பாகம் 25, 26, 27
பாகம் 25💗
பாருக்கே விளக்கேற்ற பரந்தாமனிறங்கிய ஊருக்குள் இவனுறையும் மனைக்கருகே பனைகுன்றிற்கப்பால் பாம்பூரும் நதிநீரமுதுண்டு மிதந்ததுண்டே நம்மையன். பக்கமெல்லாம் அல்லியாம்பல் மரை பூக்கும் பொய்கைக் கரையோரம் மெய்மறக்க கள்ளுண்டோர் நடுவினிலே ஈசனெனும் தெள்ளுண்ட பாலனாய் பொலிந்தான் ஐயன். ஆங்கே ஊழையிட்டோடி மறையும் விலங்குறை குமரனிலா குன்றினடியில் அறுபடையிலொரு படை ஆண்டி அப்பனுக்குக்கடிமையப்பன் மைந்தனாய் சீருறு ஐவகை பொய்கை சூழ் ஊரில் பூப்பானிவன். நால்வகை மாந்தர் வாழ் நல்லூரில் நூல்பல கற்றோர்ச்சூழ திருக்கண்ணன் எல்லைக்கோட்டிற்குள் மேற்றிசையில் இருபுரமும் ஒன்றாய் கொண்ட மேல்புரத்தில் வாணுறை மூலவர் மூவர் நாமப் பதியில் முளைத்து முத்தமிழ் காப்பானிவன் என்றும் இம்மேதினிக்கருள் சேர்ப்பான் என்றும் மண்பதிக்கும் முன்னரே அவ்விண்பதித்தோர் விதித்ததனை எம் கண்பகுத்தறிந்ததற்கு கருணை செய்வாய் பரம்பொருளே.
பாகம் 26 💗
ஈசன் கண் முத்துமாலைகள் மெய்கழுத்தெங்குமாட வேடமிடும் பொய்யர் பலரை நட்பாய் பெற்றும் ஆசான் கிடையா அருஞ்சீடனாய் நாயாயலைந்தே நாட்கள் விரையமாகி ஒண்டி நெடுமரமாய் ஓட்டாண்டி கோலம் பூண்டு நிதானமின்றி நொந்தான் எம்மாசான். நற்குருவடி தேடி நீசரிடம் புகுந்தும் நற்குரு வாய்க்க வழியின்றி நெடுங்காட்டில் கால் தளரா கடும் பயணப்பட்டு இறுதியிலோரருங்கொடையாய் சற்குரு வாய்க்கப்பெற்றான். கண்டான் குருவை கல்கி கண்டதும் கமலம் பொற்பாதம் வீழ்ந்து கண்ணீரால் கழுவியதால் ழுடங்கிய மூன்றாம் விழியொளி பாய பெற்றே பொலிந்தான். பின்னர் நயனதீட்சை கொண்டையன் குருவடி தொட்டு முழு தீட்சை முற்றுப்பெற்று மூலாதார அரவெழுப்பி அரவமிலா தவம் பூண்டதை அடியோனும் கண்டேன் பரம்பொருளே.
நெற்றிக்கண்ணற்றோர் குருவாய் நிறைந்த நீணிலத்தில் சக்தி கண் திறந்ததோர் தவ ஞானி குருவாய் வாய்த்தைய்யன் தழல்கண்ணை திறந்திட்டு அஞ்ஞானமறுத்தெடுத்து அழுக்கனைத்தும் எரித்து கறையிலா காஞ்சனமாய் வளங்கொழிக்க வாழ்த்திட்ட அக்குருவை யாமும் அகக்கண்ணால் கண்டோமவர் முன்னவதாரமாய் தோன்றி முலைப்பாலூட்டிய அன்னை தலையை அரிந்ததால் அருளீட்ட வேண்டி இல்லறம் துறந்து நல்லறம் நாடிய கையில் கோடரியை கண்ணாரக்கண்டேனே எம்மடையாளமாய் திகழ்ந்தெமையாளும் பரம்பொருளே.
பாகம் 27 💗
நல்லோர்கள் பொழிகின்ற நஞ்சற்ற அன்பினில் கரைந்தே நல்லய்யன் முடங்குவானே. தீயார்கள் தருகின்ற இன்னலையும் தாங்க எம் தேவய்யன்
இறங்கினானே. விண்ணவப் பெருமிதமேயில்லாமல் மாசற்ற மண்ணோரடிவருடுவானே.
கண்ணற்ற மாந்தருக்கு கண்ணொளியை தந்து கருத்தற்ற மூடனுக்கு கருத்தனைத்தும் தருவான். உண்ணும் உணவுக்குள் உறைகின்ற உயிரென மறைவான். தண்ணீரை தந்து மறுவாழ்வு தருவான். நன்னீரும் அவனே மென்னீரும் அவனே. நீதியின் பாதையை காட்டி நமை அடையாளம் கண்டு அருள் மழை பொழிவானே. எம்மையன் மறுவாழ்வு தருவானே. முற்பாதியெல்லாம் முட்பாதையாக பிற்பாதியெல்லாம் நற்கதி புலருமென நம்பி நவின்றேனே நலனுறை பரம்பொருளே.
நாபிக் கமல நாதன் பரமபதமிணைந்தோரெல்லாம் நல்லுலகில் நன்னெறியாளராய் வாழ்ந்தே பணிந்தோரென்பதை யாமறிவோம் பரம்பொருளே. பாதிமேனியை பார்வதிக்கீந்த நல்லீசன் பொற்பாதம் பணிந்தவரெல்லாம் முக்தியடைவாரென யாமறிவோம் பரம்பொருளே.
எவ்வுயிர்க்கும் தன்னுள்ளம் உருகிடும் நிலை கொண்டு ஊன் மறுத்து
உயிரனைத்தையும் ஒன்றாய் கண்டோரையெல்லாம் அவ்வுலகரவணைக்குமென்ற எம்மருளாளர் வாக்கு தனை நெஞ்சில் நிறுத்தி நீடுலகில் வஞ்சமில்லா நெறியொன்று நிறைவேறும் நாள் வருமே....
Comments
Post a Comment