பாகம் 13, 14 & 15

  பாகமே 13💗

சிற்றினம் ஒன்றுகூடி ஆண்டோம் யாம் என்றோர் இழிவரலாறு படைக்கும். பேரினம் பேருக்கு தான் இயங்குமே அன்றி பெரும் பதவியிழந்து நிற்பர். குற்றஞ்செய் குலத்தார் எல்லாம் கொழுத்தே திரிய அறங்காக்கும் அருளினமோ அரவமிலா அணைந்த விளக்காய் ஆதரிப்பாரின்றி அழுது நிற்கும். 


       புல்லர்க்கு புரியாத புதிர் ஆவான். பொய்சாட்சி மாந்தர்க்கு நெருப்பாவான். நல்லோர்கள் நாசுவைக்கு கரும்பாவான். நாடே வளம்பொங்க அருள் பொழிவான். பொல்லுலகில் தவமகற்றி இடரமைக்கும் புலாலூண் தனை தவிர்த்தோர் அருளாளர். அதன் புண்ணியங்கள் வீண்போகா தென்பதனை இவன் வந்திங்கே வாழ்த்துரைப்பான் பரம்பொருளே. பொன்னுலகில் புவிமாந்தர் புகும்காலம் தொலைவில்லை என்பதனை எம்போன்றோர் அருள்வாக்காய் பாடவந்தோம் இதற்கெமக்கருள் புரிந்திடுவாய் பரம்பொருளே.  

        அகத்துள் விடம் காத்தோர் அரிமாவால் நலம் காப்போமென   செப்பி மதுபாயும் சூதுடன் மாதின்ப குழுவைத்தே நம் கேடில் ஐயனை அரிந்து சென்னீர் சுவைக்க கொதித்தே அலைவாரே. பின் கொற்றவன் காவலுக்கு கொடுங்குமரி கொலுவிருப்பதனையறிந்து கொலை நடுங்கி போவாரே.


      இவ் ஆட்டுடை ஓநாய்கள் நாட்டிலே நடமாட  இவன் பாட்டை பாத்தே பரிதாபமாய் தினம் நடப்பான். இத்தீயோர் இனி படும் பாட்டை  நன்கறிந்தே நாபகர்ந்தோம் பரம்பொருளே. 

           ஏவுவோராயிரம் எழுந்தாலும் ஏவப்படுமம்பும் துளையிடாது போகும் இம்மறைவிலா மன்னனன்பே உறைந்த திருமார்பில் . மண்காக்கும் மென்கொடியாளவள் இம்மைந்தனை காத்தருள தென்முனைக்குடிகொள் நற்றாயாய் யாம் பெற்றோம் என்பதனை எமைப்போன்றோர் அறியாமால் யாரறிவார் பரம்பொருளே. 

            பொல்வழி புலனின்ப தீநெறியர் புலாலுண்ணும் குருதிவெறியர் பெண்பாவம் நாடிக் குவித்த கொடும்பாவியர் எவருமே இனி உய்ய வழியின்றி மண்ணில் புதைந்து மறுமையிலா நரகிற் புகுவரே.

பாகம் 14 💗

தீநெறியோரின் திமிரடங்க நற்றமிழ் பரப்பின் தலைப்பதியை பெருநீர் தாலாட்ட கண்ணுறங்கும் காலமொன்று கணப்பொழுதில் நேருமன்றோ.  இப்பொல்லாருலவுமிடம் தன்னில் சிங்கஇனமானோனை சிரசரிந்து கொல்ல சிற்றினத்தார் பலரும் சிறை பிடிக்க முயன்றதிதை அறிந்த நல்லாம்பிகையோ இவனடி தொடர்ந்ததாலே இன்னுயிர் பெற்றே உளம் நலமுற்றானே. 

    நம்பியே இந்நாயகியின் நல்லடிபணிந்தாரை நான்முகி தான் நட்டாற்றில் விடுவாளோ. தெய்வாம்பிகை நல்லோரழையாமலே நலம்காக்க வருவாளே. துர்மரணத்திற்கிசையாளே.

       இங்கிவர்களிவனுக்கிழைத்த கொடுந்தீங்கால் இன்னிலமெல்லாம் விழிநீர் கொட்டுவதுறுதியென ஆணையிட்டு அன்றேச்சொன்னேன். இவ்வின்முகத்தான் வரும் வரை இந்நிலம் செந்நீர் வடிக்குமே என்று சொன்னேனேகேளாய் நீயும்.

  நானே இவனென நாலாபுறமும் மூடர்கள் புறப்படுவார். நன்று செய்வேன் என்றே சொல்லி நாவினில் சுகம் தருவார் . பொன்னென மின்னும் மின்மினிப்பூச்சிகள் பொன்னாய் விலைபடுமோ.  அகிலமாள அருள்பட்ட இவ்வானுறை அய்யனுக்கிணையாய் எவரும்  இல்லையன்றோ. இவன் குருதி குடித்திட துணிந்தோரும் இவன் கழுத்தரிந்திட அலைந்தோரும் இவனுடலை எரித்தெறிந்திட எழுந்தோரனைவருமிவன் கூர்வாளால் தலையிழப்பரென்பதையும் தீஞ்செயலால் வாழ்விழப்பரென்பதையும் யாம் அறிவோம் பரம்பொருளே.    

பாகம் 15💗.

