்கருணை பெம்மானாகியே பொல்லா நட்பிற்கு வல்லிரையாகியே வருந்திய நாளதை யாமறியாமலிங்கே யாரறிவர். நல்லவன் போலொரு நயவஞ்சகனொருவன் சிலுவை தாங்கிய சிற்றின தோழனெம் சிவனே காக்கும் செம்புய நாதனை நம்பவைத்தே நடுகண்டமறுத்ததை நன்றாயுரைப்பேன் நாடேயறிய. அவனெம் அன்புநாதன் மேல் அளவு கடந்ததோர் நட்பு கொண்டவன் போலேயமைந்து நஞ்சொத்த பைம்பசு புலாலை நாருசிக்க நன்றாய் புகுத்தி போலியுணவாய் பூவென சமைத்ததை எம்மான் பால்மனமறியாது. பொன்னான உணவென்ற பொய்யுரையை நம்பியே புசிக்க பெற்றதும் ஐயன் அறியாததை அப்படியே வாங்கி அடிவயிற்றில் நிறைத்ததும் வாய்மை வென்றதால் வாந்தி எடுத்தும் வாராத புலாலவன் வால்லுடலுள் வந்து இரண்டறக் கலந்ததும் அரவம் அணிந்தவன் அவ்விடத்தை எடுத்தெம் வேந்தனை காத்த விதியையும் அறிவேன். அவ்வினையை விதைத்து சதியை அமைத்தோன் வீழ்வது மீளா நரகெனும் நமனுடையுலகென நன்றாயறிக.
🌸 மானூரழகன் மண்ணூருதிக்க பெண்ணூர் அண்டப் பிறப்பொன்றெடுக்குமுன் மன்னூர் உழன்றி மாயோன் உறைந்த மணவூர் தன்னில் சேயோனாகி சீர்பட வாழ்ந்து வானூர் விடுத்து விடையூர் பெற்று வடலூர் புகுந்து வரமாய் தளிர்த்து வாடிய கொடிக்காய் வாடிவருந்தி வாழ்வூர் தன்னை வளவூர் ஆக்கிய வள்ளல் பிரானின் உடலூர் வந்து உண்மையறிந்து உயிர்த்து நிற்பான். கருணை பொங்கும் கடலூருறைந்த கருமால் அவனென எவருமறியா உலகே இருக்க எம்விழி இங்கே உற்றுநோக்கும். ஊராரொன்றும் உதவாக் கரமாய் உதறிவிடவே உள்ளூர் வருந்தி காட்டூர் கடந்து கனவூர் கலைத்து பொருளூர் விடுத்து புகழூர் கெட்டு பொன்னூர் துறந்து புனலூரடக்கி பொறியூரொடுக்கி கண்ணூர் திறந்து கனலூர் ஒளிர அவனூர் அறிந்து அகிலம் ஆழ்வான். கீழோர் மேலோர் இல்லா உலகை வானோருறைந்த வாழ்வூராக்கி வேலன் ஆளும் வேளூரமைத்து வெற்றி முரசு கொட்டும் வீடென அவன் வேலூரமைப்பான். அங்கு இனியோரெல்லாம் இவனோர் இறையாய் புனிதர் பொன்னார் போற்ற மன்னுயிர் எல்லாம் எம்முயிர் என்ற மாண்புடை மறையை மேம்பட செய்தே எம்மான் துயில்வான். எமனே அழைத்தும் இதன்முன் துயிலான்.
