பாகம் 22, 23 & 24

 பாகம் 22💗

வாழ்வளிக்கும் வில்லேருழவரை வேதனையுள் விடுவரே. சூதுள சொல்லேருழவர்கள் சூட்சியாய் பாழ்நிதி குவிப்பரே. நீதி தோவர்கள் நிதமும் கூவி விற்பது நெறிபிழை குஞ்சையே. விற்பது நியாய விலையென நீசர்கள் திணிப்பரே.       

         கேடுடை கும்பலின் மாந்தர்கள் வருவதால் உருக்கும் நெருப்பு அய்யனை உறக்க வேண்டி முள்ளரண் கட்டி தடுத்திட இறைப்பது பொற்பல கோடியே. கோடிகள் கொட்டிக் கொடுப்பதால் எம் கோமகன் தலைதனை கொய்திட இயலுமோ. கேடில் தலைவனை சுற்றிய பேடிகள் அழிவதும் எரிவதும் உறுதியே. அவர்களேவிய பேய்களவரது எச்சத்தை அழிப்பது திண்ணமே. பாயாக்கி படுத்தவன் பாரினை பாழாக்க நாய்களுக்கடுக்குமோ. எம் பரமனருள் பொழி தேவனை இழிநெறியர் அண்டிட முடியுமோ.

          பேய்நிதி இறைத்தவர் இறுதியில் பெருந்தழலுக்குள் புகுவதுறுதியே என்பதை அருந்தவம் பூண்டு நானறிந்திட்டேன். அய்யனே எமைகாக்கும் மெய்யனுன் அவதாரம் புரிந்திட்டேன். உன்னகிலமே உன்னடித் தொழுதிட ஆவலாய் ஏங்குதே தேவனே.

          ஐந்திணை நிலத்திற்கிவன் அருங் காவல் தெய்வமுமாய் எழுந்தறத்திற்கேவல் புரிவானென்பதை பைங்கிளியே பாடிடுவாய். இப்பச்சை மெய்யனன்று பாற்கடலை கடைந்தமுதெடுக்க பச்சைப் பொய்யுரைத் தரக்கரை வீழ்த்திய விளையாட்டை போலிவன் மீண்டும் களியாட்டமாட வந்தானென்பதனை விழிவைத்தே யாமவன் முகம் பார்க்கும் வரம் வேண்டுவேன் பரம்பொருளே. 



பாகம் 23💗




ஒப்பரிய தேவனிவன் உதய நாளை ஒப்புவிப்பேன் உத்தமனே கேளாய். ஐந்தடுத்து சுழியம் வந்தே ஆறை ஐந்தரவணைக்கும் நாலிலக்கக் கலியாண்டில் நமக்காறுதலைத் தரவே மாதம் மறைந்தொழுகிடுமே வருமிரு சீர்சேரின். இவ்வரிமா சிவனருள் பெற்றுதித்திடும் வளர்மதியாம் கரும்பிறை முடிந்த பதினொன்றாம் நாளில்  தைத்தொட்ட கும்பத்திங்களொளி காலைப்பொழுது ஆட்டின் உயிராகி ஆடவை உடலெடுத்த மூன்றாம் பாத கழையொலி தேனமுதால் கன்னியரை கவர்திழுத்த காமுகன் தமையன் முன்னவதாரமாய் பாதம்பதித்து இவ்வகிலத்திலவன் தன்னுயிர் மனையை கவர்ந்த தமிழீழத்திழிமகன்  கொடும்பிடி மீட்கவே வில்லால் அரக்கனை மாய்த்த அண்ணலின் தாரகையிலிவன் பூமிக்குள் பூப்பானென்பதனை கண்ணாரக் காண்டேனிதை மண்டுகளுமறியாரே பெண்டுகளுமறியாரே நின் மலரடி பணிந்தோர்க்கல்லாலிது எவர்க்கும் புரியாதே பரம்பொருளே.




    இனியும் விளங்கச் சொல்லியே விளக்குவேன் செல்வமே. பன்னிரு கரங்களில் புதனோங்கிய இருபாலருடலில் செம்மீன் தயவில் சீறும் மறிகீழ் பிறப்பெடுத்து நம் பெருங்கடன் தீர்ப்பானென்பதனை பேதைகளும் அறியாரே மேதைகளுமறியாரே. நின்னாமம் தனை நிசியிலும் நித்திரையிலும் நீக்கமற்றோயாது ஓதுவார்க்கன்றி ஒருநாளும் உய்வில்லை பரம்பொருளே.



          இவன் தாரகை தலைவனோ கரிகாலந்தணன். மேதகுமிருகமோ பாயும் புரவியாம் கயவர்க்கு வளையாத கழைகொம்பாயினன். நன்நெறி பகுக்கும் நுண்ணறிவு அன்னமென இவன் சிறப்பை யாம் பகர்ந்தோம் எம் பிறப்பறுக்கும் பரம்பொருளே. 

           நீளாயுளொடு நறுமேனியெடுத்த தேவரினத்தியல்பறிந்தேன். இவ்வய்யன் ஓரைக்கு பன்னிரண்டாம் குடிலில் குருவுடன் குருடனிணைந்ததுபோல் பதினொன்றில் பரிதியுடன் பகைச் சனிசேர்ந்து அங்காரகனை அரவணைத்த ஆணவம் கண்டேன். பத்தில் சொத்தாய் மேதைப்புலவன் மிளிரக் கண்டேன். ஒன்பதில் ஒண்டியாய் செங்கதிர் பகைவன் செவ்வரவும் மூன்றாமுறைவிடத்தே கருநாகன் புகுந்தாலுமங்கே மதியுமிருப்பானென்பதனை மதியுடையோர் அறியாரே. முக்கண் விதியுடையோரறிவாரே.