இவன் சுற்றத்தாருமுடன் உயிராய் சுற்றிய தோழனும் நன்றி கொன்றாரென்பதை கலிமுற்றலடையாளமாய் கண்டேன் பரம்பொருளே. நம்பினோரெல்லாம் நஞ்சுடையோர் என்பதறிந்தே நெஞ்சுடைந்தான் மென்கல்கி. சுற்றம் சுழ்ந்தும் சுகம் இழந்த சிறையனாய் உற்றாருறவுப்பயனிழந்த பறவைபோல் நிற்கதியாய் நடுநிசியில் மஞ்சம் துறந்தே மாவீரபெருமான் புறப்படுவான் என்பதை யாம் அறிவோம் பரம்பொருளே.

            பேய்க்காற்று அடை மழையை பெயர்த்தெடுக்கும் குருநாளின் நடுநிசியில் பேரருள் வந்துடனே பாய் துறந்து நடப்பானாம் பரமபதம் தேடியே இவன் வாய் மொழிந்து படைத்தோனை அழைப்பானாம். இவன் கூக்குரலுக்குருகி   தேவர்களும் தேவியரும் இவனுக்கு திருவரம் நல்கிடவே கீழிறங்கி வருவராமென்பதை மண்ணவர் அறியாரே. மற்றுயிர் அறியுமே பரம்பொருளே.

        பாம்பணியும் பரமன் மீதாணையிட்டோம். பார்த்திபன் மருகன் அம்பிகைமீதுமிதை ஆணையிட்டணிபணிந்தோம். இவனுக்கிணையாய் இறையருள் உள்ளோரெல்லாம் இவனின் சமகாலம் வந்துதிப்பதை யாமே கண்டோம். இவனே தானென்று உள்ளுவராயிரமானாலும் ஒருவரும் இவனுக்கிணையாகாரே. இவன் கீழ்பணிந்து இன்செயலாற்ற  இங்குதித்தோரென்றறியா மாந்தராய் கண்டேன்.

      கொடும் பிணி பேரிடரெதற்குமிவனே தீர்வாய் வருவான். நடுங்கும் மாந்தரின் நாசிக்கிடர் தர இழுத்திட இயலா உயிர்காற்றுறைகளை சிதைத்திடும் நோயொன்று வையத்துள் வில்தெறிஅம்பு போல் எழுந்து புதைத்திடும் மானிடப்பூக்களின் பூதவுடலைலை கண்டு புவியோரனைவரும் நடுங்கியே ஒடுங்குவர். நலம் சேர்க்க ஆரத்தழுவிட இவன் வருவானவதாரமெடுத்தே மண்ணில் நல்லன்னைபோல்   காப்பானிவன் மீண்டும். ஐயமில்லை ஆறிவாய் நீயும். இனி  நல்லோரை காத்து நிற்கும் நல் வாழ்வு பூத்து நிற்கும். பாரில் பஞ்சம் பசி போக்கி  செழுநிலவரம் தர வந்த தேவன் இவனன்றி வேறொருவர் இல்லையன்றோ. அத்துடன் நீதிமானாய் வெகுண்டெழுந்து நமை நிம்மதியாய் துயிலவைப்பான். தரணியில் தயை தொலைந்து ஊரணிபோல் பெரும்பாவம் பெருகிடும் பொழுதெலாம் நன்னெறி புகட்டி நலம் தர நானே வருவேனென்று அச்சுதனன்றே சொன்னான். அதை பலர் மறந்ததனால் எங்குலக்கொளுந்தே  அங்குலங்கூட நகர இயலா இடர் என்றென்றறிவாய் நீயும். 

Comments

Popular posts from this blog

பாகம் 124, 125 & 126ஆருக்குமஞ்சானவன் ஆல்லிப்பெருவிரல் வலதெம் அன்னை நிலம் நோக்க அகத்தலம் நோக்கின் முன்னழகு முகத்தோற்றத்தொடு முறக்காதுடன் இருகோடுடை எழில் களபமங்கு செங்குத்து பாகையில் சரிபாதி சாய்வினில் அங்குற்று அடியேன் கண்பறிக்குமே.

பாகம் 118, 119 & 120 ஒளிரும் கல்கி கனலென காணா அறம் பாராட்டி கண்ணன் முன்னம் காலூன்றிய கைக்கோடரி காவலன் தோன்றி கடை வரை கரம் தந்து செங்கோல் ஏற்க காரணமாவான் கடுந்தவம் பூண்டு. நீணிலம் காக்க நெஞ்சம் மிஞ்சும் நன்னெறியோடு நிலையா உலகில் நிலைக்கும் நீதி.

பாகம் 133 மலைவாழை மணக்கும் மணவீடே சிறக்கும் மகிழ்மண் செழிக்கும் கதலி கண் சிமிட்டி கரை எல்லாம் சிரிக்கும் நுரை ததும்ப குடகுக் குய்யமீன்ற புனல் குழலி புறப்பட்டு பொற்புடை சிலம்புச் செல்வி பூத்த புகாரை தொடும் இடையில் பொங்கும் வளம் கொழித்து புன்னகைக்கும் பழம் பதிக்குள் தன் பொற்கரத்தால் அயலார் அகம் குளிர அன்னமூட்டி அன்றாடம் குடி நகர்த்தும் அருள் அம்பையின் கொற்றவன் வீழ்ந்தும் குணம் வீழாது கொலுவுற்று கொள்கையால் தனிநின்று இருகண் மணிகளது இடர் நீக்கி இருள் தீண்டா திருக்கரம் தழுவும் சுடரொளியை வாதை தரும் வல்வினை வந்தணைத்திடாது ஈரிமையாய் அணைத்து இதயம் ஏற்கா இழியோர் நடுவினிலே பரிதியை ஈன்ற பைம்பொன்னன்னைக்கு இளமலர் குடத்துள் இட்ட விளக்காகி இறையருள் பெற்று இல்லறம் மலர்ந்திடுமே.