🌸 பைம்பால் நிறமொப்பா பவள கண் நிற்ப இல்லத்தின் செல்லமென எலித்தோழன் இருந்ததனை யானறிவேனது எம்மையன் தன்னகவை ஈரேழில் அகமகிழ்ந்த காலமது. மற்றுமிரு மனமுருகும் மன்னனவன் கதை சொல்வேன். மரமுறைந்த கூடறிந்து மைனா ஒன்றெடுத்து மார்போ டதையணைத்து கலைமகளின் வடிவாக கண்டதற்கு பெயரிட்டு கனிவுடன் வளர்ப்பானது அன்பன் தோளில் பெருங்காலம் அமர்ந்தபடி வயல் வெளியில் பறந்தபடி வந்தமரும் பழையபடி. வந்ததோர் நோய் தாக்கி கண்டதோர் ஓரிரவில் அதுகூட இறந்ததனால் நொந்து போன என்றன் வேந்தன் மாமதுரை மீனாளின் மனமுறைந்த கிளிபோல நாதனவன் கண்டெடுத்த நல்முத்தாய்
அதுவமைய வளர்த்த அவ்வானுயிராம் வாஞ்சைமிகு பைங்கிளியை தோழனுக்கு தாரைவார்த்து தோயா கொடையளித்தும் அது கூண்டை விட்டு விடைபெற்று வில் விடுத்த அம்புபோல விண்ணோக்கி விரைந்ததாலே கொற்றவனே அதை நினைந்து குற்றுயிராய் மனமுடைந்தான்.
பாகம் 123
🌸 வேளை வரும் வெற்றிவரும் வில்வமாலை சூடிய நல் காளையூர்தி கொண்டதோர் கங்கைசூடி ஈன்றதொரு கந்த வேள் கைத்தரித்த கனகவேல் கண்டேன். அதை வாசமிகு வாழையூர் வந்து இங்கு வழியனுப்ப வானவரே வழிமொழிய யானவனை காட்சி காண யானை முகன் வாழ்த்துப்பாட கொற்றவையும் கூடப்பாட கொற்றவன் பெற்றவையில் கோமான்கள் கொலுவிருக்க உற்றதையும் கண்டேன். உலகநாதனருளாலே உய்ய பெரும் பேறு பெற்றேன்.
🌸 ஆரந்தாழ் அனந்தனோ ஆரம்பம் பயின்றதோர் ஆனந்த பயிலகம் கோமகன் கூடமோ கொற்றவர் பீடமோ அல்ல. அது அரசினன் அடுக்ககம் அல்லாத அடி சாளரம் ஒன்றுமே நில்லாத சத்திரம் போன்றதாய் ஓலைகள் வேய்ந்ததோர் ஒளிவிழும் நல்லகம். சந்தனம் தழுவியே பூமணம் சுமந்திடும் தென்றலின் உறவிடமாகுமே. வெறும் தூண்களால் நின்ற அத்தூயவன் கலையகம் கருங்கல் சாலையில் கண்கவர் சோலையுள் மானார் விளையுமுன் மண்வாவி வளைவு முன் நாடார் மத்தியில் கோடுடன் இணையுமே. பின்னாளது தன் பெருந்தலைதூக்கியே மாளிகை மிடுக்குடன் மனமற மிளிருமே. தேவருலா வரும் அத்தென்னக பொன்னிலம் முன்னம் நலமுடன் தெய்வத்தின் திருநிலத்துடன் தன் திருவுடல் இணைத்ததாய் பக்தி பழங்கதை உரைக்குமே. அது மாலவன் பிறவியாய் மரிக்கா துறவியாய் மாமுனி கையுறை கோடரி வீசியே கொழிக்குமோர் மலைநிலம். கொற்றவர் மூவரில் குறியம்பு வில்லுடன் கொடி கொண்டோனாண்டதாய் கொள்ளுமோர் நன்னிலம்.
🌸 குருதியுண்ணும் கொசுக்களையே கொன்றெடுத்து தகுதிகொள்ளும் எரும்பினத்துள் தரம் பிரித்து தீங்கிழைக்கா தேவகுண ஆனை முகன் பெயருடன் அடிதொடும் சூகைகட்கு ஐயனவன் அன்றாடம் உணவளிக்கும் அறம் மாறா செய்கை கண்டு அகம் மகிழ்ந்து உளம் நெகிழ்ந்தேன். சிவனதை தினம் கண்டு சிரிப்பதையும் உமையவள் அதை மெச்சி நகைப்பதையும் எவரிங்கு அறிந்திடுவர் இவ்வுலகில் ? எமையல்லால் யாரிதை புரிந்திடுவர்.