      பாகம் 24💗

ஒட்டிய வயிற்றுடன் கட்டிய கந்தலுமாய் கண்ணில் பேரொளி பொங்க முட்டிய மோகத்தை கொன்று மூலாதாரம்தனைத் தட்டியெழுப்ப முக்கண்முதல்வனை முன்நெஞ்சில் நிறுத்தி பட்டி தொட்டியெல்லாம் பரதேசி போல் படுத்துறங்கி பாழ்பிச்சை எச்சிலுயுண்டு பேரிழிவுப் பெரும் பயணம் கொண்டு கலிக்கொல்ல வருவானென் கண்ணாளனென்று கனாக்கண்டேன் பரம்பொருளே . பொருள் குவிக்கும் திறனிருந்தும் புவி காக்க அறன்  குவிக்கும் அருந்நோக்கில் இவ்வதாரவுருவெடுத்தான் இப்புவிதானம் பெற்றவனோ. பொன்மகள் படுக்கை வேண்டாம். பூந்தளிர் மஞ்சம் வேண்டாம். மன்னுயிர் மையலுறும் சுகமறவே வேண்டாமென பூதேவியிட்டு வைத்த புல்தரைப் படுக்கையொன்றே போதுமென்று நித்திரையின்றி நிலம் தழுவிப் புரள்வானிப்பாலாழி பஞ்சணைக்காரன். பக்கத்தில் தேவியில்லை. பல்லக்கு பணிவிடைக்கெவருமில்லை. பரிதாபமாய் படுத்துறங்க தேவர்களும் வெந்து விழிநீர் வடிப்பாரே. தீதறியா எம்மான் தீதினை சங்கறுப்பான் என்பதனை யாமறிவோம் பரன்பொருளே.

        மலர்களின் மொழியெல்லாம் மாண்புடையோன் நீயே வர வேண்டுமென

தமிழிசைக் குயில்களெல்லாம் தரணியாழ நீயே வரவேண்டுமென

தேன் சிந்தும் மலர்கள் எல்லாம் எம் தேவமைந்தன் நீயே வர வேண்டுமென வாய்விட்டு அழுவதனால்

நீதிகொல் பாதகரை நீ பொலி போட வா வா என்றே மலர்தூவி எழுப்பிடுமே தென்றல் முதல் வாடை வரை.

எம்முயிர்த் தமிழுயிர் பெறவே செவ்வரமளிப்பாய் இச்சேயோன் சீறி எழ. வீணாகா விடியற்காலை எமக்கமைப்பாய் என நம்பியே நாப்புலர நவின்றேனே பரம்பொருளே.

Comments

Popular posts from this blog

பாகம் 124, 125 & 126ஆருக்குமஞ்சானவன் ஆல்லிப்பெருவிரல் வலதெம் அன்னை நிலம் நோக்க அகத்தலம் நோக்கின் முன்னழகு முகத்தோற்றத்தொடு முறக்காதுடன் இருகோடுடை எழில் களபமங்கு செங்குத்து பாகையில் சரிபாதி சாய்வினில் அங்குற்று அடியேன் கண்பறிக்குமே.

பாகம் 118, 119 & 120 ஒளிரும் கல்கி கனலென காணா அறம் பாராட்டி கண்ணன் முன்னம் காலூன்றிய கைக்கோடரி காவலன் தோன்றி கடை வரை கரம் தந்து செங்கோல் ஏற்க காரணமாவான் கடுந்தவம் பூண்டு. நீணிலம் காக்க நெஞ்சம் மிஞ்சும் நன்னெறியோடு நிலையா உலகில் நிலைக்கும் நீதி.

பாகம் 133 மலைவாழை மணக்கும் மணவீடே சிறக்கும் மகிழ்மண் செழிக்கும் கதலி கண் சிமிட்டி கரை எல்லாம் சிரிக்கும் நுரை ததும்ப குடகுக் குய்யமீன்ற புனல் குழலி புறப்பட்டு பொற்புடை சிலம்புச் செல்வி பூத்த புகாரை தொடும் இடையில் பொங்கும் வளம் கொழித்து புன்னகைக்கும் பழம் பதிக்குள் தன் பொற்கரத்தால் அயலார் அகம் குளிர அன்னமூட்டி அன்றாடம் குடி நகர்த்தும் அருள் அம்பையின் கொற்றவன் வீழ்ந்தும் குணம் வீழாது கொலுவுற்று கொள்கையால் தனிநின்று இருகண் மணிகளது இடர் நீக்கி இருள் தீண்டா திருக்கரம் தழுவும் சுடரொளியை வாதை தரும் வல்வினை வந்தணைத்திடாது ஈரிமையாய் அணைத்து இதயம் ஏற்கா இழியோர் நடுவினிலே பரிதியை ஈன்ற பைம்பொன்னன்னைக்கு இளமலர் குடத்துள் இட்ட விளக்காகி இறையருள் பெற்று இல்லறம் மலர்ந்திடுமே.