பாகம் 19, 20 & 21
பாகம் 19💗
அரவரசன் குடிகொள்ளும் நகரிலே தீயோரனைவரும் முதலில் அழிவரே. புரவரசன் வெகுண்டெழுந்து அரிவானே. அறமழித்தோரனைவரும் ஒழிவரே. கொடியோரழிவது வடமுனை வரை நீளுமே. இக்கயவர்களுய்ய காவல் புரிந்த பேய்களுமுடனழியுமே.
தீயோர் சூழ் தென்முனைத் தன்னில் திரவக் குருதி ஓடுமே. அத்திரவக்குருதிக்குரியவர் கொடுந் தீயோரென்பதை அறிகவே. இவன் வாளே எழுந்து வழக்குகள் தீர்ந்து வானோர் புனிதமடையுமே. மேலோர் கீழோர் எல்லாம் தத்தம் பண்பினை ஒத்து அமையுமே. மெய்யைக் கொன்று மேனி வளர்த்திடும் மேலோரினி அழிவரே. நன்னெறிக்கீழோர் நலமுடன் வளம்பல பெறுவரே. இனி விண்ணவர் வளங்களை மண்ணவர் பெறுவது வேடிக்கை அல்ல உண்மையே. மண்ணவர் பெற்றிடும் மாபெரும் பாக்கியம் இந்த விண்ணவன் மண்ணுக்கு வந்ததே. இவன் விண்ணவ மைந்தனும் மண்ணவர் மன்னனுமென்பதை அறிகவே.
பெருங்கடலொத்தப் பிறவியை நீந்திக்கடந்திடக் கதறுமுயிர்களை காத்திட வெண்புரவிக்காலுடை கலியபெருமானிறங்கி வந்தருள்வானென்பதை கண்ணிலாரறியாது போனாலும் இம்மண்ணில் எண்ணிலா உயிருறைந்தானை யாமறிவோம் பரம்பொருளே.
வெண்டலை அணிந்த விரிசடையோனருளீட்டி விண்ணவர் துதிக்கும் மண்ணளந்த மாயோனுமிவனே. தாதைக்கறிவுரை மொழிந்தொரு தலைமேதையாய் வந்தவனுமிவனே. கொடு
வாதையினால் நொந்து நல்வாழ்வழிந்த மாந்தர்க்கு சோகமகற்றி சூலெறிந்து வேதையோட்டி வரகனியூட்ட வந்த பூங்கோதைக்காதலனிவனுக்கு முலையமுதூட்டாதிருந்தாலும் முக்கடல் சூழ் மூக்குத்தியம்மை அகனமர்ந்து மகவென தன் திருமார்பணைத்தருளியதை பாரறிய பகர்ந்தேனே பரம்பொருளே.
பாகம் 20💗
விஞ்ஞானத் துணையோடு மெய்ஞானம் ஒன்றே வெல்லும் என்ற விந்தையொன்று விரைவில் வெளித்தோன்றும். இவனிமிர்ந்தால் அகிலமெல்லாம் வளம் கொழிக்கும். இவனடந்தால் நடந்த இடம் பூப்பூக்கும். இவனோக்கின் நோயுற்ற மாந்தரெல்லாம் நொடிப்பொழுதிற் நலம் காண்பர். பாய் தனில் படுத்துறங்கி பாடை காக்கும் பிணம் கூட வாய்சிரித்து எழுந்திட்டே வரம் பெற்றே வலுப்பெறுமே.
கீரிக்கு பாம்பு பகை கிளிக்கோ கொடும்பூனை பகை
மானுக்கு சிறுத்தை பகை மையல் தரும் மயிலுக்கோ மாரகனாம் வேடன் கறை
மாண்புக்கு கர்வம் குறை
மனிதர்க்கு தன்னலம் பகை என்றே
புத்திமதி சொல்ல புறப்பட்டு வருவானிதை புரிந்து கொள் மானிடமே. நல்மாந்தருய்ய அருள்வழியைச் சொல்லி ஓருலகாய் கொடி உயர்த்த உதிபான் இவ்வுத்தமனே. இம்மண் மணக்கும் உண்மையினை வெகுவில் மாநிலமே உணருனென்பதனை யாமறியோம் பரம்பொருளே.
பாகம் 21💗
வானாசான் வரவறிந்தே இவ்வல்லாசான் தனைச் சூழ்ந்த அறம் புரண்டார் தூண்டுதலால் அருள் வாக்கு மாந்ததரெலாம் பிழையுற்று முரண்பட்டே தலையாட்டி பாட்டிசைப்பர். இதை தவமிருப்போர் அறிவாரே. தறுதலைகள் அறியாரே.
ஈசனீந்த நெறியாசான் இவனென்று அறிந்துடனே இவனல்ல அவனென்றும் இத்தருணமில்லதுயென்றும் நெஞ்சாரப்பொய்யுரைத்து பொருளீட்டும் ஆருயடர்கள் மறைத்துடனே மறுப்பதனை மறக்க என்னால் இயலாது மாசிலா பரம்பொருளே.
நெறியாசானெழுந்து வந்து நீணிலத்தை ஒரு கொடி கீழ் அடி கொணரும் நன்னாள் மலர்ந்திடாமல் இடைமறிக்க
கொடுங்கரம் இடும் சூழ்ச்சி என்றென்றும் வென்றிடுமோ. இழியோர் கை மேலோங்கி என்றைக்கும் நின்றிடுமோ. எமைப்போன்றே வையத்து பேதைகளும் நம்பியே நலம் காண நின்னருள் வேண்டுவேனே நிலைகொள் பரம்பொருளே.
விதி மாற்றிப் போர் முடித்த வில்லாளன் தேரோட்டி இன்று மண்ணீதி மாற்றிடத்தான் வந்துதித்தான் என்பதனை மன்னவர்களறிந்துடனே அதை மறைக்கும் பாவம் செய்ததனை எம்மவர்கள் நன்கறிவார் என்பதையும் நீயறிவாய்
ஈடிலா பரம்பொருளே. தீபத்தை மறைக்க யார் திரைச்சீலை யிட்டாலுமது தீக்கிரையாவது திண்ணமே நின் திருவருள் காத்தெமை கரைசேர்ப்பதுண்மையே.
Comments
Post a Comment