🌸 மன்நேயம் மாநேயம் மரநேய மாண்புடையோனெனக் காட்டும் புள்நேய பொன்மனத்தான் புகழ் நேயம் இல்லாதான் எம்ஆயன் பூவயலுள் புகுந்திருக்கும் புழுநேயம் கொள்வானே. செடி கொடிக்கும் சீர் வழங்கும் செம்மலவன் சாவில்லா விடிவெள்ளி ஆவானே. இவ்வுலகில் எவர் நேயம் கொண்டாரோ அவர்க்கே அவ்விண்நேயம் விளையக்கண்டேன். விண்ணிலவர் வெற்றியுடனுறையக்கண்டேன்.
🌸 பொன் குவித்த ஆணவத்தால் பொல்லாராகியே வன்பாவம் பல குவித்து வளமொடு திளைப்பரே. உடன் வஞ்சித்து வாழ்வமைத்து வறியோர் நலமனைத்தும் வழிமறித்து வரம்பின்றி கொழுப்பெடுத்து அகந்தையிலுறைவோனவன் ஆண்டவனேயானாலும் எம்மாமன்னன் வாளுக்கு மறுக்காது பதிலுரைக்கும் மறுமை நாள் நெருக்குவதும் மன்னிப்பு சுருங்குவதும் கனவல்ல நனவென்று கடன்பட்டு நவில்கின்றேன்.
🌸 தேடித்தேடி அழிப்பான். தீரர்களை இணைத்து தேவர்களை அழைத்து பாவிகளை ஒழிப்பான். மேதைகளின் திறனை மேன்மையாக மதித்து தீமைளை அறுத்து தெய்வநிலை வளர்ப்பான். தேவை யாவும் அறிந்து தேவனென பதிந்து யாவரையும் கனமாய் எவ்வுயிரும் தனதாய் மன்னவரும் சின்னவரும் மண்மீது சமமாய் நாடி வந்து நலம் புரிந்து நிலம் செழிக்க நித்தம் நீதி குவிப்பான். பேடிகளாய் மதம் பிடித்த பீடையினம் தலையெடுத்து கோடிகளாய் குருத்தாலும் கொலைக்கருவி குவிந்தாலுமதை வேரோடு அறுத்தெடுக்க வீரனவன் துணிவான். இது வெற்றுவாக்கு அல்ல விண்ணவரே உவந்து முழுவீச்சுடனே பணிந்து எந்தனுக்கு அளித்த இறைவாக்கெனவே இங்கு யானுரைத்தேன்.
🌸 கல்கி தான் கண்ணசைக்கும் கட்டளைக்கு கீழ் படிந்து கரம் வலுக்க நூறாயிரம்பேர் கழுத்து வெட்ட ஓராயிரம்பேரென கருமவீரர் மனமுழுக்க ஈரத்தோடு மண்சிவக்கவிடுவரே. பிணம் குவிக்கும் இவ்வாயிரம் பேர் பிறிதெவரும் இல்லை அவர் புடைசூழ மன்னனுடன் போர்படை திறனோடு சிரம் தரித்த பாகையோடு தீரர்களாய் தெரிவரே. அவர் கர்த்தரின் பிள்ளையில்லை. கண்ணபிரான் மக்களில்லை. திண்ணப்பன் தேவனுக்கு தெரிந்தவர்கள் எவருமில்லை. அவர் கடும் பாலை மணல்மேட்டில் அன்று கண்ணீரால் கதறியதோர் கைம்பெண்ணின் கைக்குழந்தை வழி வந்து கிளை விடுத்த கிள்ளை வழி நீதிமான்கள் செல்லும் வழி என்று யானும் சொல்ல வந்தே உள்ளங்களை வெல்ல வந்தேன்.
Comments
Post a Comment